நான் சாட்சி மட்டுமே: ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

நான் சாட்சி மட்டுமே: ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

-சிறப்பு பேட்டி: ஜே.வி.நாதன்

ப்பிரிக்காவிலிருந்து ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு  'ஸூம்' மூலம் பேட்டி.. 

பிரபலமான ஓர் அரசியல்வாதியின் தவிர்க்க முடியாத வருகை நிகழ்வு… 

-இத்தனை பரபரப்புக்கு மத்தியில் பிஸியாக இருந்த ராக்கெட் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் அவர்களை கேரள மாநிலம், திருவனந்தபுரம், பெருந்தாணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை (ஜூலை 27) 8 மணிக்கு கல்கி ஆன்லைன்க்காக பிரத்தியேகமாக  சந்தித்தோம்.

தமிழ்த் திரைப்பட உலகில் மசாலாக் கதைகளும், நம்ப முடியாத காட்சிகளும் கோலோச்சி வரும் வேளையில்.. நடிகர் மாதவனின்  'ராக்கெட்ரி.. தி நம்பி எஃபக்ட்' படம் சர்வதேச அளவில் பெரும் வெற்றிகளைக் குவித்து வருகிறது.

இந்த படத்தின் ஒரிஜினல் ஹீரோ, ராக்கெட் விஞ்ஞானியான நம்பி நாராயணன்தான்!

 இந்த திரைப்படத்தில் ராக்கெட் விஞ்ஞானம், இந்திய நாட்டை நேசித்து ராக்கெட் விஞ்ஞானத்தை மேலெடுத்துச் சென்ற ஓர் விஞ்ஞானி, ராக்கெட் ரகசியங்களைக் கடத்தி வேறு நாட்டுக்கு விற்றார் என்ற அண்டப் புளுகுக்கு உயிர் கொடுத்த சதியின் மூலம் இந்தியாவின் ராக்கெட் விஞ்ஞான வளார்ச்சியை 15 வருடங்கள் பின்னுக்குத் தள்ளிய முயற்சி ஆகியவை குறித்து நடிகர் மாதவன் அற்புதமான ஒரு திரைப்படம் எடுத்து அசத்தியிருக்கிறார்.  

'Rocketry – The Nambi effect' என்ற அந்தத் திரைப்படம் இந்த ஜூலை மாதத் துவக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது.

அந்தத் திரைப்படம் குறித்த சில கேள்விகளை விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் முன் வைத்தோம்.

நடிகர் மாதவன் உங்களை முதலில் எங்கு, எப்போது சந்தித்தார்?

என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில், 2016-ஆம் ஆண்டில், டைரக்டர் ஆனந்த மகாதேவனுடன் வந்து மாதவன் என்னைச் சந்தித்தார். அந்த டைரக்டர்தான் என்னை மாதவனுக்கு அறிமுகம் செய்தவர்.  (ஆரம்பத்தில் அவர்தான் இந்தப் படத்தை டைரக்ட் செய்வதாக இருந்தது. பின் அது ஏதோ சில  காரணங்களால் முடியாமல் போயிற்று.) 

அந்தச் சந்திப்பில் மாதவன் என்னிடம் ராக்கெட் விவகாரம் தொடர்பாக எனக்கு நடந்த விஷயங்களைக் கேட்டார். மூன்று மணி நேரம் பேசினோம்.  ''நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

''இந்த வரலாற்றைப் படமாக எடுத்தால் அது ஒரு செய்திப் படம் (Documentary) போல இருக்கும்.. பரவாயில்லையா? எனவே, என் வரலாற்றைப் படம் எடுப்பது பற்றி நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வாங்க மிஸ்டர் மாதவன்!'' என்றேன். அவரிடமிருந்து விடை பெற்றேன். அப்போது நேரம் இரவு ஒரு மணி. 

நான் அந்த ஓட்டலிலிருந்து வாசலுக்கு வந்தபோது, மாதவனும் என்னை வழியனுப்புவதற்காக உடன் வந்தார். ஓட்டலின் பின்னால் நான் நிறுத்தியிருந்த என் ஸ்கூட்டரை எடுக்கும்போது, நான் காரில் வராமல், ஒரு பழைய ஸ்கூட்டரில் வந்ததைப் பார்த்துத் தன் மனம் உறுத்தியதாகப் பின்னால் மாதவன் என்னிடம் சொன்னார். 

மாதவன் மிகவும் யோசித்து, இந்தப் படத்தை எடுப்பது என்ற முடிவில் உறுதியாக நின்று அவர் படம் எடுத்து முடித்தது ஒரு பெரிய கதை.  

இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.

திரைப்படம் தொடர்பாக எந்தெந்த ஊர்கள், நாடுகளுக்குச் சென்றீர்கள்?

