

தமிழ் சினிமா உலகறிய செய்த சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற நடிகர்களில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஒருவர். அவரின் தனித்திறமை பெற்ற நடிப்பால் இன்றும் நல்ல புகழ் வாய்ந்த நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறும் சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் காண்போம்.
கே. என். கே. மூர்த்தி என்பதுதான் இவரின் உண்மையான பெயர். மிக நீளமான பெயராக இருப்பதால் ஸ்ரீதர் சார்தான் பெயரை சுருக்கி வெறும் மூர்த்தி என்று வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகப்படுத்தினார். இன்று 90 வயதில் இருக்கும் இவர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எதுவும் செய்வது கிடையாதாம். ப்யூர் வெஜிடேரியன் ஃபுட், சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் தூங்குவதும்தான் இவர் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம். மேலும் ஹோட்டல் பேன்சி ஃபுட் எதுவும் பிடிக்காதாம்.
எனக்கு அவ்வப்போது கொஞ்சம் முதுகுவலி வரும். ஆனாலும் யாரையும் பிடித்துக் கொண்டு நடப்பதெல்லாம் பிடிக்காது தானாகத்தான் நடப்பேன் என்கிறார். ஞாபக சக்தி எல்லாம் இப்பொழுது அதிகம் கிடையாது பணத்தைத் தவிர என்கிறார்.
இவருடைய தனி அடையாளம் என்று பார்த்தால் இந்த தலைமுறையும் விரும்பும் நடிகராக எல்லோருடனும் ஒத்துப் போகும் குணம் உடையவராக இருப்பதன் காரணம் யாரைப் பற்றியும் கிரிட்டிசைஸ் செய்வதில்லை. எளிமையாக அனைவரிடமும் பழகி வருவதுதான். இந்த ட்ரெஸ்ஸை போட்டால் நன்றாக இருக்கும். இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று எவரைப் பற்றியும் எதுவும் கூறுவதில்லை. அதனால்தான் அனைவருடனும் நல்ல நட்பாகவும் ஒற்றுமையாகவும் நடிக்க முடிகிறது என்று கூறுகிறார்.
இவருக்கு நண்பர்கள் என்று பார்த்தால் தேங்காய் சீனிவாசன்தான். இருவரும் வாடா போடா என்று கூறும் அளவிற்கு உண்மையான நண்பர்கள். 1970களில் வெண்ணி ஆடை மூர்த்திக்கு உடல்நலம் சரியில்லாமல் இதய சம்பந்தமான நோய் வந்த பொழுது தேங்காய் சீனிவாசன் திருப்பதி வரை நடந்தே சென்று பிரார்த்தனை செய்து, இனி உனக்கு ஒன்றும் இல்லைடா எனக்கு பின்னாடிதான் நீ போவாய் என்று கூறியது மறக்கமுடியாத அனுபவமாக கூறுகிறார்.
சுருளிராஜனும் இவர் மேல் மிகுந்த அன்பு உடையவராக இருந்து இருக்கிறார். ஆனாலும் சுருளிராஜனோ தேங்காய் சீனிவாசனோ இவர் வீட்டிற்கு வந்ததில்லை. இவர் யாரையும் வீட்டிற்கு அழைப்பதில்லை. நாகேஷ், விவேக்கும் வந்திருக்கிறார்கள். விவேக் அவர் மகனுக்கு ஜாதகம் பார்ப்பதற்காக வந்ததாக கூறுகிறார். அப்பொழுது ஜாதகம் பார்ப்பதில் ஆர்வம் உடையவராக வெந்நிற ஆடை மூர்த்தி இருந்தாலும் இவருக்கு பார்க்கவில்லையாம். நாகேஷை மாத்திரம்தான் சார் என்று கடைசி வரையில் அழைத்ததாக கூறுகிறார். அவர்க்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். அது நம்முடைய பண்பு. அதை நாம்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அவரை மிகவும் பெருமிதம் படுத்தி கூறுகிறார்.
இவர் ஜாதகம் பார்ப்பதால்தான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நெருங்கிய பழக்கமானவராகவும் அதே சமயத்தில் அவருக்கு இவர் ஜாதகம் பார்த்து சொன்னது பலித்ததாகவும் கூறுகிறார்.
அப்போதிலிருந்தே ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அப்படி பிடிப்பதற்கு காரணம் நாங்கள் அனைவரும் இடை இடையே செட்டில் இருந்து வெளியில் சென்று வருவோம். ஆனால் அவர் மாத்திரம் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்த ஆழ்ந்து படிப்பார். அதனால் அவரை எனக்கு அப்பொழுது இருந்தே அதிகமாக பிடிக்கும்.
