
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட சீரியல்களை தான் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
‘சஹானா’ சீரியல் மூலம் பிரபலமான ஸ்ரீதர் சுப்பிரமணியம், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ என்ற டிவி சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஸ்ரீதர். அந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர் அதிலிருந்து 'சஹானா' ஸ்ரீதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் நடித்த தாமரை, சித்தி-2 உள்ளிட்ட பல தொடர்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
சென்னை திநகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 62 வயதான அவரின் மறைவு செய்தி அறிந்த திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவது திரைவுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மூத்த நகைச்சுவை நடிகை பிந்து கோஷ், நடிகர் நேத்ரன், மனோஜ் பாரதி, ரவிக்குமார் என அடுத்தடுத்து பிரபலங்களின் மரணத்தால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. கடந்த மாதம் 25-ம்தேதி பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த இழப்பு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் அதில் இருந்து வெளிவருவதற்குள் அடுத்து ‘சஹானா’ ஸ்ரீதர் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘வள்ளியன் வேலன்’ என்ற நெடுந்தொடரில் ஹீரோயின் அப்பாவாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியில் பணிபுரிந்த இவர் பாலு மகேந்திரா மற்றும் கே பாலசந்தர் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியதுடன், பல மொழிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்து வந்ததுள்ளார்.
இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இதுமட்டுமின்றி சின்னத்திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்த இவர் வெள்ளித்திரையிலும் அழியாத கோலங்கள், வி.ஐ.பி., ராஜ வம்சம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ‘சஹானா’ ஸ்ரீதருக்கு ரிபப்ளிக்கா என்ற மனைவியும், சுருதி என்ற மகளும் உள்ளனர். மரணமடைந்த சஹானா ஸ்ரீதருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.