இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்..!

bharathiraja vairamuthu
bharathiraja vairamuthusource:vairamuthu twitter
Published on

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து கடந்த மாதம் சென்னை திரும்பிய அவர், கடந்த மூன்று நாள்களாக சிகிச்சையில் உள்ளார்.

தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், “தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது; வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்,” என்று குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இயக்குநர் இமயம்

பாரதிராஜா

உடல்நலம் தேறிவருகிறார்

நோய்த் தொற்றிலிருந்து

மெல்ல மெல்ல

விடுபட்டுக் கொண்டிருக்கிறார்

உடைந்த சொற்களாயினும்

உரக்கப்பேச ஆசைப்படுகிறார்

ஓர் உயிர் துடிக்கும்

உடல்மொழியைப் பார்த்தேன்

என் வலக்கரத்தைக்

கெட்டியாகப் பற்றிக்கொண்டார்

அந்தப் ஸ்பரிசத்தில்

எத்துணை செய்திகள்!

எத்துணை உணர்வுகள்!

45 ஆண்டு காலக்

கலைச் சரித்திரம்

எங்கள்

உள்ளங் கைகளுக்கிடையே

நசுங்கியது

நான் மட்டுமா?

கருவேலங்காட்டுக்

கரிச்சான்களும்

அவர் நலம் கேட்குமே!

எங்கள் கிராமத்துச்

சூரிய காந்திப் பூக்களும்

அவர் சுகம் கேட்குமே!

வைகை அலைகள்

வா வா சொல்லுமே!

மகா கலைஞனே!

விரைவில் மீண்டு வா

‘என் இனிய தமிழ் மக்களே’

என்ற உன் கரகரப்பான

காட்டுக் குரலுக்காக

‘ஆஸ்பத்திரி’க்கு வெளியே

அலைபாய்கிறது காற்று

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com