திரைத்துறைக்குள் நுழைந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் தற்போது இறுதியாக பில்லியனர் (Billionaire) பட்டியலில் இணைந்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹12,490 கோடி) என்ற வியக்க வைக்கும் அளவை எட்டியுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025-இன் முடிவுகளின்படி, ஷாருக்கான் தொடர்ந்து இந்தியாவின் பணக்கார நடிகராகத் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார். அத்துடன் உலக அளவில் பல இடங்கள் முன்னேறியுள்ளார்.
ஷாருக்கானின் சொத்து வளர்ச்சியைக் குறிப்பிட்டுள்ள ஹுருன் இந்தியா பட்டியல், "பாலிவுட்டின் 'பாட்ஷா' ஷாருக்கான் (59), முதல்முறையாக ₹12,490 கோடி சொத்து மதிப்புடன் பில்லியனர் கிளப்பில் இணைகிறார்" என்று கூறியுள்ளது.
ஷாருக்கான் இப்போது பல சர்வதேசப் பிரபலங்களை விட அதிகப் பணக்காரராக உள்ளார். அவர்களில், டாம் க்ரூஸ் ($870 Million) டெய்லர் ஸ்விஃப்ட் ($1.3 பில்லியன்), அர்னால்ட் ஷுவார்ஸ்னேக்கர் ($1.2 பில்லியன்), ஜெர்ரி சீன்ஃபீல்ட் ($1.2 பில்லியன்), மற்றும் செலினா கோமஸ் ($720 மில்லியன்) போன்றோர் அடங்குவர்.
ஷாருக்கான் பல ஆண்டுகளாகவே இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகராக இருந்து வருகிறார். ஆனால், அவரைத் தொடர்ந்து வரும் அடுத்த பணக்கார நடிகருக்கும் இவருக்கும் இடையிலான சொத்து இடைவெளி தற்போது அதிகரித்து வருவதாக இந்தப் புதிய பட்டியல் குறிப்பிடுகிறது.
ஷாருக்கானின் வர்த்தகப் பங்குதாரரான ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினர், ₹7,790 கோடி நிகர மதிப்புடன் இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர். ஹிருத்திக் ரோஷன் ₹2,160 கோடி சொத்து மதிப்புடன் இவர்களை விட வெகு பின்னால் மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஹுருன் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஷாருக்கானின் நிகர மதிப்பு $870 மில்லியனாக இருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய $1.4 பில்லியன் சொத்து மதிப்பு, ஷாருக்கானை உலகின் முதன்மை வருமானம் திரைப்படங்களில் இருந்து வரும் உலகின் பணக்கார நடிகராக ஆக்குகிறது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்தி சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு உயர்வுக்கு, அவரது பல்வேறு முதலீடுகளே காரணம். இதில், அவரது ரெட் சில்லிஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) ஸ்டுடியோ, மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கிரிக்கெட் அணிகளில் அவர் செய்துள்ள முதலீடுகளும் அடங்கும். மேலும், மத்திய கிழக்குப் பகுதிகளில் ஷாருக்கான் கணிசமான அளவில் ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் செய்துள்ளார்.