கொடி காத்த குமரன்

கொடி காத்த குமரன்

நாடகம்

காட்சி 1

கைத்தல ​நிறைகனி அப்பமொடவல் ​பொரி

கப்பிய கரிமுகன் அடி பேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்

கற்பகம் என வினை கடிதேகும்

(என்று பாடியபடி குமரனின் பெற்றோர்கள் கை கூப்பிய நிலையில்.  பின்னர் கற்பூர ஆரத்தி காட்டுகிறார்கள்).

அப்பா – எங்கே நம்ம குமரனைக் காணோம்?

அம்மா – அவனோட சிநேகிதன் கோபால் வீட்டுக்குப் போயிருக்காங்க

அப்பா – அவன் போயி ஒரு மணி நேரம் ஆச்சே கருப்பாயி

அம்மா – சின்னப் பையன்தானே.  விளையாட்டு புத்தி.  அவன் வரும் வரைக்கும் பூசையை முடிக்காம ​நீங்க கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். 

அப்பா – நான் தறி வேலைக்குப் போகணுமே.   இந்த நாச்சிமுத்து ஒரு முறை கூட             வே​லைக்குத் தாமதமாகப் போனதில்லே.

அம்மா – உண்மைதாங்க.  அந்த வேலைதானே நம்ம குடும்பத்துக்கே சோறு போடுது.  இதோ வந்துட்டானே குமரன்.

(குமரன் வருகிறான்.  அவன் கையில் துணியால் மூடப்பட்ட ஒரு படம்)

அப்பா -  என்னடா அது குமரா?  மறைச்சி எடுத்துட்டு வரே

குமரன் - கோபால் வீட்டிலே பார்த்தேன்.  இந்த சா​மியோட படத்தை இதுவரை பார்த்ததே இல்லை.  எனக்குக் கொடுக்குறியான்னு கேட்டேன்.  அவன் அவங்கப்பாவைக் கேட்டான்.  அவர் எடுத்துக்கன்னாரு.  சந்தோஷமா எடுத்துட்டு  வந்தேன்.

அம்மா – என்ன படம் அது?

அப்பா –  நம்ம சென்னிமலை முருகன் படமாத்தான் இருக்கும்.  (குமரன் மறுப்பது போல் தலை அசைக்கிறான்.  அதை கவனிக்காமல்) முருகர் கூட வள்ளி தெய்வானையும் இருக்காங்க இல்ல.  நம்ம, கோயிலிலே அவங்களை அமிர்தவள்ளி சுந்தரவள்ளின்னு சொல்வாங்க தெரியுமில்ல?

அம்மா – ஏங்க, அவன்தான் நம்ம வீட்டிலே இல்லாத சாமி படம்னு சொன்னானே.  நம்ம வீட்லதான் ஒண்ணுக்கு ரெண்டு முருகர் படம் இருக்குங்களே.  இது பெருமாள் சாமி படமா இருக்கும்.

குமரன் – இல்லம்மா

அம்மா – பின்ன யாரோட படம்டா?

குமரன் படத்தின் மீதுள்ள துணியைத் திறந்தபடி சொல்கிறான் -  நம்ம பாரதமாதாவோட படம்தான்.

அம்மா – அப்படியா?  அதை அப்படியே மீதி சாமி படத்துக்கிட்ட உன் கையாலே வையிடா.

அப்பா – வேணாம் குமரா.

குமரன் –ஏன் பாரதமாதாவின் படத்தை வைக்கக் கூடாது?  அவங்களை வணங்கக் கூடாதுங்கறீங்களா?

அப்பா – பிரிட்டிஷ் துரைக்கு இதெல்லாம் பிடிக்காதுடா.  தெரிஞ்சா தேசத் துரோக நடவடிக்கை எடுப்பாங்க.

குமரன் – அது ஏன்?

