அற்ப ஜீவனும் அடாவடி யானையும்

அற்ப ஜீவனும் அடாவடி யானையும்

சுப்பிணி தாத்தாவின் சுட்டீஸ் கதை

ஆனந்த காடு அமர்க்களப்பட்டது. காட்டின் ராஜா சிங்கத்தின் பிறந்தநாள். வெகு விமரிசையாக கொண்டாட பெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த காட்டின் மிக வலிமையான மிருகம் யானை. அது எட்டு அடி உயரமும், நீண்ட தந்தங்களும் கொண்டது. அதன் வலிமையைக் கண்டு சிங்க ராஜாவே அஞ்சி நடுங்கும். அதனால் அந்த யானை தன்னையே ஒரு மன்னராக நினைத்துக்கொண்டு காட்டையே துவம்சம் செய்யும். எனவே, சிங்க ராஜாவே அஞ்சிதான் அந்த யானையை தலைமை ஏற்க ஒப்புக்கொண்டார்.

விலங்குகள் கூட்டம் கூட்டமாக மன்னர் பிறந்த நாள் விழாவுக்காக சென்று கொண்டிருந்தன.  கட்டெறும்பின் தலைவன் தன் இனத்தின் ஆயிரமாயிரம் எறும்புகளுடன் ஒரு சாரியாக வந்துக் கொண்டிருந்தது. அப்போது ஓர் ஓநாய் வந்தது.

“அடே.. ஓநாயே எல்லோரும் எங்கு செல்கிறீர்கள்?” - கட்டெறும்பு தலைவன் கேட்டது.

“ம்… உனக்கு அது ரொம்ப முக்கியம். ஒழுங்கா ஓரமா போ.  இல்லாட்டி  எங்க கால் மிதிபட்டே அத்தனை பேரும் இறந்துடுவீங்க.” - என்று ஓநாய் கேலியுடன் பேசிச் சென்றது.

அடுத்து ஒரு நரி தன்  கூட்டத்துடன் சென்றது.

“ஓ. நரியாரே…  தாங்கள் எல்லாம் எங்கு கூட்டம் கூட்டமாகச் செல்கிறீர்கள்?”

“நாங்க எல்லாம் விலங்குகள். எங்க ராஜாவுக்கு இன்று பிறந்தநாள். அதற்கு பெரும் விழா நடக்கிறது. பெரும் விருந்து இருக்கிறது. அதற்கு செல்கிறோம்” என்று ஆணவத்துடன் பேசியது நரி.

“சரி. நாங்களும் அதற்கு வரலாமா?”

“அய்ய… ஆசையைப் பாரு… கொல்லுப்பட்டறைக்கு ஈக்கு  என்ன வேலை? நீ ஒரு அற்ப ஜந்து... நீ எல்லாம்  அங்கு வர அனுமதி கிடையாது... வேண்டுமானால் விருந்து முடிந்து கீழே கிடக்கும் பதார்த்தங்களை உண்டு செல்ல அனுமதி கொடுப்பார்கள்” என்று       நரி ஆணவத்துடனும்  கேலியுடனும்  சிரித்துக்கொண்டே பேசி சென்றுவிட்டது.

அப்போது ஒரு அழகான முயல் குட்டி வந்தது.

“முயலாரே மன்னர் பிறந்தநாள் விருந்தில் நாங்கள் கலந்துக்கலாமா?” என்று கட்டெறும்பு தலைவன் ஆசையுடன் கேட்டது.

“எறும்பு தலைவா… உன் ஆர்வம் புரிகிறது. ஆனால், விழாவில் விலங்குகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் இந்த காட்டின் கெடுமதி கொண்ட ஒரு பெரும் ராட்சஸ யானைதான் தலைமை தாங்கிப் பேசுகிறது. அது உங்களை அனுமதிக்காது” என்றது முயல்குட்டி. 

எறும்பு தலைவன் மிகுந்த வருத்தத்துடன், “ஆம்… நாங்கள் எல்லாம் அற்ப ஜந்துக்கள் தானே” என்றபோதே, விலங்குகள் மத்தியில்  பெரும் அமளி.

விழாவிற்கான நேரம் ஆகியும் யானை வரவில்லை. அது வரும் வழியில் இருக்கும் பெரும் பெரும் மரங்களை எல்லாம் வேருடன் பெயர்த்து தூக்கி எறிந்து அட்டகாசம் செய்தபடி வந்தபோதுதான்  அமளியும் ஏற்பட்டது.

