
இந்திய சினிமாவின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமே பான் இந்தியத் திரைப்படங்கள் தான். முன்பெல்லாம் ஒரு திரைப்படம் ஒரே மொழியில் மட்டுமே வெளியானது. அப்படி வெளிவரும் திரைப்படங்கள் ஹிட் அடித்து விட்டால், மற்ற மொழி இயக்குநர்கள் மொழிபெயர்ப்பு காப்புரிமை வாங்கி அப்படத்தை வேறு மொழியில் ரீ-மேக் செய்வார்கள். ஆனால், இன்று சினிமாவின் வளர்ச்சி வேறு விதமாக மாறிவிட்டது. ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளிவந்து பான் இந்திய அளவில் ஹிட் அடிக்கத் தொடங்கி விட்டன. அவ்வகையில் பான் இந்திய அளவில் வெற்றிகரமான நடிகர்கள் யார் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பல மொழிகளில் சில திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், பாகுபலி படம் தான் முதலில் பான் இந்திய அளவில் வெற்றிக் கணக்கைத் தொடக்கி வைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் பான் இந்தியப் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இச்சூழலில் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் படங்களை பான் இந்தியப் படங்களாக வெளியிடவே விரும்புகின்றனர். இருப்பினும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் பான் இந்திய அளவில் ஒரு படம் வெற்றியடைந்ததா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும்.
பாகுபலி 2 படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூலைக் கடந்து பான் இந்திய நடிகராக முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் பிரபாஸ். இப்படத்திற்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் தான் பிரபாஸ் நடித்து வருகிறார். அதற்கேற்ப சலார் மற்றும் கல்கி AD 2898 ஆகிய இரண்டு படங்களும் பெருவெற்றியைப் பெற்றன. இதில் கல்கி திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தது. இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகமும் ரூ.1,000 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக வெற்றிகரமான பான் இந்திய நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான். கடந்த ஆண்டு வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் இரண்டுமே ரூ.1,000 கோடி வசூலைக் கடந்ததால், பாலிவுட் சினிமா தோல்விப் பாதையில் இருந்து மீண்டது. பாலிவுட்டில் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறையும் போதெல்லாம், அந்தப் பற்றாக்குறையை பல நேரங்களில் போக்கியவர் ஷாருக்கான். தென்னிந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருப்பதால், பான் இந்திய அளவில் பிரபலமாகி விட்டார் ஷாருக்கான்.
பான் இந்திய நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் சென்னையில் வளர்ந்து, தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியத் திரைப்படக் கணக்கைத் தொடங்கிய அல்லு அர்ஜூன், புஷ்பா-2 படத்தின் மூலம் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்து விட்டார். இப்படம் மொத்தமாக ரூ.1,900 கோடியை வசூலித்து, பாகுபலி-2 வசூலை மிஞ்சியது.
கேஜிஎஃப் படத்தின் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் உயர்த்தியவர் நடிகர் யாஷ். இப்படத்தின் 2 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், 2-ம் பாகம் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தது. இந்நிலையில் இப்படத்தின் 3-ம் பாகமும் வெளிவர இருக்கிறது.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியிருந்தாலும், இதில் 2 கதாநாயகர்கள் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியே நடித்த தேவரா மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வசூலில் சொதப்பியதால், பான் இந்திய நடிகர் என்ற அந்தஸ்தை இன்னும் இவர்கள் பெறவில்லை. மேலும் இந்தப் பட்டியலில் தமிழ்ப் படங்கள் இல்லாதது, தமிழ் ரசிகர்களுக்கு சற்று கவலையளிப்பதை யாராலும் மறுக்க முடியாது.