அப்பா – அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது.  தன் வீட்ல வச்சுக்கிட்டா வம்புன்னுதான் அந்த கோபாலோட அப்பா இதை உன்கிட்ட சந்தோசமா கொடுத்திருப்பாரு.

குமரன் – அப்பா, அப்பா (கெஞ்சுகிறான்)

அம்மா – ஏங்க நம்ம பையன் ஆசையாக் கேக்கறான்.   பரவாயில்லீங்க.

அப்பா – சரி வை.  ஆனா வாசல்ல யாராவது கும்பினிக்காரங்க வந்தால் இந்தப் படத்தை எடுத்து மறைச்சு வச்சுடு. (அப்பா செல்கிறார்)

அம்மா – சரிங்க....  குமரா, அந்தப் படத்தை வையேன்.

(குமரன் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்க) குமரா, டேய் குமரா

குமரா – இ​ரும்மா.  இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு வைக்கறேன். 

குமரன் படத்தையே பார்த்துக் கொண்டு நிற்க, அம்மா அவனையே பார்க்க காட்சி முடிவடைகிறது.

*************

காட்சி 2

காந்தியவாதி ஒருவர் நடந்து வந்து கொண்டிருக்க, அவர்  பின்னாலேயே பந்து விளையாடியபடி குமரன்.

அப்போது எதிரே நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண்மணி.  அவள்  கைகள் விலங்கால் பூட்டப்பட்டுள்ளன. அவளை அடக்கியபடி  ஓர் இளைஞன் வருகிறான்.  அவள் கோபம் பொங்க அலறிக் கொண்டிருக்கிறாள்.

காந்தியவாதி  – அடிக்காதேப்பா.  வன்முறை கூடாதுன்னு காந்தி மகான் சொல்லியிருக்காரே.  கேட்டதில்லையா?

இளைஞன்   – அப்போ உங்க காந்தியையே வந்து இந்தப் பைத்தியத்தை​ பார்த்துக்க சொல்லு.

காந்தியவாதி   – யாருப்பா இந்தம்மா?

இளைஞன்  – எங்கம்மாதான்.

காந்தியவாதி – அதிர்ச்சியுடன் – உங்க அம்மாவா?

இளைஞன் – ஆமாம்.  எங்கம்மாவும் எங்கப்பாவும் கஷ்டப்பட்டு ஒரு வீட்டைக் கட்டினாங்க.  ஒருத்தன் வந்து தங்கறதுக்கு இடம் கேட்டான். திண்ணையிலே தங்க இடம் கொடுத்தோம்.

காந்தியவாதி  – அவன் கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்குள்ளே வந்தானா?

இளைஞன்  – ஆமாம்

காந்தியவாதி  – அவனிடமிருந்த பொருள் எதையாவது விக்க வந்திருக்கேன்னு சொன்னானா?

இளைஞன்  – ஆமாம்

காந்தியவாதி  – கொஞ்சம் கொஞ்சமா அதிகாரம் செலுத்தத் தொடங்கினானா?

இளைஞன் – ஆமா​ம்

காந்தியவாதி  – அப்புறம் உங்க வீட்டையே தன்னுடையதுன்னு சொல்றானா?

இளைஞன்  – ஐயோ, ஆமாய்யா.  அதனாலேதான் எங்கம்மா இப்படி புத்தி  பேதலிச்சுப் போயிட்டாங்க.  ஆமா, எப்படிய்யா எங்க வீட்டிலே நடந்ததையெல்லாம் நேரில பார்த்த மாதிரி சொல்ற?

காந்தியவாதி  – இதுக்கு உங்க வீட்டுக்கு வேற வரணுமா?  நாட்டிலேயே நடக்கிறதே

(இளைஞனும் பெண்மணியும் சென்றுவிட)

குமரன் – ஐயா, காந்தின்னு யாரையோ சொன்னீங்களே, அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

காந்தியவாதி – உனக்கு அ​வரைப் பற்றித் தெரியாதா?

