பாலிவுட் நடிகை கஜோல், அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருது் வழங்கும் விழாவில், ஒரு செய்தியாளர் இந்தியில் பேசும்படி கேட்டதற்கு, கோபத்துடன் "புரிய வேண்டியவர்களுக்கு புரியும்" என்று பதிலளித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கஜோல் தனது தாயார் தனுஜாவுடன் கலந்துகொண்டார். அங்கு ராஜ்கபூர் விருது பெற்ற கஜோல், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் உரையாடினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு செய்தியாளர், அவர் பேசியதை இந்தியில் மீண்டும் கூறுமாறு கேட்டுள்ளார். இதைக்கேட்டு கோபமடைந்த கஜோல், "நான் இப்போது இந்தியில் பேச வேண்டுமா? புரிய வேண்டியவர்களுக்கு அது புரியும்" என்று பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிலால், அந்த இடத்தில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் கஜோலின் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அவர், இந்தியில் பேச மறுப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர், அவரது இந்த செயல், இந்தி மொழியின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், இது இந்தித் திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட ஏதேனும் கசப்பான அனுபவம் தான் காரணமாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
"இந்தித் திரைப்படங்கள் தான் அவருக்குப் புகழைக் கொடுத்தன, இப்போது இந்தியைப் பேச வெட்கப்படுகிறாரா?" என்று ஒரு இணையபயனர் கேள்வி எழுப்பினார். மற்றொருவர், "இந்திப் படங்களில் ஏன் இன்னும் அவர் நடிக்கிறார்? மராத்தி படங்களில் மட்டுமே அவர் நடிக்க வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.
இருப்பினும், கஜோல் இந்த சர்ச்சைகள் குறித்து இதுவரை எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்தச் சம்பவம், தற்போது மொழி குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பிவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கஜோல் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.