
ஓவியம் : பிள்ளை
முத்து நாட்டு மன்னனுக்கு இரட்டை இராஐகுமாரர்கள். ஒருவன் சுந்தரன். அடுத்தவன் இந்திரன். இருவரும் சிறந்த வீரர்கள். அதி சூரர்கள். குருகுலம் முடித்து இருவரும் நாடு திரும்பினார்கள். வில் வித்தையிலும் வாள் வித்தையிலும் தலைசிறந்து விளங்கினார்கள். தரும சாஸ்திரத்திலும் அவர்களுக்குத் தெரியாத நீதிநெறிகளே இல்லை. அதனால் நாட்டு மக்கள் இரட்டை இளவரசர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள்.
அந்த நாட்டு வழக்கப்படி யாரையாவது ஒருவரைத்தான் இளவரசனாக அறிவிக்க முடியும். அப்படி அறிவிக்கப்பட்டவன்தான்
தன் வம்ச வழியாக நாட்டை வழிவழியாக ஆள முடியும். அப்படி என்றால் ஓர் இளவரசன்தான் மன்னனாக முடியும். அடுத்தவனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படும். இதில் சிக்கல் என்ன என்றால் இரு இளவரசர்களுமே அறிவிலும் ஆற்றலிலும் சம பலம் பொருந்தியவர்கள்.
அப்படி என்றால் யாரை நாட்டின் இளவரசனாக அறிவிப்பது. மன்னர் குழம்பினார். உடன் அறிவுசால் அமைச்சரை ஆலோசனை கலந்தார். அமைச்சரும் செய்வதறியாது மன்னருடன் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் இராஐ குருவை ஆலோசனை கேட்டார். இராஐ குருவும் தன்னால் இதற்குத் தீர்வு கூற முடியாது என்று சொல்லி, ‘இந்தச் சிக்கலை தீர்த்து வைக்க நாம் நம் குருகுலத்தின் குருவையே நாடுவோம். அவர்தான் கல்வி போதித்தவர். அவர் ஒருவரே இருவரின் ஆற்றலையும் அறியக்கூடியவர்’ என்று ஆலோசனை கூறிவிட்டார். உடன் இராஐகுருவையும் அமைச்சரையும் அழைத்துக்கொண்டு மன்னர் தன் நாட்டின் புகழ்பெற்ற குருகுலத்தின் குருவையே தீர்வு கொடுக்க வேண்டி சென்றார்.
குருநாதர் விவரம் புரிந்துகொண்டார். அவருக்கும் தெரியும். இது மிக சிக்கலான பிரச்னை என்பது. குரு யோசித்தார். “மன்னா இன்று இரவு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நான் அமைச்சருக்கு ஒரு அறிவுரை கொடுப்பேன். அதன்படி நடந்துகொள்ள வேண்டும். நாளை நீங்கள் நிச்சயம் ஒருவரை நாட்டின் இளவரசனாக நியமித்துவிடலாம்” என்றதும் மன்னர் பெருமூச்சு விட்டபடி அமைச்சரின் மேலான ஆலோசனையை ஏற்றுத் திரும்பினார்.
அன்று இரவு குருநாதர் தன் இரு சீடர்களான இராஐகுமாரர்களுடன் குடிலுக்குள் உறங்கிக்கொண்டிருந்தார்.
நடு இரவு. ஒரு பெரும் அசுர சத்தம்.
‘உள்ளே இருக்கும் நரனே வா வெளியே. நான் மனிதர்களைப் புசிக்கும் அரக்கன். நீயோ சாதாரண நரன் அல்ல. இந்த உலகுக்கே அறிவு போதிக்கும் பெரும் ஆசான். உன்னைப் புசித்தால் என் வயிற்று பசியும் போகும். அறிவுப்பசியும் தீரும். வா வெளியே. நீயே வந்தால் சேதம் இல்லை. மாறாக நான் உள்ளே வந்தால் உன் குருகுலத்தையே துவம்சம் செய்து விடுவேன். வா வெளியே’ அசுரக் குரல் ஓங்கி ஒலிக்க, வானமே கிடுகிடுத்தது.
குருநாதர் யோசித்து உடன் முடிவெடுத்தார். வேகமாக வெளியே செல்ல எழுந்தார். இந்திரன், அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். ஆனால், சுந்தரன், எழுந்து வேகமாக முன் சென்றான். அவன் கதவைத் திறந்து செல்ல முற்பட்டபோது குருநாதர் அவனைத் தடுத்தார்.
“குருவே என்னை அரக்கனிடம் செல்ல அனுமதியுங்கள். தாங்கள் பெரும் குருநாதர். பற்பல வித்தைகளையும் தருமங்களையும் கற்ற பெரும் பண்டிதர். தங்கள் உயிர் மகத்தானது. இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் உங்கள் சேவை மிக முக்கியமானது. நான் அரக்கனுக்கு இரையாவதால் இழக்கப்போவது ஒரு இளவரசனைத்தான். நாட்டுக்கு என்னைப் போல் இன்னும் ஒரு இளவரசன் இருக்கிறான். அவனைக்கொண்டு மன்னர் நாட்டை ஆண்டு, மக்களைக் காக்கலாம். யார் இளவரசன் என்ற முடிவெடுப்பதில் உள்ள வீண் குழப்பமும் தீரும். பெரும் நீதிமான் மற்றும் கல்வியாளரான தங்கள் உயிரும் காப்பாற்றப்படும். எனவே நான் செல்வதே சிறந்தது” என்று தன்னிலை விளக்கம் அளித்து வேகமாக வெளியேறினான் சுந்தரன்.
