பூரி ரத யாத்திரை; கோலாகல தொடக்கம்!

பூரி ரத யாத்திரை; கோலாகல தொடக்கம்!

-எம். சத்ய நாராயணன்.

ஒடிசா மாநிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா இன்று (ஜூலை 1) கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு அருகே உள்ள பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலின் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கி 10 நாட்களுக்கு நடக்கவுள்ளது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் மிகப் பிரபலமான இந்த திருவிழாவிற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப் பட்டிருந்தது. இப்போது அந்த தடை நீக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நன்கு அலங்கரிக்கப்பட்ட 3 ரதங்களில் ஜெகந்நாதர், சுபத்திரை, பலராமர் ஆகியோர் பக்தர்கள் வெள்ளத்துக்கு நடுவே வலம் வர உள்ளனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது:

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழாவுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஜெகந்நாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க அவர் அருளை வேண்டுவோம்.

-இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்த ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதம் (ஆடி மாதம்) இரண்டாம் நாள் துவங்கி, ஒன்பது நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மேலும் இந்த ரத யாத்திரைக்காக ஒவ்வொரு வருடமும் புத்தம் புதிய தேர்கள் செய்யப்படுகின்றன. இந்த கோயிலின் தெய்வங்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகிய மூவரும் அந்த  மூன்று புதிய ரதங்களில் எழுந்தருளி யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு  அருள்பாலிப்பர். இந்த ரத யாத்திரை திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

இந்த ரத யாத்திரையின்போது பூரி மன்னர் பரம்பரை வாரிசுகள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு தேர் வலம் வரும் பாதையை சுத்தம் செய்வது சம்பிரதாயம். 

இந்த ரத யாத்திரையின் நோக்கம் – பொதுவாக மற்ற சமயங்களில் கோவிலுக்கு வந்து தன்னை தரிசிக்க இயலாத பக்தர்களுக்காக, கடவுளரே அவர்களித் தேடி ரதத்தில்  யாத்திரையாக வந்து அருள் பாலிப்பதாக ஐதீகம்.

மற்றொரு புராணக் கதையின்படி – இந்திரத்யும்னன் என்ற அரசனின் ராணியான  குண்டிச்சா தேவிக்கு வாக்களித்தபடி, ஶ்ரீஜெகன்நாதர் வருகை தருவதாக தருவதாக கூறப்படுகிறது. அந்த ஐதீகத்தின்படி பூரி ஜெகன்னாதர் கோவிலிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவிலுள்ள குண்டிச்சா கோவிலுக்கு ரத யாத்திரை கொண்டு செல்லப்பட்டு, அங்கு 8 நாட்கள் தங்க வைக்கப் படுகிறது.

இந்த திருவிழாவின் 4-ம் நாளில் லட்சுமி தேவி,  ஜெகந்நாதரை தேடி குண்டிச்சா கோயிலுக்கு வருவதாக நம்பப்படுகிறது. இவ்வாறு குண்டிச்சா கோயிலில் 8 நாட்கள் வீற்றிருந்த பிறகு, மூன்று ரதங்களும் 9- பூரி கோயிலுக்கு திரும்புகின்றன, இது பஹுதா யாத்ரா என்று அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com