ரஜினிக்கு மறுவாழ்வு அளித்த பெண்மணி!

ரஜினிக்கு மறுவாழ்வு அளித்த பெண்மணி!
Published on

 ‘தர்மயுத்தம்’  திரைப்படத்திற்கான அன்றைய  படப்பிடிப்பினை முடித்து விட்டுப் பிரகாசமான விளக்கின் ஒளியிலிருந்து விடுபட்டு வந்தவர், அங்கிருந்தப் பெண்மணியைக் கவனித்தார். சில நொடிகள் திகைத்து நின்றுவிட்ட கதாநாயகன் அப்படியே பார்த்தது பார்த்தபடியே இருந்தார். பிறகு அந்த அம்மாளிடம்  வந்து,

"அம்மா, நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். உங்களிடம் சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கு!" என்றார். 

அந்த நடிகரைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்ததெல்லாம் நினைவு வர, “நானும் உனக்குக் கொஞ்சம் அறிவுரை சொல்லத்தான விரும்புகிறேன்!" என்றார் அப்பெண்மணி. அறிவுரையும் கூறினார்.

 சில நிமிஷங்கள் ஒன்றும் பேசாமல் அந்தப் பெண்மணியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, "நான் மீண்டும் உங்களுடன் பேச வருகிறேன்" என்றார்.

இந்த சந்திப்புத்தான் ரஜினியின்  வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து, அவரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணையும் பல சாதனைகளைச் செய்யும்படி செய்தது.

 ரு வாரம் கழித்து அப்பெண்மணியை  தேடிக்கொண்டு வந்து விட்டார் ரஜனிகாந்த்.

 அப்பெண்மணிக்கு  என்ன பேசுவது என்றே தோன்றவில்லை.  அவர் அந்தச்  சந்திப்புக்குத் தயாராகவும் இல்லை.

"அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள். அப்புறம், எனக்கு ஏதோ அறிவுரை சொல்ல நினைக்கிறேன் என்று அன்றைக்குச் சொன்னீர்களே, அதையும் சொல்லுங்கள்” என்றார் ரஜினி.

 திகைத்துப்போன அப்பெண்மணி, தான் ஏதோ படப் பிடிப்பின்  ஒரு காட்சியில் கலந்து கொண்டிருப்பது போல  உணர்ந்தார். ஆனால், ரஜனிகாந்திடம்  இருந்த சத்தியத்தையும், தீவிரத்தையும்  அவரால் சந்தேகிக்க முடியவில்லை. அச்சமயம்  ரஜனிகாந்த் அவருடைய மன  சஞ்சலத்தின் உச்ச நிலையில் இருந்தார் என்பது அப்பெண்மணிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினியின்  குடிப் பழக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர், "குடிப்பது பெரிய தவறல்ல. ஆனால் வேலை நேரத்தில் குடிப்பது மிகப் பெரிய தவறு” என்று ரஜினியிடம் கூற, ரஜினியோ,   

“இனிமேல், சத்தியமாக என் வேலை நேரத்தின்போது நான் குடிக்க மாட்டேன்''  என்று அப்பெண்மணிக்கு வாக்களித்தார்.

 ரு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து அப்பெண்மணிக்கு  போன் வந்தது. டாக்டர் செரியனும் ரஜனிகாந்துடைய மனோதத்துவ டாக்டரும்  பேசினார்கள்.

 “ரஜினி அவர்கள்  அம்மா, அம்மா என்று அழைத்துக்கொண்டே இருக்கிறார். யார் என்று அவரை விசாரித்தபோது உங்களுடைய பெயரையும் விலாசத்தையும் சொன்னார்”  என்றார்கள்.

ரஜினியை பார்க்க மருத்துவமனைக்குப் போன அப்பெண்மணிக்கு மனவேதனை அளிக்கும் காட்சி காத்திருந்தது.

ரஜனிகாந்த் ஒரு கொடூர மிருகம் போல இருந்தார். மருத்துவர்களாலோ, நர்சுகளாலோ வேறு யாராலும் அவரை அடக்க முடியவில்லை. “ஒரு சில வாரங்கள் ரஜினி எங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று மருத்துவர்களிடம் கேட்டார் அப்பெண்மணி.

அவர்கள் உடனடியாகச் சம்மதித்துவிட்டார்கள்.  அதற்குப் பிறகு நான்கு மாதங்கள் அப்பெண்மணியின் வீட்டில்தான் இருந்தார் ரஜினிகாந்த்.

சில நாட்களுக்குப் பிறகு, ரஜினி டாக்டருக்கு போன் செய்து. முந்தைய நாள், தான் நன்றாக தூங்கியதை சொன்னார். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். “இதை  எப்படி நீங்கள் சாதித்தீர்கள்! நாங்கள் மார்பியா கொடுத்தும் கூட எங்களால் அவரைத் தூங்க வைக்க முடியவில்லையே!” என்று கூறி ஆச்சரியப்பட்டார் டாக்டர் செரியன்.  மேலும், "நீங்கள் மாபெரும் அற்புதத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நம்பிக்கை விட்டுப் போன ஒரு மனிதனுக்கு மறு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றார் டாக்டர்.

பின்குறிப்பு:- ரஜினிக்கு மறுவாழ்வு அளித்த அப்பெண்மணி சமூக சேவகி ரெஜினு வின்சென்ட். இவருடைய வீட்டில்தான் ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போதுதான் இந்த சந்திப்பும் ஏற்பட்டது!

போட்டி :

1. "பத்த வச்சுட்டியே பரட்டை...." இந்த வசனம் பேசிய திரைப்படம் என்ன?

2. ஒரு பாடல் முழுவதும் பாக்கெட்டில் கைவைத்துக்கொண்டு பாடும் பாடல் இடம்பெற்ற படம் எது?

3. ரஜினி தன் சொந்த குரலில் பாடிய பாடல் இடம்பெற்ற தமிழ் படம் எது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com