சற்று நேரம் பெரும் அமைதி.
“குருநாதரே என்ன ஆயிற்று?” என்று இந்திரன் ஆவேசத்துடன் கேட்க, குருநாதர் பெருத்த கை ஒலி கொடுத்தார். அவ்வளவுதான் மீண்டும் அவர் குடிலின் கதவு திறந்தது. அனைவரும் வாருங்கள். இளவரசன் யார் என்று தெரிந்தது” என்றார் குருநாதர். இந்திரன் புரியாமல் விழித்தபோது குடிலின் வாயிலில் இருந்து மாமன்னர், அமைச்சர், மகாராணியார் மற்றும் இராஐகுரு, தளபதி அனைவரும் பிரவேசித்தனர்.
“குருவே யார் இளவரசன்?” மன்னர் ஆர்வத்துடன் கேட்டார்.
“சுந்தரன்தான்!! இதில் சந்தேகம் என்ன?” என்றார் குருநாதர்.
“அவனைக் காணவில்லையே. நான் இந்திரனைத்தானே பார்க்கிறேன்” என்றார் மன்னர்.
“அப்பா அது சோகக்கதை. மனிதனைப் புசிக்கும் அரக்கன் வந்து குருநாதரை அழைத்தபோது தன் உயிரைத் தருகிறேன் என்று கூறி அரக்கனுக்கு இரையாகிவிட்டான் நம் சந்திரன்” என்று அழுதான் இந்திரன்.
மகாராணியார் ஒவென அழவும், மன்னர் கோபத்துடன் குருவைப் பார்த்து “இல்லாத ஒருவனை எப்படி இளவரசனாக்க முடியும். என் சுந்தரனுக்கு என்ன நடந்தது?” என்று கேட்கவும், குருநாதர் சிரித்தபடியே மீண்டும் கைகளைத் தட்டவும் வேகமாக வாயிலில் இருந்து வந்து குருநாதரின் பாதங்களைப் பணிந்தான் சுந்தரன்.

இந்திரனுக்கு ஆச்சர்யம். மகாராணிக்கும் மன்னருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
“இப்போது நான் கூறியதை உறுதி செய்கிறேன். இந்த நாட்டின் இளவரசனாக சுந்தரன் இருக்கட்டும். துணைவனாக இந்திரன் இருக்கட்டும். இதுவே என் தீர்வு” என்றார் குருநாதர்.
பின், குருநாதர் அனைவரையும் பார்த்து புன்முறுவல் இட்டபடி “நடந்தது எல்லாம் என் சித்து வேலையே.” அரக்கனும் இல்லை. அவன் சுந்தரனை புசிக்கவம் இல்லை. ஆனால், அப்படி ஒரு நிலை உருவாக நான் வழி செய்தேன். இந்திரன் என்னைப் பிடித்து நிறுத்த, சுந்தரனோ தன்னையே கொடுத்து என்னைக் காக்கும் ஒரு நிலை எடுத்தான். ஆனால், எல்லாம் நான் உருவாக்கிய மாயை. இதன் மூலம்தான் யார் இளவரசனுக்கு மிகவும் தகுதியானவன் என்று நான் தீர்மானித்தேன். அந்த வகையில் சுந்தரனே தகுதியானவன் என்றும் உறுதியாய் தீர்மானித்தேன்” என்றார் குருநாதர்.
“அவனிடம் அப்படி மிகுதியாய் இருந்த தகுதி எது?” என்று கேட்டார் தளபதி.
“தியாகம்” என்று பதிலளித்தார் குருநாதர்.
“என்னதான் வீரத்திலும் அறிவிலும்; தர்ம சாஸ்திரத்திலும் இருவரும் சிறந்து ஒரே நிலையில் விளங்கினாலும் தியாகம் என்ற ஒரு மனோநிலை சுந்தரனை இளவரசனாக்க தகுதியாக்கியது. சமயத்தில் மக்களைக் காக்க மன்னர் தன் இன்னுயிரையும் கொடுக்க சித்தமாய் இருக்க வேண்டும். அந்தத் தகுதிதான் சுந்தரனிடம் நான் கண்ட மிகுதி” என்று கூறி முடிக்கவும் இந்திரன் ஓடிச் சென்று சுந்தரனை கட்டி தழுவிக்கொண்டான். சுந்தரன் குருநாதர் பாதங்களில் விழுந்து பணிய அவர் ஆசி பெற்று நாட்டின் அடுத்து பொறுப்பேற்கும் இளவரசனாக அறிவிக்கப்பட்டான்.