நேரம் ஆக ஆக சிங்க ராஜா காரணம் புரியாமல் தவித்த போதுதான் விவரம் புரிந்தது. “ராட்சஸ யானை ஏதோ காரணத்தால் வரும் வழியில்  பெரும் ஆபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது” என்று அறிந்து மனம் வருந்தியது.

இந்த விவரத்தை முயல் குட்டியிடம் இருந்து அறிந்த கட்டெறும்பு தலைவன், உடனே தன் யோசைனையை முயல் குட்டியிடம் கூறவும், அதுவும் தலையசைத்து உடனே மன்னரிடம் சென்று எறும்பு தலைவன் கூறிய யோசனைக்கு அனுமதி பெற்று வந்தது.

அனைவரும் சிங்கராஜாவின் பின்னால் அணிவகுத்து, உயிருக்குப் போராடும் யானையைப் பார்க்க வந்துக்கொண்டிருந்தனர்.  கட்டெறும்பு தலைவனை முயல் குட்டி தன் முதுகில் சுமந்துக் கொண்டு, யானை இருக்கும் இடம் நோக்கி வந்தது.

யானை துடிதுடித்தபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க, எறும்பு தலைவன் யானையின் முறம் போன்ற காதின் வழியாக உள்ளே சென்றது. சற்று நேரம் பெரும் அமைதி. அனைத்து  விலங்குகளும் அதிர்ச்சி அடைந்தன. காரணம், இதுவரை துடிதுடித்த யானை எந்த அசைவுமே  இல்லாமல் இருந்தது. சிங்க ராஜாவும் மிகுந்த கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க,  எறும்புத்தலைவன் அடுத்த காது வழியாக இன்னொரு எறும்பை தன் வாயில் கவ்வியபடி வந்து அதை வெளியில் எறிந்தது.  சற்று நாழி மீண்டும் அமைதி.

இப்போது பெரும் பிளிறல் சத்தம். காடே கிடுகிடுத்தது. அனைத்து விலங்குகளும் அஞ்சி ஓடின. சிங்க ராஜாவே அச்சம் அடைந்தார். அதே சமயம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த ராட்சஸ யானை மீண்டும் கம்பீரமாக எழுந்து இந்த முறை  எந்த அட்டகாசமும் செய்யாமல் அடக்கத்துடன் ராஜாவை வணங்கியது.  பின் என்ன நடந்தது என்பதை அறிந்து, தன் உயிர் பிழைக்க காரணமாக இருந்த எறும்பு தலைவனையே தன் முதுகில் சுமந்து வந்த சிங்க ராஜா, யானையின் பிறந்த நாள் விழாவில் முதலில் பேசுமாறு எறும்பு தலைவனை வேண்டியது.

“வேண்டாம்! வேண்டாம்! அது தவறு. நாங்கள் அற்ப ஜந்துக்கள்”  என்று எறும்புத்தலைவன் கூறவும், யானை பெரும் குரலில் பேசி  விளக்கமளித்தது.

“எறும்பாரே… ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை. படைத்த இறைவன் பெரும் அறிவாளி. யாருக்கு என்ன சக்தி தேவை என்பதையும் யாருக்கு எது பலம், எது பலவீனம் என்பதையும் அவனே தீர்மானித்து படைத்து விட்டான். இந்த காட்டில் மிக மிக பலமானவன் என்று இறுமாந்திருந்த  என்னை, ஒரு சிறு எறும்பு காதில் புகுந்து கொல்ல இருந்தபோது,  நல்ல வேளையாக தாங்கள் வந்ததால் அதனை செயலிழக்க செய்து வெளியில் கொண்டு வந்தீர்கள். இல்லாவிடில் நான் இந்த நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் அல்லவா. அதனால்  இறைவன் படைப்பில் அனைவரும் சமம். அற்ப ஜந்து என்று எதுவும் இல்லை”  என்று  கூற, சிங்க ராஜா ஆமோதிக்க, அனைத்து விலங்குகளும் கைதட்டி  மகிழ, கட்டெறும்புத்தலைவன் மகிழ்வுடன் தன் பேச்சை துவக்கினார். 

நீதி: சிறார்களே இறைவன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமே. ஒன்றின் பலம் அடுத்ததின் பலவீனம்.  அதேபோல் ஒன்றின் பலவீனம் அடுத்ததின் பலம். ஆண்டவன் உயிரினங்களை மிக சாமர்த்தியமாக படைத்துள்ளான் என்பதை புரிந்துகொண்டீர்களா!!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com