தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் விஸ்வக்சென் நடிக்கும் புதிய படத்துக்கு, 'தாஸ் கா தம்கி' எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற, 'ஃபலக்னுமா தாஸ்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக்சென். இவரே கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு, 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். அன்வர் அலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதுகிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தில் மூன்று சண்டை பயிற்சி இயக்குநர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'ஹரிஹர வீர மல்லு' ஆகிய படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு பிரத்யேக சண்டைக் காட்சிகளை அமைத்த பல்கேரிய நாட்டு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் டோடர் லாசரோவ் மற்றும் ஜூஜி ஆகியோர் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்கள். மேலும், 'பிம்பிசாரா' படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்த மாஸ்டர் ராமகிருஷ்ணா மற்றும் அப்பட சண்டைக் காட்சிகளை மேற்பார்வையிட்ட வெங்கட் மாஸ்டர் ஆகியோர் இந்தப் பட சண்டைக் காட்சிகளை தனித்துவமாக அமைக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ரொமாண்டிக் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை, ‘வன்மயே கிரியேசன்ஸ்’ மற்றும் ‘விஷ்வக் சென் சினிமாஸ்’ ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கராத்தே ராஜு மற்றும் நடிகர் விஷ்வக் சென் ஆகியோர் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
'தாஸ் கா தம்கி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஷ்வக்சென்னின் தோற்றம் ரசிகர்களை மிகவும் ஈர்ப்பதாக உள்ளது. அதிலும் அவரது இடக்கையில் கைகடிகாரமும், இடக்காதில் காதணியும் அணிந்து ஆள்காட்டி விரலை வலது புருவத்தில் வைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ரொமான்டிக் வித் ஆக்சன் திரில்லராக தயாராக வரும் இந்தத் திரைப்படம், சண்டைக் கட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என்று அந்தப் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.