குமரன் – கொஞ்சம்தான் தெரியும்.

(காந்தி குறித்து காந்தியவாதி கூற, குமரன் பிரமித்துக் கேட்கிறான்.  இறுதியில் ‘காந்தி, காந்தி’ என்றபடி பஜனை செய்யும் கோலத்துடன் செல்கிறான்).

*************

காட்சி 3

அம்மா – பக்கத்து வீட்டு பாட்டி கண்ணாடியைக் காணோம்கிறா​ங்க.  நீ பார்த்தியாடா?

குமரன் திரும்புகிறான்.  அவன் முகத்தில் கண்ணாடி

அம்மா – நீ ஏண்டா பாட்டியோட கண்ணாடியைப் போட்டிருக்கே?

குமரன் – காந்தி போட்டிருப்பாரே.    எனக்குக் கொஞ்சம் வேர்க்கடலை கொடும்மா.

அம்மா – உனக்குப் பொட்டுக் கடலைதானே பிடிக்கும்?

குமரன் – ஆனா காந்திக்கு வேர்க்கடலைதானே பிடிக்கும்

அம்மா – எதுக்குடா வீட்டுக்குள்ளே இவ்ளோ வேகமாக நடக்கறே?

குமரன் – காந்தி வேகமா நடப்பாரே

அம்மா – டேய் டேய் எதுக்குடா துணி காய வைக்கிற தடியை எடுக்கறே?

குமரன் – காந்தி தடி வ​ச்சிருப்பாரே  .. அம்மா ஒரு கைராட்டினம் வாங்கிக் கொடேன்.

அம்மா – ஏண்டா- ..  சரி  சரி காந்தி வச்சிருக்காரேன்னு சொல்லப் போற

குமரன் புன்னகையுடன் தலையாட்டியபடி சட்டைப் பையிலிருக்கிற சீப்பால் வாரிக் கொள்கிறான்.

அம்மா (சிரித்தபடி) – ஏண்டா இப்போ தலையை வாரிக்கிறே?

குமரன் – ஏன்னா காந்தி ... (பாதியில் நிறுத்திக் கொள்கிறான்).  பிறகு போம்மா என்றபடி தடி, கண்ணாடியுடன் கிளம்புகிறான்.

அம்மா – பாத்துடா, காந்தி மாதிரி இருக்கப் போறேன்று தலையை மொட்டை அடிச்சுட்டு வந்து​ நிக்காதே

 *************

காட்சி 4

(காலம் சுழல்கிறது.  குமரனுக்குத் திருமணம் நடந்துவிட்டது).

ராமாயி – நீங்க சின்ன வயசிலே கண்ணாடி, தடியுடன் காந்தி போல நடப்பீங்களாமே, உங்கம்மா சொன்னாங்க.

குமரன் – இப்பவும் அவரைப் போல நடக்கத்தான் முயற்​சி செய்யறேன்.  இந்த வயசிலேயும் காந்தி தண்டி யாத்திரைக்காக எவ்வளவு நடந்திருக்காரு! 

ராமாயி – அது எதுக்குங்க?

குமரன் – நீ நேத்து கஞ்சியிலே எதைப் போட மறந்துட்ட?

ராமாயி – உப்பு.  அதைப் போய் இன்னும் ஞாப​கம் வச்சிருக்கீங்களே.

குமரன் – அதுக்கில்ல.    உப்பு மேலே பிரிட்டிஷ் அரசு வரி விதிக்கப் போகுதாம்.  அதை எதிர்த்து காந்தி தண்டி யாத்திரை போனாரு.

ராமாயி – ஓ, அப்படியா?

குமரன் – ஆமாம்.  நானும் பிரிட்டிஷ் அரசுக்கெதிரான ஒரு ஊர்வலத்திலே நாளைக்குக் கலந்துக்கப் போறேன்.

