ராஷ்டிரபதி பவனில் பாடினோம்!

ராஷ்டிரபதி பவனில் பாடினோம்!
Published on

பேட்டி; சாருலதா.

கர்னாடக இசையுலகின் இளம் பாடகிகளான வித்யா, வினயா, சைந்தவி, சுசித்ரா ஆகிய நால்வர் இணைந்த  V2S2 என்ற கூட்டணி இப்போது சக்கைபோடு போடுகிறது.

இந்த நால்வர் கூட்டணியில் ஒருவரான வித்யா கல்யாணராமனிடம் இதுகுறித்துக் கேட்டோம்..

யுவ கலா பாரதி மற்றும் பாரத கலா ரத்னா விருதுகள் பெற்றவரும், கர்நாடக இசை இளைஞர்கள் சங்கத்தின் தலைவராக 2005 முதல் 2008 வரை இருந்தவர் திருமதி வித்யா கல்யாணராமன்.

உங்களின் பரபரப்பான இந்த நால்வர் கூட்டணி எப்படி உருவானது?

அது எதேச்சையாக அமைந்த ஒன்று. ஒருமுறை கேஷூவலாக ஒரு பாடலில் நாங்கள் நால்வரும் சேர்ந்து பாடியிருந்தோம் . அதைக் கேட்ட சுபஸ்ரீ தணிகாசலம் அக்கா, வியந்து பாராட்டினார். ''உங்கள் நால்வர் குரல் சேர்ந்து நன்றாக உள்ளது. மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் நாலு பேரும் சேர்ந்து திருப்பாவை பாடி வெளியிடுவோம்'' என்றார்..அது எதிர் பார்க்காத அளவு வெற்றி பெற்றது. இரண்டு நிமிடங்களில் யாரும் பாடும் விதமாக எளிய முறையில் செய்தது அது. பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்பில் கற்றுக் கொள்ள அனுப்பியதாக கேள்விப் பட்டோம். அதன்பின் நாங்கள் திருவெம்பாவை, பாரதியார் பாடல்கள், திருப்புகழ் என்று வரிசையாக இணைந்து பாடியதில், V2S2 என்ற கூட்டணி ஹிட் ஆனது.

எங்கள் கூட்டணி யதேச்சேயாக நடந்த ஒன்று ,தனிப்பட்ட தனித்தனி பாணி கொண்டவர்கள் என்றாலும், நால்வரும் நேரம் ஒதுக்கி, சேர்ந்து பாடும் பாடலை முடிவு செய்து, ரிகர்சல் பார்த்து, தேவையான மாற்றங்கள் செய்கிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து அந்த பாடல் வெளிவர எந்த ஈகோவும் இன்றி முயல்கிறோம். அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

சரி.. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. யாரிடம் இசைப்பயிற்சி பெற்றீர்கள்?

சிறு வயதிலேயே எனக்கு இசையார்வம் உண்டு. என் தாய் வழி பாட்டி திருமதி வீணை ஜெயம் இசை வகுப்பு எடுத்துக் கொண்டு இருப்பார். அம்மாவும் பாடுவார். அப்பா சாய் பஜன் நன்றாக பாடுவார். அண்ணாவும் பாடுவார்.  இந்த சூழலில் இருந்ததால் எனக்கும் அதே ஆர்வம் இருந்தது.  ஒரு முறை போட்டிக்காக அம்மா சொல்லித் தந்த பாடலை நான் பாடினேன். அங்கு நடுவராக வந்த திருமதி. பத்மா சாண்டில்யனுக்கு என்னை பிடித்துப் போனது. அதையடுத்து அவரிடமே சேர்ந்து முறையான இசைப் பயிற்சி கற்க ஆரம்பித்தேன். அவர் வீடும் என் வீட்டருகிலேயே இருந்ததால் குருகுலம் போல் அங்கே யே அதிக நேரம் செலவு செய்து நிறைய கற்க வாய்ப்பு கிடைத்தது. பத்து வருடங்கள் அவரிடம் பயின்றேன். பிறகு அவரே திருமதி சுகுணா வரதாச்சாரி அவர்களிடம் அனுப்பினார். இன்றும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கின்றேன்

முதல் கச்சேரி?

