
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது இந்த வெற்றிக்கு அவரது அண்ணன் செல்வராகவன் தான் மிக முக்கிய காரணம். ஏனெனில் தொடக்க காலத்தில் தனுஷை இயக்கி சினிமா வாய்ப்பைக் கொடுத்தவர் செல்வராகவன் மட்டுமே. கடந்த 2006 இல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் நடிக்க முதலில் சினேகாவிற்கு விருப்பமே இல்லையாம். அப்படி இருக்கையில் சினேகா இப்படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 2001 இல் வெளியான என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சினேகா. தமிழில் நடிப்பதற்கு முன்பே அதே ஆண்டில் மலையாளத்தில் நீல பக்சி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி நடித்திருந்தார் சினேகா. பிறகு குடும்பத் திரைப்படமான ஆனந்தம் படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார்.
அதனைத் தொடர்ந்து புன்னகை தேசம், பார்த்திபன் கனவு, உன்னை நினைத்து, ஆட்டோகிராஃப், வசீகரா, ஏப்ரல் மாதத்தில், ஆயுதம் மற்றும் பள்ளிக்கூடம் போன்ற பல வெற்றிப் படங்களில் சினேகா நடித்திருக்கிறார். குடும்பப் பாங்கான முக அமைப்பால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சினேகாவிற்கு கிடைத்தது. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த சினேகாவிற்கு புதுப்பேட்டை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் வந்தது.
புதுப்பேட்டை படத்தின் கதையை இயக்குநர் செல்வராகவன் சினேகாவிடம் சொல்லும் போது, அவரது தந்தையும் உடனிருந்தார். கதையைக் கேட்டு முடித்த பின்னர், இந்த கதாபாத்திரம் தனக்கு சரியாக இருக்காது என தயக்கமாகவே இருந்தார். ஆனால், சினேகாவிற்கு அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்து முடிவெடுக்க உதவியவர், அவரின் அப்பா தான்.
"நிறைய பாலிவுட் படங்களில் நடிகைகள் இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் சொன்ன கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை தவறாக காண்பிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ இன்னொரு முறை சிந்தித்துப் பார்த்து முடிவெடு" என சினேகாவின் அப்பா சொல்லியிருக்கிறார்.
அப்பா தனக்கு துணையாக இருந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் சினேகா. அதே நேரத்தில் அப்பாவிற்கு இந்தப் படத்தின் கதை பிடித்திருக்கிறது. அவர் சொன்னால் நிச்சயமாக சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து தான் சினேகா புதுப்பேட்டை படத்தில் நடித்தாராம்.
புதுப்பேட்டை படத்தில் தனுஷை மாறுபட்ட வேடத்தில் காண்பித்தார் இயக்குநர் செல்வராகவன். இப்படத்தில் சிநேகா விலைமாதுவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதோடு, சினேகாவின் நடிப்பிற்கு பாராட்டுகளும் கிடைத்தன.
சினேகாவின் கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் தான் முதலில் நடிக்கவிருந்தார். போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து முடித்த பிறகு, ஷூட்டிங் தொடங்க 6 மாதங்கள் ஆகும் என செல்வராகவன் தெரிவித்தாராம். இதனால், இப்படத்திலிருந்து காயத்ரி விலகவே, அந்த வாய்ப்பு சினேகாவிற்கு கிடைத்தது.