படப்பிடிப்புக்காக மும்பைக்குப் பலமுறை சென்றோம். பல வெளிநாடுகளுக்குப் போனோம். அமெரிக்காவில் பல இடங்கள், குறிப்பாக நான் படித்த ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகம், யுனைடெட் கிங்டம், ரஷ்யாவின் செர்பியா, மாஸ்கோ மற்றும் கதை நிகழ்ந்த களங்கள் அனைத்துக்கும் நேரடியாகச் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்திய விஞ்ஞானிகள் பலரை அழைத்துச் சென்று நாங்கள் தொழில்நுட்பங்களைப் பயின்று திரும்பிய பிரான்சுக்குச் சென்றும் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டது.

நடிகர் மாதவனால் திரைப்படத்தைத் திறம்படச் செய்ய முடியும் என்று நம்பினீர்களா?

முதல் டிஸ்கஷனிலேயே அவரால் இந்தப் படத்தை நன்றாக எடுக்க முடியும் என்று எனக்குப் புரிந்து விட்டது. காரணம், அடிப்படையில் அவர் ஓர் இஞ்சினீயர். அப்படி இல்லாமல் இருந்திருந்தால் ராக்கெட் விவகாரங்களைப் புரிய வைப்பது கஷ்டமாக இந்திருக்கும். மாதவன் எளிதில் புரிந்து கொண்டார். ராக்கெட் விஞ்ஞானம் ஒரு சிக்கலான தொழில் நுட்பம். அதைப் பாமர மக்களுக்குப் புரிய வைப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால், படம் பார்க்கும் மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி மாதவன் எடுத்திருக்கிறார்.

படத்துக்காக மாதவன் சந்தித்த சவால்கள் எவை?

முக்கியமான சவால் – நான் 25 வயதிலிருந்து 75 வயது வரை இருந்த தோற்றங்கள். 25 வயதில் எனக்குத் தொப்பை இல்லை. எனவே, தொப்பையைக் குறைத்துக் காட்ட வேண்டும். 15 கிலோ எடையைக் குறைப்பதும், 15 கிலோ எடையைக் கூட்டுவதும் ரொம்பக் கஷ்டமான விஷயங்கள். அடுத்தது நரை முடி. மாதவன் இதற்கு   'டோப்பா' வேண்டாம் என்று சொல்லி விட்டார். 15 மணி நேரம் பொறுமையாக அவரை உட்கார வைத்து நரைத் தோற்றத்தை மேக்கப்பில் கொண்டு வந்தார்கள். எந்த இடத்திலும் மாதவன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பவில்லை.

மிக அதிகமாகச் சிரமப்படுத்திய விஷயம், தாடை எலும்பு! என்னுடைய தாடையை மாடலாக எடுத்து, அவருடைய தாடையில் பொருத்தமாக உருவாக்கினார்கள். இது அதிகமாக வேலை வாங்கி விட்டது. 

காலக் கிரமமாக பல், வாய், எடை, முகம் என மாற்றங்களை ஏற்படுத்திப் படம் எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. இதையெல்லாம்  மாதவன் அற்புதமாக சாதித்து விட்டார்.

படப்பிடிப்பில் நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் எவை?

படம்-படப்பிடிப்பு என்பவை என் வேலை இல்லை. மாதவனும் அவரது குழுவினரும் மிக நுணுக்கமாக வேலை செய்தார்கள். அவ்வப்போது என்னிடம் தங்கள் சந்தேகங்களைக் கூறி அறிவுரை கேட்பார்கள். அவற்றுக்குப் பதில் சொன்னது மட்டும்தான் என் வேலையாக இருந்தது. மற்றபடி படப்பிடிப்பு முழுவதும் நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன். இது ராக்கெட் விஞ்ஞானம் தொடர்பான கதை. படம் எடுத்தபின், யாரும் இதில் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது அல்லவா? மாதவன் நல்ல டீம் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் எல்லா வேலைகளையும் குறைவில்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள். 

படத்தில் முழுமையாக எல்லாவற்றையும் சொல்ல முடிந்ததா?

படம் எனக்குத் திருப்தியாக வந்திருக்கிறது. ஆனால், எல்லாம் சொல்லிவிட்ட திருப்தி கிடைத்து விட்டதாகச் சொல்ல முடியாது. இன்னமும் சொல்ல வேண்டியது இருக்கிறது. அவற்றைச் சொல்ல  வேண்டாம் என நாங்கள் முன்பே தீர்மானித்திருந்தோம். 

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றைத் தவிர்த்தோம். யூகங்களைக் கதையில் கொண்டு வரக் கூடாது,. நாமே தீர்ப்பு எழுதி விடக் கூடாது என்று நாங்கள் ஆரம்பத்திலேயே பேசி முடிவு எடுத்திருந்தோம். 

இந்தப் படத்தின் அடுத்த பாகம் என்ற ஒன்றை எடுத்தால் அவற்றைச் சொல்லலாம். அதற்கு ஸ்கோப் இருப்பதாக நான் நினைக்கிறேன் 

இன்னமும் விடை தெரியாத அந்த சதிகார நாடுகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

'சதிகார நாடுகள்' என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் வர்த்தக ஆதிக்கம்… தங்களுக்குப் போட்டியாக இந்தியா வந்து விடக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஒப்பந்தத் தடை விதித்ததைச் சுட்டிக் காட்டுகிறது. ஒரு நாடு, தன் வர்த்தகத்தை வேறொரு நாடு பாதித்து விடக்கூடாது என்று எப்போதும் கண்காணித்தபடியே இருப்பது அதன் இயல்புதான். 

