
நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க அனைவரும் சம்மதிப்பார்கள். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
திரைத் துறையில் சிறந்த நடிப்பு, மக்கள் நலப் பணிகள் அது தொடர்ந்து அரசியல் என்று பல்வேறு தலங்களில் கால் பதித்து பல்வேறு சாதனைகளை புரிந்த விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாத பலரும் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்றோ அல்லது விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்றோ தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு திரும்பிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் ஆர்யா விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பிறகு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியது, கலைத்துறையில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். எல்லோரையும் இறந்த பிறகு தான் சாமி என்று அழைப்பார்கள், கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே சாமியாக வாழ்ந்தவர். அவர் இறந்த சமயத்தில் நான் உடன் இருந்திருக்க வேண்டும், உடனிருந்து இறுதிப் பணிகளை செய்திருக்க வேண்டும். அதற்கு என்னை மன்னிச்சிடுங்க சாமி கேப்டன். இன்று அவர் நம்முடன் இல்லை, ஆனால் என்றும் நம் உள்ளத்தில் நிலைத்திருப்பார்.
நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும். அதற்கு விஜயகாந்த் பெயரை வைக்க எல்லோரும் சம்மதம் சொல்லுவாங்க, யாருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் அதில் ஏற்படாது. கூடிய சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும். கேப்டன் விஜயகாந்த்க்கு பாரத ரத்னா விருது கொடுக்கிறார்களோ, இல்லையோ தெரியாது. ஆனா பாரதம் முழுக்க உள்ள மக்கள் அனைவருமே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இன்னும் எத்தனை வருடமானாலும் அவரது புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறினார்.