புலனாய்வு த்ரில்லர் படத்தில் விதார்த் !

புலனாய்வு த்ரில்லர் படத்தில் விதார்த் !
Updated on

'யதார்த்த நாயகன்' நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படம் வெளியாகவிருக்கிறது.

தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். 'டான்' பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார். ஒப்பனைக்காக தேசிய விருது பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்தப் படத்தில் சிறப்பு ஒப்பனைக்காகப் பணியாற்றுகிறார். படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப் பை’ என்.ராகவன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வருகை தந்து படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழில் தயாராகும் காவல் துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com