திருவோணப் பண்டிகையின் பின்னணி என்ன? இதுதான் கதை…

சிவன் கோயில் ஒன்றில் ஏற்றி வைத்த விளக்கு அணையும் தறுவாயில் இருந்தது. அச்சமயம் எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏற, அதனுடைய வால் திரி மேல் பட, திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. தன்னையறியாமல் அந்த எலி செய்த காரியம் அதற்கு புண்ணியத்தை அளித்தது.
இறைவன், எலிக்கு அடுத்த ஜென்மத்தில் சக்கரவர்த்தி யோகத்தை அளிக்க, மகாபலி சக்கரவர்த்தி அவதரித்தார். வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார். தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் எது செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
மகாபலி சக்கரவர்த்தியின் புகழ் பல யுகங்கள் நிலைத்திருக்குமாறு செய்ய, மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார். தானமாக மூன்றடி மண்ணை மகாபலியிடம் கேட்டு வாங்கி, இரு அடிகளில் விண்ணுலகம், மண்ணுலகம் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் குனிந்த தலை மீது அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அச்சமயம் மகாபலி, மகாவிஷ்ணுவிடம் “தனது அன்பிற்குரிய நாட்டு மக்களைக் காண வருடந்தோறும் வரும் ஓணத் திருநாள் சமயம் பூவுலகு வர, வரம் அளிக்குமாறு வேண்ட, மகாவிஷ்ணுவும் அதை அருளினார்.”
(“எம் பெருமான் மகாவிஷ்ணுவின் நட்சத்திரமும் திருவோணமாகும்.)
மகாவிஷ்ணு அளித்த வரத்தின்படி, மகாபலி மன்னர் ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று பாதாள உலகிலிருந்து, பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக, கேரள மக்கள் நம்புகின்றனர். இதை நினைவு கூர்ந்து, மகாபலியை வரவேற்கும் வகையில் இத்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் ஒணம் நல்வாழ்த்துகள்!
(அஷாம் சகல்)