உங்கள் கதை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் புத்தகமாக வந்து பரபரப்பாக விற்பனை ஆகி வருகின்றன. நீங்கள் பிறந்த மண்ணின் மொழியான தமிழில் எப்போது வெளிவரும்?

தமிழில் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. (மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் ஜே.வி.நாதன்). அந்த மொழிபெயர்ப்பு, ஒரிஜினலை அப்படியே ஆனால், மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் புத்தகம் ஏன் இன்னும் வெளிவரவில்லை என்பதற்கு ஒரு காரணம் உண்டு. அந்த நூலுக்கு மூலம் மற்றும் மொழிபெயர்ப்புக்கு எங்கள் உழைப்பு அதிகம். ஆனால் கிடைக்கிற ஊதியம் மிகவும் குறைவு. அதாவது – உழைப்பு குறைவாக உள்ள வெளியீட்டாளர் அதிகம் சம்பாதிக்கிறார். இந்த இடைவெளியைச் சகித்துக் கொள்ள எனக்கு மனமில்லை. ஆனாலும் தமிழில் என் புத்தகம் சீக்கிரம் வெளிவரும் என நினைக்கிறேன்.

இனி, உங்கள் போராட்டம் என்னவாக இருக்கப் போகிறது?

போராட்டம் முடிந்து விட்டது. நாட்டுக்கு ஆற்ற வேண்டிய என் கடமையை ஆற்றி விட்டதாக நான் நினைக்கிறேன். மாதவன் எடுத்திருக்கும் இந்தச் சினிமா வெளிவந்தபின், எனக்கும் நம் நாட்டுக்கும் இழைக்கப்பட்ட அநீதி மக்களுக்கும் நன்றாகவே புரிந்து விட்டது. 

அநீதி இழைத்த சம்பந்தப் பட்டவர்களுக்குத் தண்டனை அளிக்க வழக்கு நடக்கிறது. (C.B.I v/s some accused) அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். நான் இந்த வழக்குகளில் சாட்சி மாத்திரம்தான். எனக்கும் நம் நாட்டுக்கும் நடந்த அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நான் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன்.

தீர்ப்பு வந்தபின், மற்றும் 'ராக்கெட்ரி' திரைப்படம் வெளிவந்தபின், உங்கள் குடும்பத்தார் மன நிலை எப்படி இருக்கிறது?

தீர்ப்பு வந்தபோது எனக்கோ, என் குடும்பதினருக்கோ பெரிய திருப்தி ஒன்றும் கிடைக்கவில்லை. உண்மையான நிலவரத்தைத் தீர்ப்பு பிரதிபலிக்காது. முதலில் சீஃப் ஜுடீஷியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுவே உயர் நீதிமன்றத்திலும், பின் உச்சநீதிமன்றத்திலும்! இவற்றைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை… இறுதியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு…

கூட்டிக் கழித்துப் பார்த்தால், மனதில் திருப்தி அடைய முடியாமல் கொஞ்சம் மீதி ஏதோ நெருடிக் கொண்டே இருந்தது. அந்த மீதத்தை மாதவனின் இந்தத் திரைப்படம் முழுமையாகத் தீர்த்து வைத்து விட்டது. இப்போது முழுத் திருப்தி.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவன் என் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். என் மனைவி, மகள் கீதா, மருமகன் அருணன் (இஸ்ரோ விஞ்ஞானி..செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் குழுவின் ஒருங்கிணைப்பு டைரக்டர்), என் பேத்தி, மகன் எனக் குடும்பத்தினர் அனைவரும் இருந்தார்கள். கலகலப்பான சூழல். 

மாதவன் முதன் முதலில் என் வீட்டுக்கு வந்ததால், கேக் வாங்கி கொண்டு வந்திருந்தார். அந்தத் தருணத்தை மகிழ்ச்சியோடு கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென்று விரும்பினார். நான் கேக் வெட்டி என் மனைவி மீனாவுக்கு ஊட்டினேன். அனைவருக்கும் கொடுத்தேன்.

என் மனைவி மீனா சிரித்துப் பேசி வெகு காலம் ஆகி விட்டது. ஆனால் அன்றைய தினத்தில்தான் அவர் மீண்டும் மிகவும் சந்தோஷத்தோடு பேசி, கலகலவென்று சிரித்ததை நான் பார்த்தேன். மொத்தக் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து மாதவனோடு பேசி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது.   சொல்ல முடியாத அளவுக்கு எனக்குச் சந்தோஷம் தந்த அற்புதமான காட்சி அது!

-மனதின் பூரிப்பு முகத்தில் பிரதிபலிக்க, மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், ராக்கெட் ஹீரோ திரு. நம்பி நாராயணன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com