கோலாகலமாக நடந்த பட்டிணப் பிரவேச விழா!

கோலாகலமாக நடந்த பட்டிணப் பிரவேச விழா!

– சங்கர் வைத்தியநாதன்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் விழா நேற்றிரவு (மே 22) விமர்சையாக நடைபெற்றது.  தருமபுர ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் குருபூஜைத் திருவிழா 11 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் படும். அதில் 11-ம் நாளன்று இந்த ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவும் ஆதினத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.

இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து திருமடத்தின் நான்கு வீதிகளிலும் பக்தர்கள் தூக்கிச் சென்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் இந்த பல்லக்கு நிகழ்ச்சிக்கு அரசு ம்தலில் தடைவிதித்து, பின்னர் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் இந்த வருடம் குருமகா சன்னிதானத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதனால் நேற்று (மே 22)  நடந்த பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட, பட்டணப் பிரவேசவிழா கோலாகலமாக நேற்றிரவு தொடங்கியது.

தருமபுர ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானமான ஶ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் அணிந்து, பக்தர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.

ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூர்ணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார்.

புகழ்பெற்ற தருமபுர ஆதீன பட்டிணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம்,செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் வந்து கலந்துகொண்டனர். சுமார் 5 000ஆயிரத்துக்கு  மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

பல்லக்கு பவனி முடிந்ததும், தருமபுர ஆதீன மடத்தில் குருமகா சன்னிதானம் குருபூஜை மேற்கொண்டார். பின்னர் ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com