இன்னும் சில நாட்களில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், இரு மாபெரும் நடிகர்களான விஜய், அஜித் நடித்துள்ள 'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படம் வருகின்ற 11ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
பொதுவாகவே டாப் அந்தஸ்தில் இருக்கும் நடிகர்களின் படங்கள் என்றாலே, முதல் நாளே அந்தத் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இதனால் அப்படத்திற்கான டிக்கெட்களும் சில நாட்களுக்கு முன்பே ப்ரீ புக்கிங்கிற்கு வந்துவிடும்.
இந்நிலையில், 'வாரிசு', 'துணிவு' திரைப்படத்திற்கான ப்ரீ புக்கிங் கடந்த சனிக்கிழமையே துவங்கிவிட்டது. அதேபோல் சென்னையிலும் நேற்று முதலே பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங்கும் துவக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து டிக்கெட்களின் விலையும் ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. சில திரையரங்குகளில் 'வாரிசு', 'துணிவு' இரண்டு படங்களுக்கான டிக்கெட் விலை 2000 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தியேட்டருக்குச் சென்ற ரசிகர்கள் பலரும் கடுப்பாகி உள்ளனர்.
இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.