ராமாயி – என்னது? .... மாமா, அத்தை

(அவர்கள் ஓடி வருகிறார்கள்)

அப்பா, அம்மா – என்னம்மா?

ராமாயி – இவரு அரசாங்கத்துக்கு எதிரான ஊர்வலத்திலே யாத்திரையிலே கலந்துக்கப் போறாராம்

அப்பா – என்னது உண்மையா?

குமரன் –நம்ம திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஒரு மறியல் போராட்டம் நடத்தப் போறாங்க.  அதன் தலைவன்கிற முறையிலே அதிலே கலந்துக்கப் போறேன்.

அப்பா – அதெல்லாம் வேணாண்டா, ​அப்பா சொல்றேன் கேளுடா.

குமரன் – அப்பா ​நீங்க சொன்னதை எப்பவுமே கேட்டு வந்திருக்கேன். இப்ப தேசத்தின் அப்பா சொல்றதைக் கேக்க வேண்டிய நேரம்ப்பா.

அம்மா – பிரிட்டிஷ்காரன் உன்னை சிறை​யிலே போட்டுடுவாண்டா

குமரன் – அம்மா நம்ம பாரதமாதா சிறைப்பட்டிருக்காங்க.  அவங்களை விடுவிக்க வேணாமா?

ராமாயி – ஏங்க, என்னை நினைச்சுப் பாருங்க

குமரன் – நினைச்சுப் பாக்கறேன்.  உன்னை இப்போ வேலு நாச்சியாரா நினைச்சுப் பாக்கறேன்.  ஜான்சி ராணியா நினைச்சுப் பாக்கறேன்.  வீர சென்னம்மாவா நினைச்சுப் பாக்கறேன்.  எனக்கு விடைகொடு.

ராமாயி – (தெளிந்தவளாக) அவர் போகட்டும் மாமா

அப்பா – சரி போராட்டத்திலே கடைசி வரிசையிலேயாவது நில்லு

குமரன் – அப்பா தலைமை தாங்கப் போறதே நான்தான்

                                                            ********

காட்சி 5

கூட்டமாக கொடியேந்தியபடி காந்தியவாதிகள் வருகிறார்கள்.  குமரன் தலைமை தாங்கி வருகிறார்.  ஜெய் ஹிந்த், இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷங்கள்.

எதிரே சில காவலர்களுடன் பிரிட்டிஷ் அதிகாரி - Stop the Indian dogs.  Don’t allow them to proceed.

காவலன் – நி​ல்லுங்க.

குமரன் – எதுக்கு தடுக்கறீங்க?

காவலன் – இந்தக் கொடிக்கெல்லாம் இங்க அனுமதி இல்ல. கொடியைத் ​தூக்கிப் போட்டுட்டுக் கிளம்புங்க.

குமரன் – இது எங்க உயிர்.  உயிரைக் கீழே போட்டுட்டு எங்க போக முடியும்?

காவலன் – உயிரா?  (கொடியை ஆராய்ந்தபடி) உயிர் எங்கேயும் இல்லயே.  டேய், இந்தக் கொடியிலே அப்படி என்னடா இருக்கு?

குமரன் – என்ன இருக்குதா?  நம்ம கொடியோட சிறப்புகளைக் கொஞ்சம் இவங்களுக்கு எடுத்துச் சொல்வோமா?

காந்தியவாதி 1 – காவி நிறம் தியாகத்தைக் குறிக்குது

காந்தியவாதி 2 . வெண்மை நிறம் சமாதானத்தைக் குறிக்குது

காந்தியவாதி 3 – ராட்டினத்திலே உள்ள சக்கரம் நம் முன்னேற்றத்தைக் குறிக்குது

காந்தியவாதி 4 – பச்சை நிறம் எங்கள் வளமையைக் குறிக்குது. 

