பறக்கும்  பாவைகள் – 2

பறக்கும்  பாவைகள் – 2
Published on
எங்களாலும் பறக்க முடியும்…
-ஜி.எஸ்.எஸ்.

யணிகள் அடங்கிய ஒரு விமானத்தை முதலில் ஓட்டிய பெண்மணி ஹெலன் ரிச்சி.

அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர் இவர். அவர் தந்தை ஜோசப் ரிச்சி பள்ளிகளில் மேற்பார்வையாளர். பள்ளியில் படிக்கும்போதே தன்னை வித்தியாசமாக நிலைநிறுத்திக் கொண்டவர் ஹெலன். பேன்ட் அணிந்து பள்ளிக்குச் சென்ற மிகச்சில மாணவிகளில் அவரும் ஒருவர். தன் இருபதாவது வயதிலேயே விமானத்தை ஓட்டக் கற்றுக்கொண்டார்.

அவர் தந்தை அவருக்காகவே ஒரு சிறு விமானத்தை வாங்கிக் கொடுத்தார்.  மிகத் திறமையாக விமானத்தை ஓட்டிப் பழகினார் ஹெலன். 1930 டிசம்பர் 4 அன்று அவருக்கு கமர்ஷியல் பைலட் உரிமம் கிடைத்தது.   ஆனால் விமான சர்வீஸ்கள் பெண்களை விமான ஓட்டிகளாகப் பணிய மர்த்துவதில்  விருப்பம் காட்டவில்லை.

இந்த சமயத்தில்தான் மற்றொரு பெண் விமான ஓட்டி பிரான்சிஸ் மர்சாலிஸ் என்பவர் இவரை அணுகினார்.  'தாக்குப்பிடிக்கும் சோதனை ஒன்றில் (endurance test)  ஈடுபடலாமா?' என்றார்.  பத்து நாட்கள் வானிலேயே (விமானத்தில்) பறந்து கொண்டிருக்க வேண்டும்.  இதுதான் அந்த சவால்.

சவால்  தொடங்கியது. பத்து நாட்களுக்கு மியாமி பகுதிக்கு மேலேயே விமானத்தில் வட்டமடித்தனர்.

இதில் எரிபொருளை நிரப்புவது என்பது ஒரு மிகப் பெரிய சவால்.  இது மிக ஆபத்தானதும் கூட.  இரு பெண்களில் ஒருவர் ஆகாய விமானத்தின் இறக்கை ஒன்றில் இறங்கி, எரிபொருள் குழாயை எரிபொருள் தொட்டிக்குள் திருப்பிவிட வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதையெல்லாம் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே செய்ய வேண்டும். கீழே விழுந்து விடக் கூடும்! தவிர எரிபொருள் பீய்ச்சி அடித்தாலும் ஆபத்துதான்.

இந்த இரு பெண்களும் அம்முறை 237 மணிநேரம் 42 நிமிடங்கள் விமான பயணம் செய்திருக்கிறார்கள்.  இன்றுவரை அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. 

சாதனை செய்த போதிலும் ஹெலனுக்குப் பல சோதனைகள் காத்திருந்தன.  அவரும் பிரான்சிஸ் மர்சாலிஸுமாகச் சேர்ந்து மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தார்கள். ஆனால் விமான விபத் தொன்றில் பிரான்சிஸ் இறக்க நேரிட்டது. இது ஹெலனுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஹெலன் ரிச்சி
ஹெலன் ரிச்சி

சென்ட்ரல் ஏர்லைன்ஸ் என்ற விமான சர்வீஸ் ஹெலனை விமான ஓட்டியாக பணியமர்த்தியது.  ஆனால் விளம்பர நோக்கில் மட்டுமே தன்னை அந்த விமான சர்வீஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை ஹெலன் அறிந்து கொண்டார்.  அவரை விமானம் ஓட்ட அனுமதிப்பதை விட மக்கள் தொடர்பாளராகவே அதிகம் பயன்படுத்திக் கொண்டனர்.  பேட்டிகள் அளிக்க, புகைப்படங்கள் எடுக்க எடுத்துக்கொள்ள, ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்க என்று மட்டுமே தன்னை விமான நிறுவனம் அதிகம் பயன்படுத்திக் கொண்டு விளம்பரம் தேடிக் கொள்கிறது என்பதை அறிந்து பெரும் ஏமாற்றம் அடைந்தார். தன் பணியை ராஜினாமா செய்தார்.

