வெந்து தணிந்தது காடு; பவர் கம்மி!

வெந்து தணிந்தது காடு; பவர் கம்மி!

Published on

து வரை வந்த கேங்ஸ்டர் படங்களை கொஞ்சம் அப்படியும் இப்படியும் மாற்றி ஸ்டைலிஷ் சேர்த்து சொன்னால் அதுதான் கெளதம் மேனன் இயக்கிய  ‘வெந்து தணிந்தது காடு” திரைப்படம்.     

தமிழ்நாட்டின் தென் பகுதியில் வறட்சியான நிலத்தில் வாழும் முத்து (சிம்பு ) வறுமை காரணமாக மும்பையில் ஒரு பரோட்டா கடையில் வேலைக்கு சேர்கிறான். அங்கே உள்ள பரோட்டா கடை மறைமுகமாக கூலிக்கு  கொலை செய்யும் ஆட்களை அனுப்பும் இடமாக இருப்பதை அறிந்து கொள்கிறான். 

இந்த இடத்தில் இருந்து வெளியேற முயலும்  சமயத்தில் சந்தர்ப்ப வசத்தால் ஆயுதம் எடுக்கிறான்.ஆனால் அதன் பின்பு ஆயுதத்தை கைவிட  முடியவில்லை. அதன் பிறகு  கொலைகள், ரத்தம், ரவுடிகள் மோதல், காதல், துரோகம் என நாம் பல படங்களில் பார்த்த காட்சிகளுடன் படம் செல்கிறது.

படத்தின் முதல் பாதி நிதானமாக பயணிகிறது. இரண்டாம் பாதி பரபரப்புடன் நகரும் என்று எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.திரைக்கதையில் ஆங்காங்கே சில புதுமைகள் செய்து இருந்தாலும், பெரிய அளவில் ஈரக்கவில்லை.

ஏ.ஆர்.ரகுமானின் இசையும், ஆர்ட் டைரக்ஷனும், கேமராவும்  படத்திற்கு கூடுதல் பலம். ஒரு 21 வயது அப்பாவி இளைஞன் கூலிபடைக்குள் மாட்டி கொண்டால் உருவாகும் உடல் மொழியை நன்றாக காட்டியுள்ளார் சிம்பு. படத்தை  பல்வேறு இடங்களில் தூக்கி நிறுத்துவது சிம்புதான்.

மற்றபடி சித்தி இதானி நடிப்பு திறமையும் அழகும் கலந்து ஒரு சேர பெற்றுள்ளார். உறுதியாக சொல்லலாம் நல்ல ஹீரோயின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்து விட்டார். ராதிகா, அப்புக்குட்டி, சித்திக் என அனைவரும் சரியாக நடிப்பை வெளிப் படுத்தி உள்ளார்கள்.       

வெந்து தணிந்தது காடு என்று தீமையை அழிக்க பாரதி சொன்ன வார்த்தையை தொடர்பில்லாத கேங்ஸ்டர் கதைக்கு ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை.  கேங்ஸ்டர்களுக்கும், துப்பாக்கிகளுக்கும் ஓய்வு தந்து விட்டு நல்ல புதுமையான  கதைகளை நோக்கி தமிழ் சினிமா நகர்ந்தால் நன்றாக இருக்கும்..

வெந்து தணிந்தது காடு -தலைப்பில் மட்டுமே பவர்புல்!         

logo
Kalki Online
kalkionline.com