உலகின் உயர முத்துமலை ஶ்ரீமுருகன் சிலை! சிற்பி இரா.தியாகராஜன் பேட்டி!

உலகின் உயர முத்துமலை ஶ்ரீமுருகன் சிலை! சிற்பி இரா.தியாகராஜன் பேட்டி!

நேர்காணல்; சேலம் சுபா

சமீபத்தில் சேலத்தில் உலகிலேயே உயரமான ஶ்ரீமுருகன் சிலை அமைந்த ஶ்ரீமுத்துமலை கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான  மக்கள் வந்து குழுமியிருந்தனர். அவர்கள் 'அரோகரா' கோஷத்துடன் அந்த உலகப்புகழ் முருகனின் அழகை அண்ணாந்து வியந்து பார்த்து வணங்கிய காட்சியை – ஒரு மூலையில் நின்று கண்கலங்க ரசித்துக் கொண்டிருந்தார் சுதை சிற்பக் கலைஞர் திருவாரூர் இரா.தியாகராஜன் சிற்பி. ஆம்.. அவர்தான் உலகின் இந்த உயரமான முத்துமலை முருகன் சிலையை உருவாக்கியவர்.

அதுமட்டுமல்ல.. மலேசியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற   ஸ்ரீ பத்துமலை முருகன் சிலையும் இவர் உருவாக்கியதுதான்! அந்தவகையில் மலேசியாவில் ஸ்ரீ பத்துமலை முருகனும் இதோ.. இப்போது சேலத்தில் ஸ்ரீ முத்துமலை முருகனும் இவர் கைவண்ண்த்தில் உருவாகி, உலகப்புகழ் பெற்று விளங்கி கோடானுகோடி பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிற்து.

இப்போது இதேபோல இன்னும் பல தெய்வங்களின் சுதை வடிவச் சிற்பங்களை படைக்கும் மகத்தான பணியில் ஓய்வின்றி ஈடுபட்டுள்ளார் சிற்பி இரா.தியாகராஜன். தற்சமயம் சேலம் வெள்ளாளக்குண்டத்தில் உலகின் மிகப்பெரிய நந்தி சிலையை உருவாக்கி வருகிறார். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் சொல்லி அவரை சந்தித்தோம் .

சிற்ப வேலைகளுக்கு நடுநடுவே சிறு சிறு இடைவெளிகளில் நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டவை இதோ..

''நான் பிறந்த ஊர், வசிக்கும் ஊர் எல்லாமே ஆன்மீக பூமியான திருவாரூர்தான். அந்த ஊர் அருகேயுள்ள திருப்பள்ளி முக்கூடல் எனும் கிராமத்தில்தான் பதினைந்து ஆண்டுகள் வளர்ந்தேன் .ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்றேன். தந்தை என் இராஜு. தாய் யசோதா.

என் தாய் வழி தாத்தாக்கள் ஐந்து பேருக்குமே சிற்பக்கலைத் தொழில்தான் என்பதால் அங்கு செல்லும் போதெல்லாம் அவர்களைப் பார்த்தே எனக்கும் இந்தக் கலையில் ஆர்வம் வந்தது. அதையடுத்து  அவர்களிடமே அடிப்படை பயிற்சியும் எடுத்தேன். பின்னர் ஆரம்பப் பயிற்சியை  பெரியசாமிப்பிள்ளை என்பவரிடமும் அதன் பிறகு கும்பகோணம் அருகே தேனாம்படுகையில் இந்த சிற்பக்கலையில் தேர்ந்தவரான கதிர்வேல் ஸ்தபதியிடமும் இக்கலையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன் .சுமார் பத்து வருடங்கள் அவருடனே இருந்தது நல்ல அனுபவங்களைத் தந்தது .

முதன் முதலில் அவருடனே சென்னை மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் திருப்பணிக்காக சுமார் ஐந்து வருடங்கள் சிற்ப வேலைகளை செய்தேன் .அங்கு இருந்த சம்பந்தம் ஸ்தபதி என் ஆர்வத்தைக் கண்டு மேலும் ஆக்கமும் ஊக்கமும் தந்தது இன்றும் மறக்கமுடியாது .அந்த ஊக்கம்தான் தொடர்ந்த என் பணிகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது சிற்பக்கலையில் பல வகைகள் இருந்தாலும், என் கவனம் முழுவதும் சிமெண்ட்க் கலவையினால் செய்யப்படும் சுதை சிற்பங்களில் மட்டுமே குவிந்தது .

தொடர்ந்து பல கோவில் பணிகளை செய்து வந்தாலும் 1991- லிருந்து  2006 வரை அயல்நாடான மலேசியாவில் தங்கி அங்கு புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோவில் பணிகள் மற்றும்  பத்துமலை முருகன் சிலை வடிவமைத்த தருணங்கள்  இனிமையானவை . மகாமாரியம்மன் கோவிலின் தேவஸ்தான தலைவராக தற்சமயம் பொறுப்பிலிருக்கும் பெருந்தகை பண்பாளர் டாண்ஸ்ரீ நடராஜன் அவர்களின் அன்பான ஆதரவு – சொந்த நாட்டை விட்டுச் சென்ற எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு உற்சாகம் தரும் டானிக்! அதுதவிர லண்டனில் 3 ஆண்டுகள் தங்கி செய்த சிறிய முருகன் கோவில் பணிகளும் அடக்கம்.

