
புத்தாண்டு பரிசாக விஜய் ரசிகர்களுக்கு ஜனவரி மாதம் ஒரு அப்டேட் காத்திருக்கிறது.
சினிமா உலகத்திற்கு டாட்டா காட்டியுள்ள விஜய்யின் கடைசி படத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் குதித்த நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார். மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொண்டு செய்து வந்த நடிகர் விஜய், தற்போது கட்சி தொடங்கி மக்களுக்காக களத்தில் குதித்துள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு மாபெரும் புரட்சியை ஏற்படுத்துமா என்று மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், விஜய் சினிமாவில் இருந்து விடையளித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் கவலையாகவே உள்ளது.
டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கையில் இவரின் சினிமா ஓய்வு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியே. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் பெரும் வரவேற்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்திலேயே பல அரசியல் பேசப்பட்டது. இரட்டை வேடத்தில் நடித்த விஜய், தந்தையாகவும், மகனாகவும் அசத்தியிருப்பார். இந்த நிலையில் கடைசியாக நடிக்கும் இவரின் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டிருந்தது.
ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் சூழலில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த படங்களால் தன்னுடைய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகிவரும் விஜய்யின் இறுதிப்படம் என்பதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் 40 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் பொங்கலையடுத்து துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றும் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது படத்தின் டைட்டிலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு சில மாதங்கள் முன்னதாக தளபதி 69 படம் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் அவரது கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் நகர்வையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் 2026ஆம் ஆண்டு விஜய் - உதயநிதிக்கு போட்டியாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது. சினிமாவில் கலக்கிய விஜய், அரசியலிலும் கலக்குவாரா என்றும் பார்க்கலாம். ஏற்கனவே அரசியலில் நுழைந்த விஜய், 2 முறை மேடைகளில் பேசி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.