பருத்தியும் வேம்பும்!

பருத்தியும் வேம்பும்!

gokulam strip
gokulam strip

ரு வளமான புன்செய் நிலம். அதில் பருத்திச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. ஒருநாள் காலை நிலத்தின் சொந்தக்காரன் களைக்கொட்டுடன் அங்கே வந்தான். ஒருபுறமாக இருந்த களைகளை வெட்டியெறியத் தொடங்கினான்.

அதைக் கண்டு பயந்த ஒரு சிறிய பருத்திச்செடி அருகிலிருந்த பெரிய செடியைப் பார்த்து, “ஐயோ, நம்மை எல்லாம் இவன் வெட்டி அழிக்கப் போகிறான் போலிருக்கிறதே!” என்று நடுங்கியவாறு கூறியது.

அதன் அச்சத்தை அறிந்த பெரிய பருத்திச் செடி, “ஏன் வீணாகப் பயப்படுகிறாய்? இவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான். நமக்கு இடைஞ்சலாக முளைத்திருக்கும் களைகளை வெட்டி நம் இனத்திற்கு நன்மை செய்ய வந்திருக்கிறான்” என்று தைரியம் சொல்லியது.

அந்தச் சொற்களால் அச்சம் நீங்கிய சிறிய பருத்திச் செடி தனக்கு அருகில் முளைத்து வளர்ந்து கொண்டிருந்த வேப்பஞ்செடி ஒன்றை இளக்காரமாகப் பார்த்து, “பாவம், ஏ, வேப்பஞ் செடியே! நீ இன்னும் சிறிது நேரத்தில் வெட்டப்பட்டு அழியப் போகிறாய்” என்று பொய்ப் பச்சாதாபத்துடன் கூறியது.

பருத்திச் செடியின் உரையைக் கேட்ட வேப்பங்கன்று கொஞ்சமும் பயப்படாமல், “என் தலைவிதி அதுதான் என்றால் யார் அதைத் தடுக்க முடியும்? நடப்பது நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டுச் சஞ்சலப் படாமல் தலை நிமிர்ந்து நின்றது. ஆபத்தை அறிந்தும், அலட்டிக்கொள்ளாமல் அசட்டுத் தைரியத்துடன் பேசுகிறதே! என்று பருத்திச்செடி வேப்பங்கன்றின் மீது எரிச்சலும் சினமும் கொண்டது.

களைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டு வந்த உழவன், மற்ற பூண்டுகளை வெட்டிவிட்டு வேப்பங்கன்றை வெட்டாமல் ஒதுக்கிவிட்டு அப்பால் நகர்ந்து போய்த் தனது வேலையைத் தொடர்ந்தான்.

பருத்திச் செடி வேப்பங்கன்றைப் பொறாமையோடு பார்த்து, “ஏதோ நிலத்துக்காரன் கண்களுக்குப் படாமல் இம்முறை எப்படியோ தப்பித்துவிட்டாய்! அடுத்த களை வெட்டும்போது நீ அழியப் போவது திண்ணம்” என்று ஆணவம் தொனிக்க எச்சரித்தது. அதன் மன நிலையை நன்கு புரிந்துகொண்ட வேப்பங்கன்று அவ்வார்த்தை களைச் சட்டை செய்யவில்லை.

ஐந்தாறு மாதங்கள் அகன்றன. பருத்திச் செடிகள் பலன் கொடுப்பது ஓய்ந்தது. அந்த நிலத்தில் வேறு பயிரைச் சாகுபடி செய்ய விரும்பிய உழவன், நிலத்தின் ஒரு பக்கமாக இருந்து அச்செடிகளைப் பிடுங்கிக் கீழே போட்டுக்கொண்டு வந்தான். அவனது வேலைக்காரனும் அவனுடன் சேர்ந்து அவ்வேலையில் ஈடுபட்டிருந்தான். முன்பு பயந்து நடுங்கிய பழைய பருத்திச்செடி தன் அருகிலிருந்த மற்ற செடிகளைப் பார்த்து, “ஐயோ, போனமுறை களைகளை மட்டும் வெட்டிய உழவன் இன்று நம் இனத்தை அடியோடு அழித்துக் கொண்டல்லவா வருகிறான்!” என்று கூக்குரல் இட்டது. அதற்கு மற்ற செடிகள், “நமக்கு ஆயுள் அவ்வளவுதான்!” என்று நிதானமாகக் கூறிவிட்டு வருகின்ற ஆபத்தை எதிர்நோக்கி நின்றன.  உடனே அஞ்சி நடுங்கிய அப்பழைய செடி வேப்பங்கன்றைப் பார்த்து, “எங்களோடு நீயும்தான் அழியப் போகிறாய். இப்போதுகூட உனக்குப் பயமில்லையா?” என்று வியப்போடு வினவியது.

“பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆக வேண்டும்? நான் எதையும் ஏற்கத் தயார்” என்று தைரியமாகத் தத்துவம் பேசியது.

பருத்திச் செடிகளை வெட்டி வீழ்த்திக்கொண்டு வந்த உழவன்  வேப்பங்கன்றை நெருங்கியதும் நிமிர்ந்து நின்று தன் வேலையாளைப் பார்த்தான். “இந்தாப்பா, இந்த வேப்பங்கன்றை வெட்டிவிடாதே! இது வளர்ந்து நிழல் தரும் மரமாகட்டும், மறந்துவிடாமல் இதற்கு வேலி கட்டு!” என்று ஆணையிட்டான்.

தனக்கு வருவது தெரியாமல் பிறரை எச்சரித்த அந்தப் பருத்திச்செடி, வேப்பங்கன்றினுக்கு வந்த வாழ்வை நினைத்துப் பொறாமையால் புழுங்கியவாறு  வாடி வதங்கி உயிர்விட்டது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com