
‘சாமி’ படத்தில் வரும் பெருமாள் பிச்சையை யாராலும் மறக்க முடியுமா? தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். ஆந்திராவைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். வயது மூப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இயற்கை எய்தினார். இவருக்கு வயது 83.
தமிழ் , இந்தி , கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் முன்னாள் அரசியல்வாதி ஆவார்.
இவர் 1999 முதல் 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ளார். 1978-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ‘பிரணம் கரீடு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ‘சாமி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரைத்துறையில் சூப்பரான வில்லனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அவரது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கிட்டதட்ட 47 ஆண்டுகளாக திரைவுலகில் தனக்கென தனிஇடத்தை பிடித்த கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமையால் இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழில் திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.
இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். இவரது ஒரே மகன் ஆஞ்சநேய பிரசாத் 2010-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இவரை வெகுவாக பாதித்தது. அதனை தொடர்ந்து படங்களில் நடிப்பதை இவர் குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கோட்டா சீனிவாச ராவ் மறைவிற்கு சினிமா துறையினர், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.