விபத்துக்குக் கடவுளே காரணம்; வக்கீலின் அபத்தமான வாதம்!

விபத்துக்குக் கடவுளே காரணம்; 
வக்கீலின் அபத்தமான வாதம்!
Published on

        னிதனின் ஆறாம் அறிவைச் சார்ந்ததே ஒன்றைப் பகுத்து உணரும் பகுத்தறிவு. இது ஆன்மிகத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும் நினைவில் கொள்வோம். ஒரு செயல் நிகழும்போது அது எதனால் எப்படி நிகழ்ந்தது எனப் பகுத்து ஆராய்ந்து தீர்ப்புகளை சொல்வது ஒரு நீதிபதியின் கடமை .அதே போல் அந்தச் சம்பவம் நிகழ்ந்த விதத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லி தன்னை நம்பி வந்த கட்சிக்காரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பை வாங்கித் தருவது ஒவ்வொரு வழக்கறிஞரின் பணி. ஆனால், இந்த செய்தியைப் பார்க்கும்போது, வழக்கில் வெற்றி பெறுவதற்காக, காணாத கடவுளையும் வழக்கில் இணைப்பார்கள் என்று தெரிகிறது.

        திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “எனது மனைவி பொன்னம்மாள் வயது 59. கடந்த 15.7.2018 அன்று மதியம் 12 மணி அளவில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலபட்டி டோல்கேட் அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு டோல்கேட் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு அறிவிப்பு பலகை திடீரென அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு இடையே பொன்னம்மாள் இறந்ததற்கு ஐந்து லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கோரியிருந்தார்.

      இந்த வழக்கு  நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் “பயங்கர காற்று வீசியதன் காரணமாகத்தான் அறிவிப்பு பலகை விழுந்தது. இந்த விபத்தில் சிக்கியே மனுதாரரின் மனைவி இறந்துள்ளார். இதைக் கடவுளின் செயலாக கருதி வழக்கில் இருந்து நெடுஞ்சாலை துறையை விடுவிக்க வேண்டும் என வாதாடினார்.

       விசாரணையின் முடிவில் நீதிபதி “இந்த விபத்து கடவுள் செயலால் நடந்துள்ளது என்பதை ஏற்க முடியாது. மிகப்பெரிய இரும்பு பலகை உடைந்து மனுதாரரின் மனைவி இறந்துள்ளார். அந்தப் பலகை சரியாக நட்டு வைக்கப்படாமல் இருந்ததாலும் விழுந்திருக்கலாம். அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள்தான் ஏற்க வேண்டும். எனவே, நெடுஞ்சாலை துறையின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனுதாரரின் மனைவி இறப்பிற்கு ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடாக 8 வாரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆறு சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கில்தான் கடவுளும் விபத்துக்கு காரணம் என்று வக்கீல் வாதிட்ட ருசிகரம் நிகழ்ந்துள்ளது. இனி வழக்குகளில் வக்கீலுடன் குற்றவாளிகளும் கடவுளை காரணமாக காட்டும் நிலை வருமோ? கடவுளுக்கு அடுத்தபடியாக நீதியை நிலைநாட்டும் மகத்துவம் வாய்ந்த வக்கீல் பணியில் உள்ளவர்கள் வாதிடும் முன் சற்று சிந்திக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com