என் மனசெல்லாம் மழை! கவிஞர் தாமரை பேட்டி!

என் மனசெல்லாம் மழை! கவிஞர் தாமரை பேட்டி!

பிரமோதா.

''மூப்பிலா தமிழே..தாயே.'.பாடல்தான் இப்போது இணையத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்! இசைப்புயல்  ஏ.ஆர் ரகுமான் உருவாக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் கவிஞர் தாமரையின் பாடல் வரிகள் ஆல்பத்தை கேட்கையில் கிறங்க வைக்கிறது

எப்படி அமைந்தது இந்த காம்பினேஷன்?

தென்றல் காற்று வருட..ஒரு பௌர்ணமி இரவில் கல்கி ஆன்லைனுக்காக தாமரையை சந்தித்த தருணம் குற்றால சாரல் அனுபவம். அவர் சொல்லத் தொடங்கினார்..

''கடந்த மாதம் துபாயில் வெகு விமரிசையாய் இந்த பாடல் வெளியிடப்பட்டது. ஆனால் வீட்டுக் கடமைகள் காரணமாக என்னால் போக முடியவில்லை'' என்ற தாமரை, ''ஆனால் இந்த ஆல்பம் உருவாக்குவதற்கான ஆயத்த பணிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன.. (கல கல சிரிப்போடு.. தொடர்ந்தார்)..ஒரு நாள் மாலையில் ரகுமான் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. உற்சாகமாய்ச் சென்றேன். இந்த புதிய ஆல்பம் குறித்து ரத்தின சுருக்கமாக விவரித்தார். ''தமிழர்களை தட்டி தூக்கும் அளவுக்கு பாடல் வரிகள் வேண்டும்'' என்றார்.. ''அவ்வளவுதானே.. செஞ்சுட்டா போச்சு'' என்று பாடல் எழுதத் தயாராகி விட்டேன்.

என்ன மாதிரியான ஆல்பம் கேட்டார்எளிமையாக இருந்ததா?

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்த சந்திப்பு அது..ரகுமான் சார் சொன்னது இதுதான். ''கொரோனாவால் துவண்டு போயிருக்கும் தமிழர்களை உற்சாகப் படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருக்க வேண்டும். இணையம் மூலம் உலகத் தமிழர்களை ஓன்றிணைக்கப் போகிறோம்'' என்றார்.  ''பட்டையை கிளப்பி விடுவோம் சார்'' என்று நானும் தயாராகிவிட்டேன்

உங்கள் பாடல் வரிகளுக்கேற்ப ரகுமான் சார் மெட்டு போட்டாரா?

இல்லை இல்லை.. (அவசர அவசரமாக பதில் வருகிறது).. ஏற்கனவே மெட்டு தயாராக இருந்தது.. சில நிமிடங்கள் கண்மூடி அந்த மெட்டுகளை கேட்டேன்…மனதில் உள்வாங்கினேன்..  அதைக் கேட்கும் போதே..'இது வேற லெவல்' என்று மனதிற்குள் ஒடியது..அந்த உத்வேகத்தில் அங்கேயே அமர்ந்து மளமளவென்று பாடலை ரெடி செய்து விட்டேன்…

ஆஹாஅந்த அனுபவத்தை விவரியுங்களேன்..

அது ஒரு சுகானுபவம்…(கண்கள் விரிகிறது கவிஞருக்கு). திரைப்பட  பாடல்கள் என்றால் அதற்கு தனி வரையறை உண்டு. அதற்குள்தான் பாடல் வரிகளை தயார் செய்ய வேண்டும். அவ்வளவு சுதந்திரம் இருக்காது..ஆனால் தனிப் பாடல் ரகங்கள் வேறு மாதிரி! நமக்கு தேவையான சுதந்திரம் கிடைக்கும். புகுந்து புறப்படலாம்..அப்படி புகுந்து புறப்பட்ட பாடல்தான்.. மூப்பிலா தமிழே..(மென்மையாக சிரிக்கிறார்).

சுதந்திரம் ஓகே.. பாடல் உருவான அனுபவம் எப்படி?

