ஹீரோவான விஜய் சேதுபதியின் மகன்: ‘பீனிக்ஸ்’ பட டீசர் வெளியீடு!

பீனிக்ஸ்
பீனிக்ஸ்

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்திருக்கும் படத்தின் டீசர் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்தவர்தான் அவரது மகன் சூர்யா. தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில், சிறையில் நடக்கும் ஒரு கலவரம், சிறையில் உள்ள ஒரு கைதியை கொலை செய்ய வெளியில் இருந்து அனுப்பப்பட்ட அடியாட்கள், அவர்களை சூர்யா காப்பாற்றும் காட்சிகள் என பரபரப்பான விஷயங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டுள்ள நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தனது குடும்பத்துடன் சூர்யா கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ‘அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல், சூர்யா என்கிற தன்னுடைய பெயருடன் முதல் படத்தில் நடிக்கப்போகிறேன் என கூறியிருந்தார்.

இந்த டீசர் வெளியீட்டு விழாவின்போது அதை நினைவுப்படுத்தி பத்திரிகையாளர் கேள்வி கேட்டனர். அதாவது, ‘அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்ற தன்னுடைய பெயரை மட்டுமே கொண்டு முதல் படத்தில் நடிக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தீர்களே, இப்போது ஏன் அப்பா வந்திருக்கிறார்?’ என கேட்டதற்கு திகைத்துப் போய் பதில் அளித்துள்ளார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

‘இன்று தந்தையர் தினம். அதனால்தான் என்னுடைய அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் எனது சகோதரி என அனைவரும் வந்திருக்கிறார்கள்’ என பதிலளித்தார் சூர்யா.

இதையும் படியுங்கள்:
உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகும் ‘மார்கோ’: மாஸாக வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பீனிக்ஸ்

பத்திரிகையாளர் மேலும் சூர்யாவிடம், ‘அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது உன்னுடைய அப்பாவின் உதவியோடு ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருவது குறித்து பல பேர் ட்ரோல் போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அதை பார்த்தீங்களா?’ எனக் கேட்டதற்கு, ‘பெரிய ஹீரோக்களுக்கே பயங்கரமா ட்ரோல் போட்டு கலாய்க்கிறாங்க. நான் எம்மாத்திரம்?’ என முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்ந்து, மேடையில் பேசிய விஜய் சேதுபதி, ‘‘எதுவுமே திட்டமிடாமல் எதேச்சையாக நடந்தது. நானும் அனல் அரசு இருவரும் ஒரு பயணத்தில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு வந்தோம். அனல் அரசு ஒரு கதை சொல்லி இந்தப் படத்திற்கு சூர்யா சரியாக இருப்பார் என்று கேட்டார். நானும், ‘சூர்யாவுக்கு சரி என்றால் எனக்கும் சரி’ என்று தெரிவித்தேன்.

நான் துளியும் கற்பனை செய்யவில்லை. எனது பையன் இந்த துறைக்கு வரும்போது இங்கு சர்வைவல் ஆவது கடினம். முடிந்த அளவு நான் இங்கு உள்ள சர்வைவல் எவ்வளவு கடினமானது என்று நிறைய முறை சொல்லிக் கொடுத்துள்ளேன். இந்தத் துறையில் ஒவ்வொரு முறையும் நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறோம். எனது மகனுக்கு எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. இந்த டீசரை பார்த்து நான் மிகவும் அகம் மகிழ்ந்தேன். எனது மகன் பிறந்து 19வது தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளேன். ஆனால், இதுதான் எனது மிகச்சிறந்த தந்தையர் தினம்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com