சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு காடுகள் அவசியம்!

விழிப்புணர்வு!
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு காடுகள் அவசியம்!

னித இனத்தின் நல்வாழ்விற்காக இறைவன் அளித்த நற்கொடை காடுகள். தற்போது மனிதன் வாழத் தகுந்தது என்று கருதுகின்ற நிலப் பரப்பில் 38 சதவிகிதம் காடுகள். அதாவது நான்கு பில்லியன் ஹெக்டேர்.  சற்றேறக்குறைய 154 இலட்சம் சதுர மைல்.

காடுகளின் வகைகள் - வெப்பமண்டல ஊசியிலைக் காடுகள், வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகள், பசுமை மாறா காடுகள், மழைக் காடுகள், புல்வெளிகள் நிறைந்த அடர்த்தியற்ற காடுகள், வளர்ப்புக் காடுகள்.

காடுகளின் பலன்கள்

1.   பூமியை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வெப்பநிலையில் வைத்திருக்க காடுகள் உதவுகின்றன. காடுகள், மரங்கள் ஆகியவை கரியமில வாயுவை உட்கொண்டு நாம் உயிர் வாழத் தேவையான பிராணவாயுவை வெளியேற்று கின்றன. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமடை வதுடன், பூமியின் வெப்ப நிலையும் தணிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்களிலிருந்து ஒரு வருடத்திற்கு கிடைக்கும் பிராண வாயு, சுமார் பத்தொன்பது மனிதர்கள், அவர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்கத் தேவையான அளவு உள்ளது என்று சொல்லலாம். அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியைத் தடுக்கின்றன.

2.   பூமியில் வாழ்கின்ற மனித இனம், விலங்குகள், பறவைகள் என்று அனைத்து சீவராசிகளுக்கும் உணவளிப்பதில் காடுகளின் பங்கு தலையானது. பழங்கள், காய்கள், வகை வகையான கடலைகள், மரக்கன்றுகள், காளான்கள், புழு, பூச்சிகள் பசியில்லாமல் சீவராசிகளை வாழ வைக்கின்றன.

3.   மிருக இனத்தின் புகலிடம், மனித குலத்திற்குத் தேவையான மூலிகைத் தாவரங்கள் ஆகியவற்றின் இருப்பிடம் காடுகள். உலக அளவில் சற்றேறக்குறைய எழுபது சதவிகித தாவரங்களும், மிருகங்களும் இருப்பது காடுகளில் தான். காடுகளின் பரப்பளவு குறையும் போது சில மிருகம் மற்றும் தாவர வகைகள் பூவுலகிலிருந்து முற்றிலுமாக அழிந்து போகும் நிலை உருவாகும்.

4.   ல மக்களின், குறிப்பாக பழங்குடியினரின் வாழ்வாதாரம் காடுகள். நாற்காலி, மேஜை, கட்டில் மற்றும் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மரங்களை அளிப்பது காடுகள். காடுகள் இல்லையேல் காகிதம் இல்லை. புத்தகம், நோட்டுப் புத்தகம் இல்லை. இயற்கை மருத்துவத்திற்குத் தேவையான மூலிகைகளை அளிப்பது காடுகள். மேலை நாடுகளில், வெப்ப நிலை காரணமாக,  வீடுகள் பெரும்பாலும் மரத்தினால் கட்டப் படுகின்றன. காடுகள் வேலை வாய்ப்பை அதிகரிக்கின்றன.

5.   ழை மேகங்களை உருவாக்கி மழை பொழியச் செய்வது காடுகளே. மழையினால் பூமி குளிர்வதுடன், மண்ணின் வெப்பத்தன்மை குறைகிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்க, உணவுப் பற்றாக்குறை அழிகிறது. ஒரு நாட்டை பசி, பட்டினியிலிருந்து காடுகள் காக்கின்றன என்று சொல்லலாம்.

6.   காடுகள் கடுமையான மழை, புயல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்பைத் தடுக்கின்றன. மரத்தினுடைய வேர்கள் மண்ணை இறுக்கிப் பிடித்து  அவை நீரில் கரைந்து செல்லாமல் தடுக்கின்றன. மரங்கள் வெள்ள நீரை உறிஞ்சி, அதனுடைய வேகத்தைக் கட்டுப் படுத்துகின்றன.  நிலத்தடி நீர்வளம் பெருகுவதற்கு மரங்கள் உதவுகின்றன.

