தமிழுக்கு கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பது போலத்தானே’

தமிழுக்கு கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பது போலத்தானே’
Published on

முகநூல் பக்கம்

மெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ இரண்டு மருத்துவப் பெருந்தகைகள் ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளை சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்தார்கள். அதைத் தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு தொடங்கியது. 2016 லிருந்து 2020 வரை இந்த நாலு வருடங்களும் நான் எழுத்து வேலையை தள்ளி வைத்துவிட்டு இரண்டு பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கைகளுக்கும் முழுநேரமாக நிதி சேகரிப்பில் மும்முரமாகினேன்.

சிறைக்கைதி :

தமிழ்நாட்டில் ஒரு சின்ன கிராமத்தில் இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு குற்றம் செய்து, நாலு வருடம் சிறையில் இருந்தான். அவன் வெளியேறியபோது அவன் உழைப்புக் கூலியை சிறை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தார்கள். வந்ததும் அவன் செய்த முதல் வேலை, அந்தப் பணத்தை அப்படியே ஹார்வர்டுக்கு அனுப்பியதுதான். எப்படியோ, யாரையோ பிடித்து பணத்தைச் செலுத்தி விட்டான். அவனுக்கு ஹார்வர்டு எங்கே இருக்கிறது, அந்தப் பெயரை எப்படி எழுத்துக் கூட்டுவது என்பதெல்லாம் தெரியாது. பிழையான எழுத்துக்களுடன் பணம் வந்து சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை அவனிடம், 'எதற்காக பணம் அனுப்பினாய்' என்று கேட்டது. அவன், 'ஹார்வர்டு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் வளராது; வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் வளரும். அதனால்தான் பணம் அனுப்பினேன்' என்றான்.

துப்புரவுத் தொழிலாளி:

அவருடைய பெயர் தேசோமயானந்தன். பாரிஸிலிருந்து எப்படியோ என் நம்பரை தேடிப்பிடித்து அழைத்திருந்தார். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு எப்படி பணம் அனுப்புவது என்று கேட்டார். நான் சொன்னேன். அவர் வயது 77. நாற்பது வருடங்களாக துப்புரவு தொழில் செய்கிறார். திடீரென்று 500 டாலர் வந்து சேர்ந்தது. 'எதற்காக இத்தனை பெரிய தொகை?' என்றேன். அவர் சொன்னார், ' ஐயா என் அம்மா இப்ப இல்லை. தமிழுக்கு கொடுப்பது என் அம்மாவுக்கு கொடுப்பது போலத்தானே' என்றார். பின்னர் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

– அ.முத்துலிங்கம்
(அம்ருதா மாத இதழில்)

சுரேஷ் சுப்ரமணியன்  முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com