மெட்டுகளை கேட்கும்போதே, இப்படித்தான் பாடல் வரிகள் இருக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்து விட்டேன். நான்கு அடியில் பாடல்கள்.. முப்பது பத்தியாக பிரித்து கொண்டேன். தமிழ் மொழியின் பெருமை பேச ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்..நாம் அதிலிருந்து எப்படி வித்தியாசப்படுவது? அதேசமயம் நமது பழம் பெருமையையும்..நினைவு படுத்த வேண்டும். எதிர்கால தமிழ் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை செய்தேன். முத்தமிழோடு இப்போதைய வணிக தமிழ், விஞ்ஞான தமிழ் என்று ஆறேழு தமிழை..வருங்கால சந்ததியினர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதினேன். பாடல் வரிகள் தயாரானதும் ரகுமான் சாரும் படித்து உற்சாகமாகிவிட்டார்..அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது… ''இதை..இதைத்தான் எதிர்பார்த்தேன்'' என்றார்.அவருக்கு மிகவும் பிடித்துப் போனதில் எனக்கும் மகிழ்ச்சி!

இந்த சந்திப்பில்  சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது?! .

என் இல்லாமல்?! சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லை.. திருக்குறள் பற்றி பேச்சு வந்தபோது ''அதில் 133 அதிகாரங்களில்..1330 குறள்களில் தமிழை பற்றி வள்ளுவர் எங்குமே குறிப்பிடவில்லையே.. அதனை கவனித்து இருக்கிறீர்களா?"  என்று கேட்டேன். .அதற்கு ''அட..ஆமாம்..'' என்று ரகுமான் சாரும் ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன்.. ''திருவள்ளுவர் காலத்தில் எல்லோரும் இயல்பாகவே தமிழ்  பேசிக்கொண்டுதான் இருந்திருப்பர். எங்கும்  தமிழ்.. எதிலும்.. தமிழாக இருந்த போது, அதனை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டாம் என்று வள்ளுவர் நினைத்திருப்பார்'' என்றேன்.. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ''அட மிகவும் யதார்த்தமா இருக்கே..இந்த விளக்கம்'' என்று ஆமோதித்தார்.

சுவாரஸ்யங்களில் மூழ்கியவரை மீண்டும் ஆல்பத்திற்கு கொண்டு வந்தோம்.

நான் எழுதிய முழுப் பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டவுடன், பிரமாதமாக வந்திருக்கிறது என்று கூறி உடனே பாடகர்களை வரவழைத்து. பாடல் ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தார்.. நாங்கள் இருவரும் என்ன நினைத்தோமோ, அந்த உணர்வுகளை பாடகர்கள் .அப்படியே தந்தார்கள்.. இந்த பாடலின் ரீச்சும் வீச்சும் பிரமாதமாக இருக்கும் என்று அப்போதே நினைத்தேன். அது உண்மையாகிவிட்டது..நாளுக்கு நாள் மாறி வரும் சூழலை கருத்தில் கொண்டு பாடல் வரிகள் தயார் செய்தேன்…நன்றாக வந்திருப்பதில்.மனசெல்லாம் மழை! ஒரு கவிஞருக்கு இதை விட வேறு என்ன வேண்டும்?

சமீப காலமாக திராவிடம், தமிழ் தேசியம் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறதே?

தமிழ் மீது பற்று இருந்தாலே போதும். வெறுமனே பேசிக்கொண்டு இருக்காமல் செயலில் காண்பிக்க வேண்டும்.இன்று பலர் தமிழில் பேசவே வெட்கப்படுகிறார்கள்…தாய் மொழியில் பேச வெட்கம் ஏன்? தயக்கம் ஏன்? வீட்டில் இயல்பாக தமிழில் பேசினாலே போதும். தூய தமிழில் லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு ஏதேதோ பெயர்களை வைக்கிறார்கள். நம் தமிழ் அகராதியில் இல்லாத பெயர்களா?! தமிழை வளர்க்க வேறெங்கும் போக வேண்டாம்.. நம் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே தமிழ் கற்று கொடுத்தால் போதும்.. வீட்டில் இருக்கும் போது தமிழில் பேசுவோம்.. அந்நிய மொழி எதற்கு? மொழி பரிமாற்றம் முக்கியம்..அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்ப்பதற்கான விதையை நம் வீட்டில் முதலில் விதைப்போம்..அப்படி செய்தால் தமிழ் இனி மெல்ல வளரும்.

நெகிழ்ச்சியுடன் சொல்லி அன்புடன் விடைகொடுத்தார் கவிஞர் தாமரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com