7.   லி மாசுபாட்டைக் குறைப்பது, காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விவசாயத்திற்கு உதவுவது காடுகளே.

பழங்குடியினரின் வாழ்வாதரம் காடுகள். அதைப் போல காடுகளைப் பாதுகாப்பதில் பழங்குடியினரின் பங்கு இன்றியமையாதது.

காடுகளின் அழிவும் பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பும்.

சீராக இருக்க வேண்டிய பூமியின் வெட்ப தட்பம் அப்படி இருப்பதில்லை. காய்ச்சல் வந்தால் சூடாக ஆகின்ற நம்முடைய உடல், அது குறைந்ததும், பழைய நிலைக்குத் திரும்புகிறது. ஆனால் உலகத்தின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த வெப்ப நிலை மேன்மேலும் உயர்ந்தால் மனித குலம் அழிவதுடன் அனைத்து உயிரினங்களும் அழியும் அபாயம் உள்ளது.

பூமியிலிருந்து 20 முதல் 30 கிலோ மீட்டர் உயரம் வரை ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் சூரியனின் தீவிர ஊதா கதிரியக்கத்திலிருந்து பூமியைக் காக்கிறது. ஆனால் பூமியிலிருந்து வெளியேறுகிற கரியமில வாயு இந்த ஓசோன் படலத்தை தாக்கி அழிக்கிறது. ஓசோன் படலம் குறைவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. வெப்ப நிலை மாற்றத்தால் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. இது வெள்ளப் பெருக்கிற்கு வழி வகுக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கால நிலை உச்சி மாநாட்டில் உலகத்தின் வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உறுதி மேற்கொள்ளப்பட்டது.

நம்முடைய வாழ்க்கை முறை, தொழிற்சாலைகள், சொகுசான வாழ்க்கைக்காக நாம் உபயோகிக்கும் உபகரணங்கள், வாகனங்கள், இதற்காக செலவழிக்கின்ற எரி பொருட்கள் ஆகியவை கரியமிலவாயுவை அதிக அளவில் வெளியேற்றுகின்றன. இந்தக் கரியமிலவாயு ஓசோன் மண்டலம் வரை சென்றடையாமல் தடுத்து நிறுத்த காடுகள் உதவுகின்றன. ஆனால் அவ்வாறு தடுத்தி நிறுத்தி, பிராணவாயுவை வெளியேற்றுவதற்குத் தேவையான அளவிற்கு காடுகள் இல்லை. ஏன்?

முன்னேற்றம், வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன.

காடுகள் இன்றைய நிலை

னியுகத்தின் முடிவில், சற்றேறக்குறைய 10000 வருடங்களுக்கு முன்னால், மனிதன் வாழ்வதற்கு ஏற்றதான நிலப்பரப்பில் ஐம்பத்தைந்து சதவிகிதம் காடுகள் இருந்தன. அதாவது ஆறு பில்லியன் ஹெக்டர். இருநூற்று முப்பத்தொன்று இலட்சம் சதுர மைல்கள். ஆனால் காட்டின் இந்தப் பரப்பளவு குறைந்து தற்போதைய அளவு, நான்கு பில்லியன் ஹெக்டர், நூற்று ஐம்பத்து நான்கு சதுர மைல்கள் என்றாகிவிட்டது.

காடுகள் அழிப்பு இப்போது தொடங்கப்பட்டது அல்ல. நாகரிகம் ஆரம்பித்த காலம் தொட்டே காடுகள் அழித்து நாடாக்குவது ஆரம்பித்தது.  சோழ அரசர் கரிகாலன் காடழித்து நாடாக்கியதாக “காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” என்ற சங்க கால இலக்கியம் பட்டினப்பாலை மூலமாக அறிய முடிகிறது. இன்றும் தமிழ் நாட்டின் சில ஊர்கள் காடு என்று முடிகிறது. உதாரணம் திருவாலங்காடு, களக்காடு, பழவேற்காடு, ஏற்காடு. இவையெல்லாம் காடழிந்து நாடானவை.

கடந்த நூற்றாண்டில் காடுகள் அழிப்பதன் வேகம் அதிகரித்தது. 9900 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு ஒரு பில்லியன் ஹெக்டர், முப்பதொன்பது இலட்சம் சதுர மைல். அதே அளவு காடுகள் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் அழிக்கப்பட்டன.

