விமர்சனம்: 'வித் லவ்' - தியேட்டருக்கு போகலாமா? வேண்டாமா?
ரேட்டிங்(3.5 / 5)
மலையாளத்தில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் அனஸ்வர ராஜன் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி தந்திருக்கும் படம் வித் லவ் (With Love). டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷந்த் ஜீவிந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.
சத்தியாவின் (அபிஷந்த்) அக்கா, தனது தம்பி திருமணம் செய்து கொள்வதற்காக பல பெண்களை பார்க்கிறார். ஒரு நாள் ரெஸ்டாரண்டில் ஒருத்தன் தம்பியை வரசொல்லி அங்கே தனக்கு தெரிந்த மோனிஷாவையும் (அனஸ்வர ராஜன்) வர சொல்லி இருவரையும் பேச வைக்கிறார். இருவரும் பேசும் போது இருவருமே திருச்சியில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்று தெரிய வருகிறது. இருவரும் தங்களின் கடந்த காலத்தின் 'ஒரு தலை காதலை' பகிர்ந்து கொள்கிறார்கள்.
மோனிஷா "நாம் இருவரும் பள்ளி நாட்களில் ஒரு தலையாக காதலித்த காதலன் - காதலியை தேடி கண்டுபிடித்து அன்று சொல்லாத காதலை இப்போது சொல்வோம். அதன் பின்பு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்." என்று கண்டிஷன் வைக்கிறார்.
சத்தியாவும் இந்த நிபந்தனையை ஏற்று கொள்கிறார். இருவரும் காதல் நினைவுகளுடன் தாங்கள் சொல்லாத காதலை சொல்வதற்காக திருச்சி நோக்கி பயணம் செய்கிறார்கள். இந்த பயணத்தின் முடிவு என்ன? என்பதை சொல்கிறது வித் லவ்.
சத்தியமாக, உண்மையாக, உறுதியாக வித் லவ் பெயரில் மட்டுமில்லாது, படத்தின் பல காட்சிகளில் காதலை சிறப்பாக கையாண்டுள்ளார் டைரக்டர். காதலுடன் சேர்த்து சிறிது நகைச்சுவையும் கலந்து தந்திருக்கிறார் டைரக்டர். முதல் பாதியில் பள்ளி காதலை சொன்ன பிறகு, பல படங்களை போல் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விடுவார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது, நாம் நினைத்ததை பொய்யாக்கி படம் வேறொரு கோணத்தில் நகர்கிறது. காதல் மட்டுமில்லாது ஆசிரியர் - மாணவன் உறவை சொல்லும் இடம் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது.
திருச்சியில் தன் பள்ளி நாளில் ஒரு தலையாய் விரும்பிய அனிஷாவை, சத்தியா நீண்ட வருடத்திற்கு பிறகு சந்திக்கும் போது "அன்றைக்கு சொல்ல வந்ததை இன்னைக்கு சொல்லு" என்று அனிஷா கேட்பதும், சத்தியா அன்று சொல்லாத காதலை இப்போது சொல்ல தயங்கும் இடத்தில், நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் சொல்ல பயந்த காதலை இப்போது சொன்னால் எப்படி இருக்கும் என்ற உணர்வு வருகிறது. இருபாலர் கல்வி நிறுவனங்களில் படித்த அனைவருக்கும் இந்த படத்தை கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
கொஞ்சம் கிளாமருடன், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் கேரக்டரில் அனஸ்வரா 'ஆஹா' சொல்ல வைக்கிறார். சேச்சி தமிழ் நாட்டின் அடுத்த கனவு கன்னி ஆனாலும் ஆகலாம். அனிஷாவாக நடிக்கும் காவியாவின் நடிப்பு சிறப்பு. அபிஷந்த் 'சத்யா' கேரக்டரில் சரியாக பொருந்தி போகிறார். பள்ளி நாட்களில் சற்று கோபக்கார மாணவனாகவும், சம காலத்தில் ஒரு சராசரி இளைஞனாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் தேவா இசையில் நேருக்கு நேர் படத்தில் வந்த அவள் வருவாளா பாடலை அப்படியே Copy - Paste செய்ததை தவிர்த்து இருக்கலாம். தெளிவான திரைக்கதைக்கு சுரேஷ் குமாரின் படத் தொகுப்பு கைகொடுத்துள்ளது.
இருந்தாலும் ஒரு சில குறைகளும் படத்தில் இருக்கத்தான் செய்கிறது. அபிஷந்த் நன்றாக நடித்திருந்தாலும் ஒரு சில இடங்களில் ஓவர் ஆகட்டிங் செய்கிறார். குடிப்பது போல் வந்திருக்கும் காட்சிகளை தவிர்த்திருந்தால் படம் இன்னும் சிறப்பான 2k கிட்ஸ் படமாக வந்திருக்கும். வித் லவ் காதலர் தின அட்வான்ஸ் டீர்ட்.

