
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, 2011-ம் ஆண்டு தெலுங்கு சினிமாதுறையில் நுழைந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்தது 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக மாறியதுடன் பெண்களின் கனவு நாயகனாகவும் மாறினார். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்), கீத கோவிந்தம், மற்றும் டாக்ஸிவாலா போன்றவை அவருக்கு மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தந்ததுடன் வசூலிலும் சாதனை படைத்தது. கடைசியாக இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்ட்மென் நிறுவனம், நாக வம்சி, மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் முன்னரை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் ‘என்ன வேணா செய்வேன் சார்.. தேவப்பட்டா மொத்தத்தையும் கொளுத்திருவேன் சார்..’ என்று விஜய் தேவரகொண்டா அவருக்கே உரித்தான ஸ்டைலில் பேசி ரசிகர்கள் கவர்ந்தார்.
கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யாவும், தெலுங்கு டீசருக்கு ஜூனியர் என்.டி.ஆரும், இந்தி டீசருக்கு ரன்வீர் கபூரும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்த டீசரில் வசனம், பின்னணி குரல், இசை, பிஜிஎம் என அனைத்தும் ஈர்க்கப்பட்டது என்றே சொல்லலாம்.
இதற்கிடையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை ஒத்திவைப்பட்டு தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்கள் இறுதியான ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். அந்த வகையில், இப்படம் வருகிற ஜூலை 31-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வந்ததால் எப்போது இந்த படம் வெளியாகும் என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.