காடுகள் பரப்பளவு குறைவதின் காரணம்

பெருகி வரும் மக்கள் தொகையை குடியமர்த்த, விவசாயத்திற்கு, தொழிற்சாலை கட்டுவதற்கு, என்று பல காரணங்களால் காடுகள் அழிக்கப் படுகின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன. காடுகள் அழிவதால் பலதரப்பட்ட விலங்கினங்கள் அழிவதற்கும் வாய்ப்புகள் அதிகம். காடுகள் அழிப்பில் இரண்டு வகைகள் உள்ளன.

1.   நிரந்தர காடழிப்பு – காட்டிலுள்ள மரங்கள் முற்றிலுமாக வெட்டப்படுகின்றன. அதன் பிறகு அந்த நிலம் விவசாயம் அல்லது கனிம சுரங்கம் அல்லது நகர நிர்மாணம் ஆகியவற்றிற்கு உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மரங்கள் மறுபடியும் வளர வாய்ப்பில்லை. காடு நிரந்தரமாக அழிந்து விடுகிறது.

2.   காடு சிதைவு – காடுகள் முற்றிலுமாக அழிவதில்லை. அடர்த்தி மிகுந்த காடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு அடர்த்தி குறைகிறது. அவ்வாறு வெட்டப்பட்ட இடத்தில் பயிர்கள் விளைக்கப்படுகின்றன. அறுவடை முடிந்ததும் மீண்டும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் காடுகளில் மரக்கட்டை, பிசின், காகிதம் ஆகியவற்றின் தேவைக்கு மரங்கள் நடப்பட்டு அவை முடிந்தவுடன் மற்ற மரங்கள் வளர்க்கப் படுகின்றன. காட்டுத் தீயினால் அழியும் மரங்கள் பின்னர் மறுபடியும் வளர்கின்றன. இதில் காடு முழுவதுமாக அழிவது தடுக்கப்படுகிறது.   

வரவேற்கத்தக்க செய்தி

காடுகளின் அழிவினால்  பூவுலகிற்கு ஏற்படும் ஆபத்தை  உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. 1980 முதல் 1989 வரை ,பத்து ஆண்டுகளில், காடுகளின் அழிப்பு 150 மில்லியன் ஹெக்டர். ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இது 78 மில்லியன் ஹெக்டர் ஆக குறைந்தது. 2000ல் ஆரம்பித்த பத்தாண்டில் காடழிப்பு 52 மில்லியன் ஹெக்டர். கடந்த பத்தாண்டுகளில் அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பு 47 மில்லியன் ஹெக்டர். காடுகளை அழிப்பது படிபடியாகக் குறைந்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சிக்காக காடுகளை அழித்து வந்த பல நாடுகள் இப்போது புதிய காடுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளன. உலக நாடுகளை நான்கு வகைகளாக வகுத்திருக்கிறார்கள்.

1.   காடுகள் அதிகமாக உள்ள நாடுகள். காடுகள் அழிப்பது குறைவு. உதாரணம் –காங்கோ, கயானா, சமோவா

2.   காடுகளை அழிப்பது வேகமாக நடைபெறுகிறது.  இதனால் ஒரு வருடத்தில் காடுகள் பரப்பளவு  அதிகமாகக் குறைகிறது. உதாரணம் – அங்கோலா, இலங்கை, பொலிவியா, கம்போடியா, இந்தோனீஷியா, ம்யான்மர்

3.    காடுகள் அழிப்பின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது. உதாரணம் - ஆஸ்திரேலியா, ப்ரேசில், நைஜீரியா, வடகொரியா.

4.   காடுகள் அழிப்பினால் அதனுடைய பரப்பளவு குறைந்தது. அதனை சமன் செய்ய புதிய காடுகளை உருவாக்கி காடுகளின் பரப்பளவை உயர்த்த முயற்சி செய்யும் நாடுகள். உதாரணம் – இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, கனடா, பிரிட்டன்.

உயிரினங்கள் வாழ, பூமியின் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க, தட்ப வெப்பம் சீராக இருக்க காடுகள் அவசியம்.  ஒரு பில்லியன் ஹெக்டர், முப்பத்தொன்பது இலட்சம் சதுர மைல் பரப்பு காடுகள் உருவாக்கப்பட்டால், சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் கேட்டினைத் தடுக்க முடியும் என்பது வல்லுனர்கள் கருத்து. வருங்கால சந்ததியனரின் நல் வாழ்விற்காக, காடுகள் காப்பற்றப் பட வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com