அவன் எங்கே போகிறான்?

அவன் எங்கே போகிறான்?
gokulam strip
gokulam strip

-மகேசுவரி

அம்மா அவசரம் அவசரமாகச் சமையல் வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.

இதற்குள் அங்கு வந்த முரளி “அம்மா! எனக்கு நேரமாகி விட்டது. சீக்கிரம் சாப்பாடு போடு” என்று அவசரப் படுத்தினான்.

“மணி எட்டுத்தானே ஆகிறது! இதற்குள் என்னடா முரளி அவசரம்? எட்டரை மணிக்கு சாப்பிட்டால் போதாதா? ஒன்பதரை மணிக்குத்தானே ‘பெல்” அடிக்கிறார்கள்?” என்றாள் அம்மா, டிபன் டப்பாக்களில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டே.

“அம்மா! முரளி அங்கே போய் பால் விளையாடுகிறானாம்... என் கிளாஸ் பசங்க சொன்னாங்க” என்றான் வாசு. தன் புத்தகங்களையெல்லாம் எடுத்து பைக்குள் அடுக்கி வைத்துக்கொண்டே.

“டேய்! ரொம்பத் தெரிந்த மாதிரி சொல்றியே! நான் விளையாடுறதைப் பார்த்தியா?” என்று வாசுவைக் கேட்டான் முரளி.

இதற்குள் அம்மா, “முரளி! தட்டிலே சாதம் போட்டாச்சு. வந்து சாப்பிடு. அவனை ஏன் மிரட்டுகிறாய்?” என்றாள்.

பரக்கப் பரக்க அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிவிட்டான் முரளி.

எட்டரை மணிக்குத்தான் சாப்பிட வந்தான் வாசு. அவனுடன் கூடவே  அவனுடைய அப்பாவும் வந்து உட்கார்ந்தார்.

“ஏண்டா வாசு! இரண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்திலேதானே படிக்கிறீங்க? முரளிக்கு மட்டும் என்ன அவசரம்?” என்று கேட்டார் அப்பா.

“எனக்குத் தெரியாதுப்பா. அவனோட கிளாஸ் பசங்களெல்லாம் எங்கேயோ ஒண்ணாகச் சேர்ந்து விளையாடுகிறார்கள் போலிருக்கிறது” என்றான் வாசு.

“காலை வேளையில் என்னடா விளையாட்டு?”

“அதென்னவோ! என்னைக் கேட்டால்...” வாய் நிறையச் சாதத்துடன் பேசினான் வாசு.

“நானே கொஞ்ச நாளாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். முரளி ஒரு மாதமாகவே இப்படித்தான் காலையில் ரொம்பச் சீக்கிரமாகப் போய்விடுகிறான். அப்படியென்ன விளையாட்டு ஆசை? நீங்க இதைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலே விசாரித்துவிட்டு வாங்க” என்றாள் அம்மா, அப்பாவின் இலையில் ரசத்தை விட்டுக்கொண்டே.

“விளையாடினால் விளையாடிவிட்டுப் போகட்டுமே! படிப்பிலும் முதலாக வருகிறானே, நமக்கு வேண்டியது அதுதானே!” என்றார் அப்பா.

“வாசுவுக்குக் கணக்கே வரமாட்டேன்கிறது. கொஞ்சம் சொல்லிக் கொடுடா என்றால், கேட்பதில்லை. வரவர ரொம்ப மோசமாப் போய்விட்டான்” என்று கூறினாள் அம்மா.

“நீயும் படித்தவள்தானே? சொல்லிக் கொடுப்பதுதானே?”

“பாக்கிப் பாடமெல்லாம் சொல்லிக்கொடுத்து விடுகிறேன். இந்தப் புது மாதிரிக் கணக்கு மட்டும் எனக்குப் புரியவில்லை!”

அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கட்டும் என்று வாசு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான்.

முரளியின் வகுப்பு ஆசிரியரை பஸ் ஸ்டாண்டில் சந்தித்தார் அப்பா. அவரிடம் முரளியைப் பற்றி விசாரித்தார்.

“முரளியைப் பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை சார். அவன்தான் என் வகுப்பில் முதல் ராங்க்” என்று பெருமையாகச் சொன்னார் ஆசிரியர்.

“படிப்பில் முரளி முதல் மாணவனாக இருக்கலாம் சார். ஒழுக்கத்தில்? தினமும் காலையில் எட்டு மணிக்கே சாப்பிட்டுவிட்டுப் போய் விடுகிறான். எங்கே போகிறானோ தெரியவில்லை” முரளியின் அப்பாவுக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது என்பதை ஆசிரியர் புரிந்துகொண்டார்.

