துடுக்கும் மிடுக்கும் துள்ளலும் நிறைந்த வசுந்தரா!

துடுக்கும் மிடுக்கும் துள்ளலும் நிறைந்த வசுந்தரா!

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தித் தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா.

தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்றவர் வசுந்தரா.

அந்த வகையில் கண்ணே கலைமானே, பக்ரீத் ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

அடுத்தடுத்த தனது படங்கள் குறித்தும், வெப்சீரிஸ் குறித்தும் பகிர்ந்து கொண்டார் வசுந்தரா, “கண்ணை நம்பாதே' உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த் என மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் எனக்கு கொஞ்சம் மாடர்னான கதாபாத்திரம்.

அதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தில் எனக்கு மாடர்ன் பெண் கதாபாத்திரம் கிடைத்துவிட்டது. ரொம்ப நாளாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஏங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட சொல்லலாம்.

பேராண்மை படத்தில் நடித்தது போன்று ரொம்ப நாளைக்கு பின் இதில் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஒரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கின்றன. கண்ணே கலைமானே படத்தில் பார்த்ததுபோலத்தான் எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார்.

சண்டைக்காட்சிகளின்போது யாருக்கும் அடிபட்டுவிடக் கூடாது என உதயநிதி கவனம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது. தற்போது தமிழ் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் ஆகிவிட்ட அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன். சமுத்திரக்கனி, கதிர், வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளேன்.

சில கிராமங்களில் வயதான உடல்நலம் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தலைக்கூத்தல் என்கிற முறையில் நடத்தும் நடைமுறை உள்ளது. அதை மையப்படுத்திதான் இப்படம் உருவாகி உள்ளது. சமுத்திரக்கனி சென்டிமென்டான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்து நாங்கள் அழுதது பலமுறை நடந்தது. அந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தின் காட்சிகள் லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். தரமான, வித்தியாசமான படங்களை எப்போதும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தந்து வந்துள்ளது. உதாரணமாக விக்ரம் வேதா, மண்டேலா போன்ற படங்களை சொல்லலாம். தலைக்கூத்தலும் அப்படியொரு தரத்தில் மக்களைக் கவரும்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com