நாங்கள் இருந்த பகுதியில் பிள்ளையார் கோவிலில். உண்மையில் ஒரு  போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்ததற்கு அவர்கள் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் இரண்டு மணி நேரம் பாடுவதையே பரிசாக சொல்லியிருந்தனர் எனினும் ராம நவமிக்காக பிள்ளையார் கோவிலில் பாடிய பின் அங்கு சென்று பாடினேன்.எதேச்சையாக நடந்த ஒன்று தான் அது.

இசைத்துறையை கேரியராக எடுத்தது எப்படி?

நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற ஆரம்பித்தது எனக்கு ஒரு உந்து கோலாக இருந்தது. 7-ம் 8-ம் வகுப்பில் படிக்கும் போது இசையையும் வாழ்க்கையில் முக்கியமாக கொள்ள வேண்டும் என தோன்றியது.

இசைக் கருவிகள் வாசிப்பீர்களா?

வயலின் கற்றுக் கொண்டுள்ளேன். எப்போதாவது நேரம் கிடைக்கும் போது இப்போதும் வாசிப்பேன். வாய்ப்பாட்டு பாடுபவர்கள் ஒரு இசைக்கருவியும் இசைக்க தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது. ஸ்வரங்கள் புரிந்து கொள்ள, எழுத உதவும்.

இசை மழலை குழுவில் இடம் பெற்று இருந்தீர்களே?

ஆமாம். அபஸ்வரம்  திரு ராம்ஜி அங்கிள் சிறு வயது குழந்தைகள் வைத்து இசை மழலை குரூப் ஆரம்பித்த போது, அதில் எனக்கும் அதில் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் குழந்தைகள் மேடை ஏறி கச்சேரிகள் செய்வது பழக்கம் இல்லை. ராம்ஜி சார் எங்களை பயிற்றுவித்து அனேக இடங்களில் மேடை ஏற்றினார். அதனால் மேடை பயம் காணாமல் போனது.ஒரு முறை வெளியூருக்கு கச்சேரிக்கு அழைத்துப் போன போது ''தொண்டைக்கு சிரமம் கொடுக்காமல் அமைதியாக வாருங்கள்'' என்றார். ஆனால் அந்த வயதில் விவரமின்மையால் இரவு முழுவதும் பஸ்ஸில் சத்தம் போட்டு பேசிக் கொண்டே சென்றோம். மறு நாள் மேடையில் தொண்டை கட்டி பாட முடியாமல் திண்டாடினோம். இது நம் குரல் பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் அனுபவம் ஆயிற்று.

இதில் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களுடன் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அவர் ஜனாதிபதியாக இருந்த சமயம்.. டில்லி தமிழ் சங்கத்தில் இசை மழலை கச்சேரிக்கு அழைத்திருந்தனர். அப்போது அக்டோபரில் அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளில் எங்களை ராஷ்டிரபதி பவனில் 45 நிமிட தேனீர் விருந்தில் கலந்து கொள்ள அழைத்தார்.ஆனால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் எங்களுடன் செலவிட்டார்.

ராஷ்டிரபதி பவனில் கம்பீரமாக போய் பாடி அவரது கரத்தினால் தந்த நினைவுப் பரிசும் பெற்று வந்தது என்றும் மறக்க முடியாத விஷயம். ''என்னம்மா வித்யா ,என்ன படிக்கிறாய்?'' என தமிழில் கேட்டு அன்பாக பேசினார்.குட்டி குழந்தைகளுக்கு – தானே முன் வந்து இனிப்புகள் பரிமாறிய அவரது எளிமை வியப்பான ஒன்று. உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு அவரது தன்மையான விருந்து ,எங்களுக்கு ஒருபெரும் பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும்.

மறக்க முடியாத வேறு அனுபவங்கள்?

