பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவான 76-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 16ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டு உலகளவில் வெளியாகும் சிறந்த படங்களை தேர்வு செய்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவது வழக்கம்.
புகழ்பெற்ற இந்த திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யபின் “கென்னடி” திரைப்படம் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேன்ஸ் விழா குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அனுராக் காஷ்யபின் “கென்னடி” திரைப்படம் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகக் கருதப்படும் முன்னாள் போலீஸ் அதிகாரியான கென்னடி பற்றி திரைப்படமாகும். இப்படத்தில், ராகுல் பட், சன்னி லியோன், மேகா பர்மன், மோஹித் தகல்கர், அபிலாஷ் தப்லியால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ளார். படத்தை ZEE Studios மற்றும் Good Bad Flims இணைந்து தயாரித்துள்ளனர்.கேன்ஸ் திரைப்பட விழாவில் இதற்கு முன்பு அனுராக் காஷ்யப்பின், கேங்ஸ் ஆஃப் வாசப்பூர் (2012), பாம்பே டாக்கீஸ் (2013),ராமன் ராகவ் 2.0 (2016) உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகர் ராகுல் ராயின் ஆக்ரா திரைப்படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. ராகுல் ராய் நடிப்பில் வெளியாகியுள்ள ஆக்ரா திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் Directors Fortnight பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை கானு பெஹல் எழுதி இயக்கியுள்ளார். இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஆக்ரா படத்தை சரிகமா தயார்ப்பு நிறுவனம், UFO மற்றும் O28 Flims ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் பிரியங்கா போஸ், மோஹித் அகர்வால், விபா சிப்பர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.