தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும்இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் என்கிற நட்சத்திர ஓட்டலில் நடந்ததில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பிடித்தன.
அவற்றில் சில.. இதோ..
வெரிமிலியன் ரெட் புடவை.. ஜேட் போல்கி நகை!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண உடைகளை விசேஷமாக வடிவமைத்தது மோனிகா ஷா மற்றும் கரிஷ்மா என்ற பாலிவுட் டிசைனர்கள்.
நயந்தாரா அணிந்த அடர் சிவப்பு நிற (வெர்மிலியன் ரெட் )புடவை முழுக்க முழுக்க கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டதாம். கர்நாடகாவில் ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட கோயிலில் உள்ள உருவச் சிலைகளை மாதிரியாகக் கொண்டு இந்த புடவையில் எம்ப்ராய்டரி செய்தார்களாம். நயந்தாராவின் பிளவுஸ் கைகளில் மிகவும் நுணுக்கமாக மஹாலட்சுமி உருவம் நெய்யப்பட்டிருக்கிற்து. புடவைத் தலைப்பில் நயன் மற்றும் விக்கியின் உருவங்களும் பெயர்களும் நெய்யப்பட்டனவாம்.
இந்த புடவைக்கு மேட்சாக ஜேட் எனப்படும் பச்சை மரகதக் கற்கல் பதிக்கப்பட்டஏழடுக்கு ஹாரம், சோக்கர் போல்கி நெக்லஸ், நெத்திச் சுட்டி, காதணிகள் இத்யாதி..
விக்னேஷ் சிவன் அணிந்திருந்த வேஷ்டி, குர்தா, ஷால் ஆகியவையும் இதே டிசைனர்களால் விசேஷமாக வடிவமைக்கப் பட்டதுதான். வெண்ணிறப் பட்டாடையில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு அம்சம்களை பிரதிபலிக்கும் வகையில் எம்ப்ராய்டரி செய்திருக்கிறார்கள்.
ஆலப்புழாவிலிருந்து வந்த அதிசய ஜோடி..
விக்கி–நயன் திருமணத்தை காண தன் கர்ப்பிணி மனைவி ஸ்ருதி ஆசைப்பட்டார் என்பதற்காக, சரத் என்ற இளைஞர் கேரளா, ஆலப்புழாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் 700 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தது அங்கிருந்தோரை பிரமிக்க வைத்தது.
கேரளா ஆலப்புழையிலிருந்து ஜூன் 9-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்ட இந்த ஜோடி, 13 மணி நேர பயணத்திற்கு பிறகு இரவு 8 மனிக்கு சென்னை வந்தடைந்திருக்கிற்து. நயன் – விக்கி திருமணம் நடந்த அதே ஓட்டலில் மாலை வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தேறின. அங்கு இந்த கேரள தம்பதி சில மணி நேரம் காத்திருந்தும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர். அவர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:
'' ''எனக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது.. என் கணவரிடம் சொன்னதும், அவர் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். நான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவ்வளவு தூரம் டூ-வீலரில் பயணம் எனக் கேட்டு, மருத்துவரின் ஒப்புதல் கொடுத்த பின்புதான் என்னை அழைத்து வந்துள்ளார்'' என்று ஸ்ருதி சொல்ல..
''காதலித்து கல்யாணம் செய்து கொண்ட மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ஆசைப்பட்டு ஒரு விஷயம் கேட்டால், செய்யாமல் இருக்க முடியுமா?! அதான் அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இங்கு அழைத்து வந்தேன்'' என்றார் சாத்.
''நயன் – விக்கி ஜோடியை நேரில் பார்க்க முடியாததில் வருத்தம் ஏதும் இல்லை. அதையும் எதிர்பார்த்துதான் வந்தோம். ஆனால் ஒருவேளை சந்தித்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இப்படி வந்ததே எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார் ஸ்ருதி.
பலாக்காய் பிரியாணி.. பலே ருசி!