மியூசிக் அகாதமியில் ஒரு முறை சர்வாணி சங்கீத சபாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என்ற முறையில் கச்சேரி நடத்தினர். பிறகு பாடிய அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கும் போது அதை கொடுத்தவர் அதனுடன் தான் அணிந்திருந்த மோதிரத்தை எனக்கு கொடுத்தார். சிறியவள் நான், எதிர்பாராத பரிசு, அதனால் ''வேண்டாம் . நன்றி'' என்று சொன்னேன். அதற்கு அவர் ''உன் சங்கராபரணத்தின் பரிசு இந்த ஆபரணம். ஏற்றுக் கொள்'' என்றார்.

சாஸ்திரி பவனில் ஒரு கச்சேரியில் ஒரு ரசிகர் கைக்கடிகாரம் கொடுத்தார்.ஆரணியில் ஒரு கோவிலில் ராம நவமி கச்சேரி முடிந்து வெளியில் வந்த என்னிடம் துணி அயர்ன் செய்யும் தொழில் செய்பவர் அன்றைய வருமானக் காசை என் கையில் கொடுத்துவிட்டு சென்றார்.தமிழ் பாட்டு பாடியது அவர் மனதைத் தொட்டிருக்க வேண்டும். என்ன கொடுக்கிறார்.. யார் கொடுக்கிறார் என்பதில்லை, நஅம் பாடுவது  ஒருவர் மனதில் சந்தோஷ நிறைவை ஏற்படுத்துகிற்து என்ற உணர்வே சிறந்த பரிசு!

வேற்று மொழி பாடல்கள்?

எந்த மாநிலத்தில் கச்சேரிக்கு போகிறேனோ அந்த மாநில மொழியில் ஒரு பாடலாவது பாட முயற்சி செய்வேன். அப்போது அதன் அர்த்தம் தெரிந்து கொண்டு மட்டுமே பாடுவேன். அப்போதுதான் அனுபவித்து பாடமுடியும். அதேபோல், எல்லா கச்சேரியிலும் எப்போதும் தமிழில் ஒரு பாட்டோ, விருத்தமோ உண்டு.

வெளியூர் கச்சேரிகள்?

இந்தியாவின் அனேக மாநிலங்களில் பல கச்சேரிகள்  செய்துள்ளேன்..என்  குடும்பத்தில் அம்மா,அப்பா, என் கணவர், மாமியார், மாமனார் ஏன்.. என் குழந்தையும் ஆதரவாக இருப்பதால் தான் என்னால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிகிறது. நானும் என் வீட்டுக் கடமைகளையும் செய்கிறேன். இப்படி புரிதல் இருப்பதால்தான் இரண்டு மாதம் அமெரிக்க பயணம் சாத்தியமானது

கொரோனா கால அனுபவம்?

இது எதிர்பாராமல் நிகழ்ந்ததல்லவா? அதுவரை ரெகார்டிங் செய்ய பலர் எந்த வசதியும் வைத்திருக்கவில்லை. நான்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு ஒருவரும் இல்லாத சபாக்களில் பாடி பதிவு செய்து வெளியிட்டனர்.முறையான பாதுகாப்புடன் போய் வந்தோம்.

யாரும் எங்கும் போக முடியாத சந்தர்ப்பத்தில் அவரவர் இடத்தில் பாடி அதை ஒன்றாக தொகுத்து வெளியிடும் பாணி நிறைய வெளிவந்தது. அதிகம் பேர் பார்த்து கேட்டு ரசித்தனர்.டிக்கெட் மூலம் புரோக்கிரம் நடத்துவதும் நடந்தது..

இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு அறிவுரை ?

திறமையும் வாய்ப்பும் கிடைக்கும் போது விட்டுக் கொடுக்காதீர்கள். பள்ளிப் படிப்பை முன்னிட்டு பாட்டு கற்றுக் கொள்வதை விடாதீர்கள். எப்படியும் எல்லாவற்றையும் சமாளிக்க தெரிய வேண்டும். அவற்றை நேர நிர்வாகத்தை முன்னிறுத்தி பழகிக் கொள்ளுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். என் சொந்த அனுபவம் இது!

-என்று சொல்லி முடித்த வித்யா கல்யாணராமன், நமக்காக ஸ்பெஷலாக காஞ்சி மாமுனிவர் இயற்றிய 'மைத்ரீம் பஜத' பாடலைப் பாடி விடைகொடுத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com