அரசும் பெ​ண் விமான ஓட்டிகளுக்கு ஊக்கமளிக்கவில்லை. சொல்லப் போனால் அமெரிக்க விமானத்துறை 'மோசமான சீதோஷ்ண நிலை நிலவினால் பெண்கள் விமானம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது' என்றது.

எனினும் உலகப் போரின்போது அதிக அளவில் விமான ஓட்டிகள் தேவைப் படவே ஹெலன் ரிச்சி பல ஆபத்தான சூழல்களில் விமானத்தை வெற்றி கரமாக ஓட்ட அனுமதிக்கப்பட்டார். ஆனால் போர் முடிந்து அமைதி திரும்பிய பிறகு அவருக்கான அங்கீகாரமோ விமானம் ஓட்டும் நிரந்தர பணியோ அளிக்கப்படவில்லை. 

விர விமான ஓட்டிகளின் சங்கம் ஆண்கள் நிரம்பியதாக இருந்தது.  அதில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களின் செயல்பாடு காரணமாக விமானத்தை ஓட்டும் வாய்ப்பு ஹெலனுக்கு மிகவும் அரிதாகவே கிடைத்தது.  மிகுந்த மனச் சோர்வு ஏற்பட்டு அவர் விமான ஓட்டி பதவி யிலிருந்து விலகினார்.

தொடர்ந்த காலகட்டத்தில் பெண் விமான ஓட்டிகள் ஓரளவு இடம் பெறத் தொடங்கினர் என்றாலும் வேறு மாதிரி சிக்கல்கள் தொடங்கின.  சில பயணிகள் 'உங்கள் விமானத்தை பெண்கள் ஓட்டினால் நாங்கள் அதில் பயணிக்க மாட்டோம்' என்றே கூறினார்கள். எனவே பெண் விமானிகளை அமர்த்த விமான நிறுவனங்கள் மேலும் தயங்கின.

1991ல் பார்பரா கோலினெட் என்ற பெண்மணிதான் தனது விமானத்தை ஓட்டப் போகிறார் என்பதை அறிந்ததும் ஒரு விமானி தன் பயணத்தை ரத்து செய்தார்.

2016ல் அமெரிக்காவிலுள்ள மியாமியில் இருந்து அர்ஜென்டினாவின் தலைநகரம் பியூனஸ் ஏர்ஸ் நோக்கி ஒரு விமானம் கிளம்ப இருந்தது.  அதில் விமான ஓட்டி அறையில் இடம் பெற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்பதை அறிந்ததும் ஏழு பேர் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விட்டனர்.  அவர்களில் ஒருவர் 'விமானப் பணிப்பெண்ணாக பெண்கள் தாராளமாக இடம்பெறலாம்.  உணவும் பானங்களும் அவர்கள் அளிப்பது வேறு.  விமானத்தை ஓட்டுவது என்பது வேறு.  ஏதாவது பிரச்சனை வந்தால் அவர்களால் சமாளிக்கவே முடியாது' என்று பகிரங்கமாகவே கூறினார்.  அந்த விமானம் பாதுகாப்பாக  அர்ஜென்ட்டினா தலைநகரை அடைந்தது.

 'இந்திய விமான ஓட்டிகளில் 12.4  சதவிகிதம் பேர் பெண்கள்.  இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விஷயம்.  சொல்லப் போனால் வேறு எந்த நாட்டையும் விட நம் நாடுதான் இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது'  இப்படி கூறுகிறார் இந்தியாவின் வான்வழித்  துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி.  

இன்று ஏர் இந்தியாவில் 210 பெண் விமான ஓட்டிகள் இடம் பெற்றிருக் கிறார்கள்.  இவர்களில் 103 பேர் கேப்டன்கள்.  விமானப் போக்குவரத்தை அதற்கான அறையிலிருந்து கட்டுப்படுத்தும் பணிகளில் 507 பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com