யார் இந்த தேவதை?

யார் இந்த தேவதை?

மே’ மாதத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு புகழ் பெற்ற நடிகை இவர். முதல் முதலாக இவர் நடித்து 1957ல் வெளிவந்த ‘மணமகன் தேவை’ மற்றும் இறுதியாக வெளியிடப்பட்ட ‘நானும் ஒரு தொழிலாளி’ (1986) இரண்டுமே வந்தது ‘மே’யில்தான். இவரது இறுதிமூச்சு நின்றதும் ‘மே’ மாதத்தில்தான்.

எப்போதுமே தனிப்பெரும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தவர். மிகவும் யதார்த்தமான முறையில் நடிப்பது இவரது தனிச்சிறப்பாகும். 5 ஆண்டு காலத்தில் 11 வெற்றிப்படங்களில்  சிவாஜியுடன் இணைந்து நடித்தவர்.

காதலியாக நடிக்கையில் அழகு கூடும்; கல்லூரி மாணவி என்றால் டீன்ஏஜ் பெண்; திருமதி கேரக்டர் என்றால் பக்கா குடும்பப்பெண் என முகத் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதில் வல்லவர். (யார் இவர்?)

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்ததோடு எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பல ஸ்டார் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தவிர, பானுமதி, பத்மினி, சரோஜா தேவி, சாவித்திரி என பல சிறந்த நடிகைகளிலிருந்த காலகட்டத்தில், தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தி புகழடைந்தவர்.

கவர்ச்சியாக நடிக்க மறுத்தது இவருக்கு மைனஸ் பாயிண்ட்டாக இருந்தபோதும், அதையே தனது பலமாக மாற்றிக் கொண்டவர். உணர்ச்சிப் பிழம்பாக மாறி நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தும் ஆற்றல், நடிகையர் திலகத்திற்குப் பிறகு இவருக்குத்தான் இருந்தது. மேலும், தனது நடிப்பு மீட்டரை, ஓவர் ஆக்டிங் இன்றி அளவுடன் செயல்படுத்தி ரீ ஆக்ஷன் தருபவர்.

(யார் இவர்…?)

இவர் அழுதால் ரசிகர்கள் அழுவார்கள். ஷுட்டிங்கிற்குச் சரியான நேரத்துக்கு வருவதோடு எந்தப் படத் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கால்ஷீட் பிரச்னைகளோ, தொல்லைகளோ அளிக்காதவர். ஈகோ இல்லாமல் அனைவரிடமும் தன்னடக்கத்துடன் நடந்துகொள்பவர். திரையுலகில் தனக்க மிகப் பிடித்த சிறந்த ஒரு தோழி இவர் என்று கவியரசரே கூறியிருக்கிறார்.

இவர் இயற் பெயரை ‘முதலாளி’ படத்திற்காக மாற்றுகையில் அழுதபோதிலும், அந்தப் பெயர்தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எனலாம்.

யார் இந்த நடிகை...? பிரமிளா என்கிற இயற்பெயர் ‘தேவிகா’ என ஆகி பிரபலமானவர். சொந்த வாழ்வில் புயல் வீச, மகளுக்காக கடைசிகாலம் வரை வாழ்ந்து காலமானது பெரிய சோகம்தான்.

(தேவிகா என்கிற தேவதை!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com