“சின்னப் பையன்தானே? எங்கேயாவது கும்பல் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்னமோ! நான் விசாரிக்கிறேன். நீங்களும் அக்கம் பக்கத்திலுள்ள பையன்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்ற ஆசிரியர், அவர் செல்ல வேண்டிய பஸ் வந்துவிடவே விரைந்துபோய் அதில் ஏறிக்கொண்டார்.

மறுநாள்  தன் அலுவலகத்திற்குப் போகும்போது அந்த விளையாட்டுத் திடல் பக்கம் போய்ப் பார்தார் முரளியின் அப்பா.

அங்கே பள்ளிக்கூடத்துப் பக்கமே போக விரும்பாத சில பையன்கள்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில் முரளியைக் காணவில்லை. நிம்மதியாக இருந்தது அவருக்கு. பேசாமல் அலுவலகத்திற்குப் போய்விட்டார்.

அதற்கு அடுத்த நாளும் முரளி எட்டு மணிக்கே சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டான்.

“முரளி! இந்த ஒரு கணக்கை மட்டுமாவது சொல்லிக் கொடுடா” என்று கெஞ்சினான் வாசு.

“அப்பாவிடம் சொல்லிக்கோடா” என்றான் முரளி.

“அப்பாவுக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையாம்டா முரளி! ப்ளீஸ், நாளைக்கு எனக்கு ‘டெஸ்ட்’டா.”

“நாளைக்குத்தானே டெஸ்ட்! சாயங்காலம் வந்து சொல்லித் தருகிறேன். இப்ப என்னைத் தொந்திரவு செய்யாதே” பையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான் முரளி.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்றார் அப்பா.

முரளி தெருமுனை வந்ததும் திரும்பினான்.

அங்கே ஒரு சைக்கிள் ரிக்  ஷாக்காரர் இவனைக் கண்டதும், “வா, ராஜா” என்றழைத்தபடியே முரளியின் கையிலிருந்த பையை வாங்கி ரிக் ஷாவில் வைத்தார். முரளி அந்த ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்துகொண்டான். உடனே அந்த ரிக் ஷாக்காரர் வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றார்.

இரண்டு தெருக்களைக் கடந்து ஒரு சந்துக்குள் நுழைந்தார். அங்கே நிறையக் குடிசைகள் இருக்கின்றன என்பது முரளியின் அப்பாவுக்குத் தெரியும். அந்தக் குடிசைப் பகுதியில் முரளிக்கு என்ன வேலை? என்பதுதான் அவருக்குப் புரியவில்லை. இருந்தாலும் வேகமாக நடந்தார்.

சைக்கிள் ரிக் ஷா நுழைந்த அதே சந்துக்குள் அவரும் நுழைந்தார். கொஞ்ச தூரம் நடந்த பிறகு வலது கைப்பக்கம் திரும்பினார்.

அங்கே அவர் கண்ட காட்சி!

அங்கே ஒரு குட்டிக் கருமாரியம்மன் கோயில் இருந்தது.

அதன் எதிரில் அரைகுறையாக ஒரு கீற்றுப் பந்தல்.

அதில் ஏழெட்டுப் பையன்கள் சிலேட், புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முரளி பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

அப்பாவின் கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது.

தன் மகன் கெட்ட பழக்கங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்கிற மனநிறைவு ஒரு பக்கம். வயதில் மிகச் சின்னவனாக இருந்தும் பெரியவர்கள் கூடச் செய்ய முன்வராத ஒரு நல்ல காரியத்தைச் செய்து வருகிறான் என்பதால் ஏற்பட்ட பெருமிதம் ஒரு பக்கம், உற்சாகமாக வீட்டை நோக்கி நடந்தார்.

அன்றும், முரளி எட்டு மணிக்கே சாப்பிட்டுவிட்டு அவசரம் அவசரமாகப் புறப்பட்டபோது எதிரில் வந்து நின்றார் அப்பா.

“முரளி! நீ தினமும் எங்கே போகிறாய் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. எனக்கு அதில் ரொம்ப சந்தோஷம். இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம்” என்றார்.

ஆச்சர்யமாக அப்பாவின் முகத்தைப் பார்த்தான் முரளி.

“அந்தப் பையன்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாயே முரளி, கூடப் பிறந்த உன் தம்பி வாசுவுக்குச் சொல்லிக்கொடுக்க மட்டும் உனக்கு விருப்பமிருப்பதில்லையே, அது ஏண்டா?”

“விருப்பமில்லாமல் இல்லையப்பா, வாசுவுக்குச் சொல்லிக் கொடுக்க அம்மாவும் நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பையன்களின் அம்மா அப்பாவுக்கு எழுதப் படிக்கவே தெரியாதே! பள்ளிக்கூடத்தில்  சொல்லிக் கொடுப்பதும் அந்தப் பையன்களுக்குப் போதவில்லை. அதனால்தான்... ஏதோ என்னால் முடிந்ததை...” என்று இழுத்தான் முரளி.

அப்பா மனம் கசிந்து நின்றார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com