ஒருமுறை ஜெயலலிதா என்னிடம் நீங்க நன்றாக ஜாதகம் பார்ப்பீர்களாமே சினிமாவில் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சினிமாவைப் பற்றி எனக்கு டவுட் தான். அவ்வளவாக கூறத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு மினிஸ்டராக வருவீர்கள் என்று கூறினாராம். அதன் பிறகு பேசும் பொழுது சாதாரண மினிஸ்டராக வருவீர்கள் என்றுதான் நீங்கள் கூறினீர்கள். ஆனால் நான் சீப் மினிஸ்டர் ஆகவே வந்து விட்டேன் என்று கூறி பெருமிதம் அடைந்ததாக கூறுகிறார்.
ஒருமுறை நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா. இல்லை இல்லை நீங்கள் இங்கு வர வேண்டாம். நீங்கள் வந்தால் எங்கள் வீடு ஸ்தம்பித்து போய்விடும். தெருவில் உள்ளவர்கள் அனைவருக்கும் வந்துவிடுவார்கள். ஆதலால் நானே உங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறி வீட்டில் அவரை சென்று பார்த்ததாக கூறும் இவர் சினிமாவைப் பற்றி எதையும் பேசுவது இல்லையாம்.
இவர் அரசியல்வாதி, போலீஸ், சாமியார் மூவரையும் நம்ப கூடாது என்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் வந்தது எப்படி என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்தான் மிகவும் சுவாரஸ்யமானது.
எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை விருப்பம் எதுவும் கிடையாது. நான் பிஎல் முடித்துவிட்டு ஒரு சேல்ஸ்மேன் ஆக வேலை செய்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை. வெயிலில் போய் வருவது இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. நான் மிகவும் சொகுசாக வளர்ந்தவன். ஆதலால் ஓரிடத்தில் அமர்ந்து பேனுக்கு அடியில் வேலை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது கிடைக்கவில்லை அப்பொழுது பள்ளி, கல்லூரிகளில் காமெடியனாக நடித்து பரிசு பெற்றது ஞாபகத்திற்கு வர, அதே சமயத்தில் நான் பிஎல் படிக்கும் பொழுது ஹாஸ்டலில் தங்கி படிக்க இடம் கிடைக்காததால் ஒரு வாடகை வீட்டில் இருந்து படித்தேன். அப்பொழுது என்னைப் பார்க்க என். சி. சக்கரவர்த்தி, ஜெய்சங்கர் ஸ்ரீகாந்த் போன்றவர்கள் வருவார்கள். அப்போது அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், ஜெய்சங்கரிடம் உங்களுக்குத்தான் ஸ்ரீதர் சாரை நன்றாக தெரியுமே எனக்கு ஒரு காமெடி நடிகனாக நடிப்பதற்கு சிபாரிசு செய்யக்கூடாதா என்று கேட்டிருக்கிறார்.
இவரை அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகப் படுத்தியபோது எங்கே நடித்துக் காட்டு என்று இருக்கிறார். நான் அங்கு பெருத்த கூட்டத்தில் நடித்தவன் இங்கு நான்கு பேருக்கு முன்னால் என்னால் நடிக்க இயலாது என்று கூறினாராம்.
அப்பொழுது அவ்வளவு பேரை வரவழைத்தால்தான் நீ நடிப்பாயா? என்று கேட்டுவிட்டு ஸ்ரீதர் இவரைப் பார்த்துவிட்டு உனக்கு காமெடியாக நடிப்பதற்கு உன் முகம் சாயல் சரி வராது. நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளி போன்றவர்களை பார்த்த உடனே மக்கள் ரசிப்பார்கள். ஏனென்றால் அவர்களின் முகச்சாயல் அப்படி ப்பட்டது. ஆதலால் நீ இரண்டாவது ஹீரோவாக நடிக்க முயற்சி பண்ணலாம் அதற்கு உன் முகம் சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட இவர் எனக்கு அப்படியெல்லாம் நடிக்கத் தெரியாது. கல்லூரியில் படித்தபொழுது காமெடியனாக நடித்த அனுபவம் இருக்கிறது. ஆதலால் எனக்கு அப்படி நடித்தால் தான் சந்தோஷம் என்று கூறிவிட்டு வெளியில் வரும் பொழுது,
I read somewhere in an English book " To have a good face is one's good fortune and sadly I have a sadly bad face.
என்றது அவருக்கு மிகவும் டச்சிங்காக இருந்திருக்கிறது. பின்னர் ஸ்ரீதர் சார் என்னை அழைத்து நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினார் என்கிறார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி படத்தில் நடித்ததற்கு பிறகு அந்த வெள்ளை நிறத்தையே நான் அணிவதில்லை என்றும் 50, 60 படங்களுக்கு எனக்கு நடிப்பதற்கு மற்றவர்களிடம் வாய்ப்பு வாங்கித் தந்தவர் ஜெய்சங்கர்தான். ஆனால் அவர் ஒரு நாளும் அதைப்பற்றி என்னிடம் கூறியதே இல்லை என்று அவரின் நட்பின் ஆழத்தை பெருமிதத்தோடு கூறுகிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள்.