குமரன் – ஆக எங்கள் கொடியை இழந்தால் எங்கள் தியாகத்தை இழப்போம். சமாதானத்தை இழப்போம்.  முன்னேற்றத்தை இழப்போம்..  வளமையை இழப்போம்.  இப்போது சொல்.  அதையெல்லாம் இழக்க முடியுமா?  

காந்தியவாதி 1 - சுரண்டியது போதாதா?  நாங்கள் பதுங்கியது போதாதா?  எங்களை வாட்டியது போதாதா?  நாங்கள் வாடியது போதாதா?  போதும், போதும், எனவே ..

பிரிட்டிஷ் அதிகாரி  - So?

குமரன் - போ.

பிரிட்டிஷ் அதிகாரி  – Where?

குமரன் - இந்த நாட்டைவிட்டு

பிரிட்டிஷ் அதிகாரி – This is our colonial country.  இது எங்கள் காலனி நாடு

காந்தியவாதி 2 - இனி காலனி நாடு என்றால் காலணிதான்

குமரன் – வன்முறைப் பேச்சு வேண்டாம் தோழர்களே.  தொடர்ந்து நடப்போம்.  இந்தக் கொடியை ஏற்றுவோம்.

காவலன் – நீ என்னென்னவோ விளக்கம் சொன்னாலும் இது வெறும் துணிதானேய்யா.  .

குமரன் – ஐயா, உங்க அப்பா அம்மா புகைப்படம் வச்சிருக்கீங்களா?

காவலன் – அது எதுக்கு இப்போ?

குமரன் – இவ்ளோ தேசப் பற்று உள்ள இந்தியரா இருக்கீங்களே, உங்க அப்பா அம்மாவை ஒரு தடவை பார்த்து வணங்கிக்கலாமேன்னுதான்.

(மகிழ்ச்சியுடன் கொடுக்க)

காவலன் – இந்த இது எங்கம்மாவோட புகைப்படம்.

குமரன் - இந்தப் புகைப்படத்தை நசுக்கட்டுமா?  எரிக்கட்டுமா?  கிழிக்கட்டுமா?

காவலன் – டேய், அது எங்க அம்மாடா

குமரன் – இது எங்க அம்மாடா  .. எங்க அம்மாடா

(ஜெய் ஹிந்த் கோஷம் நடுநடுவே)

பிரிட்டிஷ் அதிகாரி  -  Take away the flags from them.  Let no one move one inch from here.  Charge.

(காவலர்கள் அடிதடி நடத்த, காந்தியவாதிகள் அமைதி வழியில் தங்கள் ஊர்வலத்தைத் தொடர, காவலர்களின் தாக்குதலில் ரத்தம் சொட்டக் கீழே விழுகிறான் குமரன்.  இறக்கிறான்.  தாயின் மணிக்கொடியை உயிரெனக் கருதியதை மெய்ப்பிக்கிறான்.)

மூவர்ணக் கொடி கம்பத்திலிருந்து கிளர்ந்தெழுந்து பட்டொளி வீசி காற்றில் அசைந்து பறக்கிறது.  ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர உணர்வில் ஆர்ப்பரிக்கிறது. தேசியக் கொடி நம் ஒவ்வொருவரின் பெருமை. ஒட்டு மொத்த இந்தியாவை ஒன்றிணைக்கும் மஹாசக்தி. ஒவ்வொரு இந்திய குடிமகனும் கொண்டிருக்கும் கனவின், நம்பிக்கையின் அடையாளம்.

கொடி காத்தான் குமரன்.  அந்தக் கொடியை நாம் ஒவ்வொருவரும் காப்போம்.  பாதுகாப்போம்.  அதற்குரிய மரியாதையை செலுத்துவோம்.  தலைகீழாக அதை அணியக் கூடாது.  கீழே போடக் கூடாது.  அதை அலட்சியமாகக் கையாளக் கூடாது.  அது நம் தாய் நாட்டின் சின்னம்.  தாய்.  ஜெய் ஹிந்த்.  வந்தே மாதரம்.                                                                           

*************

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com