
மனித கம்ப்யூட்டர் என புகழப்படும் 'சகுந்தலா தேவி'யின் வாழ்க்கை சித்திரத்தை திரைப்படமாக்கிய பெருமைக்குரிய இயக்குநர் அனுமேனனின் புதிய திரைப்படம் 'நியாத்' (தமிழில் நோக்கம் என்று பொருள்) இத்திரைப்படத்தில் மீரா ராவ் எனும் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் களமிறங்கி ஒரு கொலைக்கான காரணங்களைத் துப்பு துலக்கி கொலையாளி யார் எனக் கண்டறியும் கதாபாத்திரம் வித்யா பாலனுக்கு.
இது சாதாரணமாக எல்லா டிடெக்டிவ் திரைப்படங்களிலும் நாம் காணக்கூடிய கதையம்சம் தானே என்று தோன்றலாம். ஆனால், இந்தப் படம் அப்படி இருக்கப்போவதில்லை என்கிறார் வித்யா, படத்தில் கதைப்படி வித்யாவுக்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டும்தான். முழு திரைப்படத்திலும் அந்த ஒரே காட்ஸ்யூமில் தான் வருகிறார் வித்யா பாலன். படக்குழுவினர் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அவருக்கு ஒரே மாதிரியான 3 உடைகளைத் தந்த போதும், தான் ஒரே உடையை மட்டுமே முழு படத்திற்குமாகப் பயன்படுத்தியதாக தனது சமீபத்திய ஊடக நேர்காணலொன்றில் வித்யாபாலன் தெரிவித்திருந்தார்.
நிமிடத்திற்கு ஓரு காஸ்ட்யூம் மாறக்கூடிய வகையில் உடைகளின் மீது அதீத அக்கறை செலுத்தும் நடிகர், நடிகைகள் மலிந்துள்ள இந்த யுகத்தில் இப்படி ஒரே உடையுடன் ஒரு முழு நீளத்திரைப்படத்திலும் நடித்து முடித்த நடிகையாக வித்யாபாலன் மட்டுமே இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.ஒருவகையில் இது அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடே எனலாம்.
அது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், முன்னெப்போதையும் விட இப்போது தனது உடல் மீதான தன்னம்பிக்கை மேலும் வலுப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் வித்யா, அதற்கு காரணம் தனது பெற்றோரின் வளர்ப்பு முறை என்று கூறும் வித்யா பாலன், தானும், தனது சகோதரியும் எப்போதுமே தங்களை பிறருடன் ஒப்பிட்டுப்பார்த்து தாழ்வுணர்ச்சி கொண்டதே இல்லை என்கிறார். ஒற்றை உடை என்பதோடு, ஒரு டிடெக்டிவ் அதிகாரிக்கு ஏற்ற வகையில் இந்த திரைப்படத்தில் வித்யாபாலனின் ஹேர் ஸ்டைலும் முன்புறம் மாறி இருக்கிறது. அனுமேனனின் முந்தைய திரைப்படமான சகுந்தலா தேவியிலும் வித்யா தான் நாயகி. விமர்சன ரீதியாக அத்திரைப்படத்தில் வித்யாபாலனுக்கு நல்ல வரவேற்பிருந்தது குறிப்பிடத்தக்கது .
நாளை (7.07.2023) இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் ‘நியாத்’ திரைப்படத்தில் வித்யா பாலனுடன் இணைந்து ராகுல்போஸ், ராம் கபூர், ஷஷாங் அரோரா, சஹானா கோஸ்வாமி, அம்ரிதா புரி, திப்நிதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு அமேஸான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து விக்ரம் மல்ஹோத்ரா.