
பிரபல நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த பேச்சுக்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
கனா காணும் காலங்கள் மூலம் தனது கெரியரை தொடங்கிய நடிகர் ஸ்ரீ படிப்படியாக முன்னேறி ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருந்தார். ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ என இவர் நடித்த அத்தனை படங்களும் ரசிகர்களின் பேவரைட் தான். இப்படி இருக்கையில் இவரின் சமீபத்திய புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை அதிர்ச்சியும், கவலையடையவும் செய்துள்ளன.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் மெலிந்த நிலையில், தலை முடியை கலர் செய்து ஆபாச வீடியோக்கள், பாட்டு என அவரின் இயல்பு நிலையை மறந்து இணையத்தில் வீடியோவை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இவருக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர். பலரும் இவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பது சரியாக தெரியவில்லை.
பிரபல நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை மோசமாகி எலும்பும் தோலுமாக இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆன நிலையில், அவருக்கு தயாரிப்பாளர் சரியான சம்பளம் தரவில்லை என நெட்டிசன்கள் புகார் கூறினார்கள்.
மேலும் பலர் இவருக்கு இறுகப்பற்று படத்தில் சம்பள பாக்கி இருந்ததால் தான் மன அழுத்தத்தில் இப்படி ஆகிவிட்டதாக கருத்து தெரிவிக்கின்றனர். இந்த செய்தி காட்டு தீயாக பரவ, இறுகப்பற்று பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தற்போது சர்ச்சைக்கு பதில் கொடுத்து இருக்கிறார் .
அதில், "நடிகர் ஸ்ரீ உடல்நிலை பற்றி நாங்களும் கவலை கொண்டிருக்கிறோம். அவர் குடும்பம், நண்பர்கள் மட்டுமின்றி நாங்களும் அவரை கண்டுபிடிக்க நீண்டகாலமாக முயற்சி செய்கிறோம். இதை பற்றி பல ஊகங்கள் அடிப்படையிலான செய்தி பரவுவது துரதிஷ்டவசமானது. ஸ்ரீயை கண்டுபிடித்து மீண்டும் அவரை பழைய நிலைக்கு மாற்றுவது தான் முதலில் அவசியம். அதை செய்ய யாராவது உதவினால் நன்றாக இருக்கும்," என கூறி இருக்கிறார்.
மேலும் ஸ்ரீயின் தோழியான டாட்டி டேவிட் அளித்த பேட்டியில், "அவர் மது போதைக்கு அடிமையாகவில்லை, யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். அவருக்கு சிகரெட் பழக்கம் மட்டுமே உள்ளது. அசைவம் கூட சாப்பிடமாட்டார். பிக்பாஸுக்கு பிறகு அவரை பல ஆண்டுகள் பேச முயற்சித்தும் முடியவில்லை. பிறகு அவர் பேசினார். அப்போது ‘நான் மனஅழுத்தத்தில் இருக்கிறேன். அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார். அவருக்கான மன அழுத்தத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. ஸ்ரீ-க்கு நம்மை போல அல்ல, கடுமையான மன அழுத்தம் இருந்துள்ளது. 'வில் அம்பு’ படத்தில் அவருக்கு ஊதியம் வரவில்லை. ‘பிக் பாஸ்’ தரப்பிலிருந்து ஊதியம் தரவில்லை என ஸ்ரீ கூறியிருந்தார். அவருக்கு ‘schizophrenia’ என பாதிப்பு இருந்தது" என தெரிவித்துள்ளார்.