மலையாளத்தில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய்: வைரலாகும் வீடியோ!

மலையாளத்தில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய்: வைரலாகும் வீடியோ!

கேரளாவிற்கு ஷூட்டிங் சென்ற நடிகர் விஜய், அம்மாநில ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலுக்குத் தாவிய நடிகர் விஜய், தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ‘கோட்’ படத்தின் போஸ்டர்கள் வெளியானதன் மூலம், விஜய் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், ‘கோட்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜய் கேரளாவிற்கு சென்றிருந்தார். கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தை போன்றே விஜய்யின் படம் ரிலீசாகும் முதல் நாளே பேனர், போஸ்டர் எல்லாம் வைப்பார்கள். அப்படி, விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவர் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூடியதால், விஜய்யின் கார் ரசிகர்கள் மத்தியில் தத்தளித்தது. தொடர்ந்து கூட்ட நெரிசலால் விஜய்யின் கார் கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கிய காட்சிகளும் வைரலானது.

இந்த நிலையில், தினசரி ஷூட்டிங் நடைபெறும் க்ரீன் பீல்டு விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் விஜய்யை காண கூடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய், மலையாளத்தில் உரையாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். “ஓணம் பண்டிகைக்கு நீங்கள் எல்லாம் எந்த அளவு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதே அளவு சந்தோஷத்தில் தற்போது நான் இருக்கிறேன்” எனவும் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து இன்றும் ரசிகர்களைக் காண வந்த நடிகர் விஜய், ரசிகர்கள் கொடுத்த மாலையை கழுத்தில் அணிந்தபடி வெற்றிநடை போட்டார். இந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com