இந்த ஸ்டார் ஜோடி திருமணத்தில் முழுக்க முழுக்க கேரள பாணி உணவுகள் பரிமாறப்பட்டன. ஒரு நபருக்கு ரூ. 3,500 மதிப்பில் வழங்கப்பட்ட இந்த உணவுகளில் பன்னீர் பட்டாணி கறி, பருப்பு கறி, அவியல், பொரியல் என ஏராளமான வகைகள் இடம்பெற்றன. ஆனால் அனைத்தும் சைவம் மட்டுமே!
''எங்கள் குடும்பங்களில் திருமணத்தின்போது அசைவம் பரிமாறூவது வழக்கமில்லை. சைவ விருந்துதான் பழக்கம்'' என்று சொல்லி விட்டனர் மணமக்களின் குடும்பத்தினர்.
இந்த விருந்தில் அனைவர் கவனத்தையும் பெரிதும் கவர்ந்தது பலாக்காய் பிரியாணிதான். இதற்கு கதல் பிரியாணி என்றும் பெயருண்டு. இப்போது அந்த பிரியாணி குறித்த மோகம் தற்போது அதிகமாகியுள்ளது. அதனை எப்படி சமைப்பது என்றெல்லாம் கூகுளில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
அந்த கதல் என்கிற பலாக்காய் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம்..
தேவையான பொருட்கள்: பலாச்சுளைகள் – 250 கிராம், பலாக்காய் – 150 கிராம், பட்டை – 1, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, உப்பு – சிறிதளவு, தயிர் – 50 மில்லி, இஞ்சி விழுது – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 3 (நீளமாக நறுக்கி, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, புதினா இலை, சிறிதளவு, பாஸ்மதி அரிசி – 1 கிலோ
அரைக்க: கொத்தமல்லித்தழை – அரைக் கட்டு, புதினா இலை – 1 கட்டு, பச்சை மிளகாய் – 2, மிளகு – 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் மூடி.
தாளிக்க: நெய் – 100 மில்லி, சீரகம் – சிறிதளவு, சோம்பு – சிறிதளவு.
செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து சூடானதும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, முக்கால் வேக்காடு வெந்ததும், வடித்து ஆற விடவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். பலாச்சுளைகளைப் பொடியாகவும், பலாக்காயை நீளமாகவும் நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்துத் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், பலாக்காயைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
இதில் மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை நல்ல வாசனை வரும் போது தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சிறிது நேரம் கழித்து வடித்த அரிசியை அரை பங்கு கலவையில் சேர்க்கவும். இதன் மேல் வெங்காயம், பலாப்பழம், கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவவும். மஞ்சள்தூளை சிறிது தண்ணீரில் கரைத்து, பிரியாணியின் மேல் தெளித்து விடவும்.
பாத்திரத்தை அலுமினிய ஃபாயிலால் மூடி சிறு தீயில் தம்மில் 25 நிமிடங்கள் வைக்கவும்.சுவையான கதல் பிரியாணி ரெடி!
திருப்பதியில் சர்ச்சை..
திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்த நயந்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்து போட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கினர்.
திருப்பதி மாட மாடவீதிகளில் செருப்பு அணிந்து பக்தர்கள் நடக்க தடை உள்ள நிலையில் நயனதாரா காலில் செருப்புடன் வலம் வந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் விளக்கமளித்தார்.
''எங்கள் திருமணத்தையே திருப்பதியில்தான் நடத்த விரும்பினோம். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நடத்த முடியவில்லை. நானும் நயனும் கடவுள் பக்தி நிரம்பியவர்கள். எங்கள் திருமணம் நடந்து முடிந்த கையோடு, வீட்டுக்குக் கூட செல்லாமல் இங்கு பெருமாள் கல்யாண உற்சவத்தில் பங்கு பெற வந்தோம். ஆனால் அதன்பிறகு மாடவீதியில் போட்டோ ஷூட் பரபரப்பாக நடத்த வேண்டியிருந்ததால், அப்போது காலில் செருப்பு அணிந்ததை மறந்து விட்டோம். இதறகாக வருந்துகிறோம்'' என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ள்ளார்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் அனுப்பிய நோட்டீஸுக்கும் விளக்கம் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.