எனக்கு பத்துமலை முருகன் செய்யும் வாய்ப்பை பெற்றுத்தந்தது திருவேலங்காடு ஓவியர் கலைமாமணி கந்தசாமி ஐயாதான்! .அவர் அப்போது அங்கு அப்போது  பணியில் இருந்தார் அவர் சொன்னதும் ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டேன் .காரணம் என் திறமையின் அளவுகோல் என்னவென்று தெரியும் .என் குருநாதர்கள்முதல் இந்தத் தொழில் செய்பவர்கள் யாருமே இதுவரை 30 அடியில் மட்டுமே சிலை வடித்திருந்தார்கள். ஆனால் எனக்கு வந்த வாய்ப்போ 100-அடிக்கும் மேல் செய்ய வேண்டிய சிலை வாய்ப்பு1 எனக்கு முழுமையாக அந்த முருகப்பெருமானின் அருள் இருப்பதால்தான் எந்த பாதிப்புகளும் இடையூறுகளும் இன்றி என்னால் சிலைகளை உருவாக்க முடிந்தது .

ஆனால் உலகின் மொத்தக் கவனத்தையும் கவரப்போகிற சிலை என்பதால் மிக மிக கவனத்துடன் பல சவால்களை சந்தித்தே மலேசியாவில் பத்து மலை முருகன் சிலையை செய்து முடித்தோம் .இதற்கு எல்லாம் வல்ல அந்த முருகப்பெருமானே காரணம்..அவன் சிலையை எங்களை வைத்து அவனே உருவாக்கிக் கொண்டான் என்பேன் .

ஒரு சிலை செய்யத் துவங்கும் முன் அந்தப் பணி எந்தத் தடங்கலும் இன்றி சிற்ப்பாக நடைபெற எல்லாம் வல்ல ஆண்டவனை சாஸ்திரப்படி வேண்டிக் கொள்வோம் .''இதோ நாங்கள் செய்யப் போகும் உன் திருவுருவம், எண்ணற்ற மக்களின் துயர்களைப் போக்கி மகிழ்ச்சியைத் தரப்போகிறது .இது நன்றாக வருவதும் உன்னிடமே ..நாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே'' என்று மனதார வேண்டிய பின்பே பணியில் இறங்குவேன் .

இன்றளவும் நான் கற்றுக்கொள்ளும் இடத்திலேயே இருக்கிறேன் .புதிது புதிதாக உலகப்புகழ் பெறும் உயரமான சிலைகள் செய்யும் வாய்ப்புகள் சமீபகாலமாக வந்து கொண்டிருப்பது என் திறமைக்கு வரும் சவால்களாகவே கருதுகிறேன் .இதோ.. இப்போதுதான் நிறைவுற்று கும்பாபிசேகம் செய்து தற்போது அனைவரையும் கவர்ந்து வரும் சேலம் புத்திரகவுண்டன்பாளையத்தில் –  பத்துமலை முருகனை விட அதிகமான உயரத்துடன் முருகனை செய்யும் வாய்ப்பை அதன் திட்ட இயக்குனரான என் ,எஸ் ,ஸ்ரீதர் அவர்கள் என்னைத் தேடி வந்து தந்தார் .அவரின் நல்லெண்ணம் விருப்பத்திற்கேற்ப நினைத்ததற்கும் மேலாக அந்த முருகனின் கருணையால் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது ஸ்ரீ முத்துமலை முருகன் சிலை! மலேசிய .பத்து மலை முருகன் முழு தங்கநிறத்தில் ஜொலிப்பார்..ஆனால் இங்குள்ள முத்துமலை முருகனோ ராஜ அலங்காரத்தில் பலவித வண்ணங்களுடன் மனதைக் கவர்பவர் .

இதிலும் சோதனைகள் அதிகம் வரும் .உதாரணத்திற்கு கருங்கல் சிலை வடித்தலிலும் பஞ்சலோக சிலையமைப்பிலும்  ஆகம விதியை நூறு சதவிகிதம் கடைபிடிக்க வேண்டும். இதன்படியே அறுபடை வீடு முதல் எந்தவொரு முருகன் சிலைகளிலும் கைகளில் வேல் இணைந்திருக்காது. வேல் சாத்துபடிதான் நடைபெறும் .ஆனால் எங்கள் சுதை சிற்பக்கலையில் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு முழுமையான விதிகளைக் கடைபிடிக்கும் கட்டாயம் இல்லை. ஐம்பது சதவிகிதம் கடைபிடித்தால் போதும் ..நம் விருப்பத்திற்கேற்ப விதி விலக்குகள் உண்டு .

