
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திருப்பதியில் நேற்று மிகப்பிரம்மாண்டாக நடைபெற்றது.
நடிகர் பிரபாஸின் நடிப்பில் 'பாகுபலி' படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கான ஸ்டார் வேல்யு கூடியதோடு, அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு எகிறியுள்ளது. அந்தவகையில் அவர் தற்போது நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இப்படத்தை, இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள நிலையில், கிரிதி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், வரும் ஜூன் 16ம் தேதியன்று இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திருப்பதியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக நடிகர் பிரபாஸ், நடிகை கிரிதி சனோன், இயக்குநர் ஓம் ராவத் உட்பட படக்குழுவினர் பலரும் நேற்று காலையே திருப்பதிக்கு வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து காலையில் நடிகர் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அப்போது அங்கு ரசிகர்கள் பலரும் கோவில் முன் கூடியதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டார்.
பின்னர் மாலையில், 'ஆதி புருஷ்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை கிரிதி சனோன் மேடையில் இருக்கும்போது, ரசிகர்கள் பலரும் தங்கள் கேள்விகளைக் கேட்டனர்.
அப்போது ஒருவர் நடிகர் பிரபாஸிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வியைக் கேட்கவே, அதற்கு பதிலளித்த பிரபாஸ், திருமணம் ஒருநாள் நடக்கும். அதேசமயம் அந்த திருமணம் கண்டிப்பாக திருப்பதியில் வைத்துதான் நடக்கும் என்று வெளிப்படையாகக் கூறினார். அவர் கூறும்போது அருகில் கிரிதி சனோனும் இருந்தார்.
முன்னதாக பிரபாஸும், கிரிதி சனோனும் டேட்டிங் செய்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் ஒரு செய்தி பரவிவந்த நிலையில், அந்த செய்திகளை கிரிதி சனோன் திட்டவட்டமாக மறுத்ததோடு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.