ஓவியம்: பிள்ளை
“தாத்தா… தாத்தா எங்கே இருக்கீங்க?” என்றபடி வீட்டுக்குள் ஓடி வந்தாள் கல்யாணி. ஸ்ரீவாரி அபார்ட்மெண்டில் இருக்கும் குட்டி சுட்டிகள் எல்லாம் இன்னும் வெளியில் ஆரவாரமாக விளையாடிக்கொண்டிருந்தன.
“என்னடா கல்யாணி… இங்கே பால்கனியில் இருக்கேன். இங்கவாடா குட்டி” என்றார் நித்யதேவன். ஓடிப்போய் ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கல்யாணி. வங்கி ஒன்றில் தணிக்கையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த நித்யதேவனுக்கு வயது எழுபது.
”டிவியில் சுதந்திர தின அணிவகுப்பு வருது தாத்தா பார்க்கலாம் வாங்க...” டிவியில் அணிவகுப்பு சோஷியல் டிஸ்டன்ஸிங்படி நடந்துகொண்டிருந்தது. ”லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் என மார்ச் ஃபாஸ்ட் பழகியபடி தாத்தாவின் கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.
மாஸ்க் அணிந்த வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த தாத்தா “வருஷாவருஷம் உங்க ஸ்கூல் மார்ச் ஃபாஸ்ட்ல, கலை நிகழ்ச்சிகள்ல எல்லாம் கலந்துப்பே. இந்த வருஷம் கொரோனா வந்து கெடுத்துருச்சு” என்றார் பேத்தியின் தலையை வாஞ்சையாகத் தடவியபடி.
தந்தைக்கு வடநாட்டுப் பக்கம் மாற்றலானதால் தாத்தா நித்யதேவனுடனும் பாட்டி பகவதியுடனும் வசித்து வந்தாள் கல்யாணி. பக்கத்தில் இருக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தாள். ஃபீஸ் கட்டியாச்சு. கட்டிய ஃபீஸில் கால்பங்குத் தொகைக்கு புத்தகங்கள் கொடுத்திருந்தார்கள். அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் கூட இன்னும் திறக்கவில்லை.
மார்ச் ஃபாஸ்ட் முடியவும் “குடியரசு தினத்துல கலக்கிடலாம் தாத்தா” என்றபடி சேனலை மாற்றினாள். “சமத்துப் பொண்ணே” என்று முகவாய் தொட்டுக் கொஞ்சினார் நித்யதேவன்.
விநாயக சதுர்த்திக்கான முன்னோட்டம் இன்னொரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. விதம் விதமான விநாயகர்கள் அணிவகுத்தார்கள். எல்லாம் போன வருட நிகழ்ச்சியின் தொகுப்பு. இந்தவருடம் கொரோனாவினால் விநாயகர் உருவச்சிலை விற்கவில்லை என அவற்றைச் செய்யும் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரம் பற்றி நொந்தபடி பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
“அதெல்லாம் ஒரு காலம்… நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது எப்படி இருக்கும் விநாயகர் சதுர்த்தி.”
“அது பத்தி சொல்லுங்க தாத்தா” என்றாள் கல்யாணி.
“இப்போ மாதிரி கலர் விநாயகர் எல்லாம் இல்லை. விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் குளத்தில் களிமண் எடுத்து வந்து பிசைந்து பிள்ளையார் பிடிப்போம். அம்மா குந்துமணியால் கண் வைப்பாங்க. தொப்பையில் காசு பதிப்பாங்க. வடகிழக்கு மூலையில் வைப்பாங்க. இதுக்குப் பிராணப் பிரதிஷ்டைன்னு பேரு.
மறுநாள் தோட்டத்து வேலிக்குப்பின்னால கிடக்கும் எருக்கம்பூவெல்லாம் மாலையாகும். கருப்பட்டிக் கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை, உப்புக் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம் எல்லாம் தயாராகும். அப்பா அவல், பொரி, கரும்பு, விளாம்பழம் மத்த பழங்கள் எல்லாம் வாங்கி வருவார். இதை எல்லாம் வைத்து சோடச உபசாரம் செய்த பூஜை செய்வாங்க.
மூன்றாம் நாள் விசர்ஜனம். மறுநாள் அந்த விநாயகரைத் தூக்கிட்டுப்போய் ஆத்திலோ இல்ல வீட்டுக் கிணற்றிலோ கரைப்போம்.”
“ஹை ஈகோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார். அப்போ கலர் பிள்ளையார் எல்லாம் இல்லையா தாத்தா...”
“இல்லைடா. இப்போ மாதிரி பயறு, சாக்லேட், மற்றும் விதம் விதமான பொருட்களால் ஆன பிரம்மாண்ட பிள்ளையாரையும் எங்க கிராமத்துல பார்க்க முடியாது.”
“அப்புறம் எப்படித் தாத்தா இந்த ஊர்வலம் எல்லாம் இவ்ளோ பெரிசா இப்ப நடக்குது?”
“இதுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே லோகமான்ய பாலகங்காதர திலகர்தான். சுதந்திரம் நமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் என முழங்கியவர், இந்த விநாயக சதுர்த்தி வழிபாட்டை மக்களை ஒன்று சேர்க்கவும் விடுதலைப் போராட்ட எழுச்சிக்காகவும் பயன்படுத்திக்கிட்டாரு.”
“அதெப்படி தாத்தா?”
“கணேஷ் உற்சவத்தின்போது நாட்டுப் பற்றைத் தூண்டும் பாடல்களை விநாயகர் பஜன்களோடு பாட வைத்தார். இதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.”
“அட... அருமையான ஐடியாவா இருக்கே தாத்தா… ஜெய் பாலகங்காதர திலக் கி” என்று குதித்தாள் பேத்தி.
“தாத்தாவும் பேத்தியும் முதல்ல சாப்பிட வாங்க. எனக்கு சதுர்த்தி வேலை நிறைய இருக்கு. கொழுக்கட்டைகளுக்கு மாவு பொடிக்கணும்” என்று அழைத்தார் பாட்டி. தாத்தாவும் பேத்தியும் பாட்டி சொல்லைத் தட்டாமல் சாப்பிடச் சென்றார்கள்.