இதோ ஸ்ரீ முத்துமலை முருகன் எந்நேரமும் இடது கையில் வேலைப் பிடித்தபடியும்  வலது கையில் ஆசிர்வாதம் செய்யும்படியும் அமைத்துள்ளோம். இதுபோன்ற அமைப்புகளை சாஸ்திரப்படி குற்றம் என்று வாதிடுபவர்களும் உண்டு . சூர சம்ஹாரத்தில் மட்டுமே முருகன் கையில் வேலைப் பிடிக்க வேண்டும் என்ற நியதியை மாற்றுவதாக அவர்கள் எண்ணம் .அது அப்படியல்ல..சம்ஹாரம் என்றால் வேல் கீழ் நோக்கி இருக்கும் .இங்கு மக்களுக்கு ஆசிகள் வழங்கும்படி வேல் மேல்நோக்கி எப்போதும் முருகனுடன் இருக்கும். முருகன் என்றாலே வேல்தானே? அப்படிப் பார்த்தால் சிவனும் ஒரு கையில் சூலத்தைப் பிடித்தபடி மறு கையால் ஆசிகள் வழங்குவதைப் பார்க்கலாமே?

அடுத்து தற்சமயம் சேலம் வாழப்பாடி வெள்ளாள குண்டத்தில் ஸ்ரீ ராஜவேல் சுவாமிகள் ஆலோசனையில் அதிகார நந்தி சிலை செய்து வருகிறேன்.. உலகத்திலேயே மிகவும் உயரமான 45 அடி கொண்ட இந்த அதிகார நந்தி சிலை இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறும். அதன்பிறகு 162 அடியில் சிவனை வடிவமைக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. மேலும் தேனீ மாவட்டம் தென் பழனியில் திருக்குமரன் திருக்கோவில் சார்பாக மயிலுடன் விஸ்வருப முருகனை வடிவமைக்க உள்ளோம் .இது இன்னும் மிக பிரமாண்டமான ஒன்றாக இருக்கும் .அதைச் செய்யும் மனதைரியத்தை அந்த முருகனே நிச்சயம் வழங்குவான் எனும் நம்பிக்கை இருக்கு" என்றவரிடம்,

"குடும்பம்…?" என்று நாம் இழுக்க மீண்டும் தொடர்ந்தார்.

"என் மனைவி கௌரி இல்லத்தரசி. நான் பணி நிமித்தம் பெரும்பாலும் வெளியூர்களில் வாசம் செய்து விட்டு விடுமுறை நாட்களில்தான் சொந்த ஊர் செல்வேன் .மனைவி குடும்பப் பொறுப்புகளை தாங்கி நிர்வகித்ததால் மட்டுமே என்னால் என் வேலையில் நிம்மதியாக கவனம் செலுத்தி வெற்றி பெற முடிந்தது .என் மகன்கள் அழகேசன் மற்றும் குமரேசன் ..இருவரும் தற்போது உயர்கல்வி பயின்று வருகின்றனர்..

இந்தத் தொழிலில் என் மகன்களுக்கு ஆர்வம் குறைவுதான். ஆனால் நான் பயிலாத கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்பது மகிழ்ச்சிதான். .என்னுடன் என் மைத்துனர்கள் பழனிவேல் மற்றும் சரவணனும்,என் தம்பி கணேசனும் இந்தக் கலைத் தொழிலுக்கு உதவியாக இருக்கிற்ர்ர்கள். கடந்த பதினைந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணிக்கிறோம் .பெரும்பாலும் அதிகம் உதவியாளர்கள் தேவைப்படும் நேரங்களில் எங்கள் உறவுகள் மட்டுமல்லாமல் கலைத்துறையில் திற்மையாக உள்ள நண்பர்களையும் உடன் அழைத்துச்சென்று விடுவோம்.

இந்தக் கலையைப் பொறுத்தவரை இதுவரையில் நாங்கள் திரைமறைவில் மட்டுமே இருந்து வந்தோம் .எல்லாக் கோவில்களிலும் சுதை சிற்பங்கள் இருந்தாலும் அதன் பின்னிருக்கும் சிற்பிகளான நாங்கள் வெளியே தெரிந்ததில்லை .இப்போது இப்படிப்பட்ட உலகப்புகழ் சிலைகளின் மூலம் நாங்களும் வெளிப்பட வேண்டுமென்பதும் முருகனின் விருப்பமே .இன்னும் நானும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளேன் . பொருள் தேடுதல் ஒருபக்கம் இருந்தாலும், கலைத்தேடுதல் மட்டுமே எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு உத்வேகம் தரும் காரணி எனலாம். கலையைக் முழுமையாக கற்றுக்கொள்ள எவராலும் முடியாது என்பதே உண்மை'' என்று விரிவாக சொல்லி முடித்தார் தியாகராஜன் சிற்பி.

பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட தியாகராஜன், இறுதியாக 'எல்லாம் வல்ல தியாகேசப்பெருமானே இன்றைய தன் திறமைக்கு காரணம்' என்று பக்தியுடன் சொன்னது, பிறந்த மண்ணின் மீதான அவரின் பாசத்தை எடுத்துரைத்தது. அவரின் பணிகள் செம்மையுற வாழ்த்தி விடைபெற்றோம் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com