யார் அடுத்த மன்னர்?

சிறுவர் கதை!
யார் அடுத்த மன்னர்?

சொர்ணபுரி நாட்டை ஆண்ட இந்திரசேனனுக்கு அஜயன், ஜெயன், விஜயன் என்று மூன்று மகன்கள் இருந்தனர். மன்னருக்கு வயதாகி விட்டதால் தன் மூன்று மகன்களில் ஒருவரை அடுத்த மன்னராக நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஒரு நாள் மகன்களை அழைத்த மன்னர், அவர்களிடம் ஆளுக்கு ஒரு பொன் முடிப்பைக் கொடுத்தார். ‘’ நீங்கள் மூவரும் இந்த நாட்டை விட்டு வேறு வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டும். இதை மூலதனமாக வைத்து நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும். ஆனால் எங்கும் நீங்கள் இளவரசர்கள் என்ற உண்மையை சொல்லக்கூடாது. ஒரு வருடம் கழித்து இங்கே திரும்பி வர வேண்டும். யார் அதிக அளவில் பணம் சம்பாதித்து இருக்கிறீர்களோ அவரையே இந்த நாட்டின் மன்னனாக நியமிப்பேன்’’ என்றார்.

தந்தையின் கட்டளையை ஏற்ற மகன்கள் அடுத்த நாளே தம் பயணத்தை தொடங்கினர். மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் பயணம் செய்து வேறு வேறு ஊர்களை அடைந்தனர்.

அஜயன்  தன் பணத்தை எப்படிப் பெருக்குவது என்று யோசித்தான். சிரமமே இல்லாமல் பணம் சேர்க்க வேண்டும் என்பது அவனுடைய கொள்கை. எனவே அந்த ஊரில் உள்ள முக்கியமான பெரிய மனிதர்களை அழைத்து, ‘’நான் இந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்யப்போகிறேன்’’ என்று அறிவித்தான். அவனிடம் பல வியாபாரிகளும் வணிகர்களும் பொதுமக்களும் வந்து பணம் பெற்று சென்றனர். அவர்களிடம் அதிக வட்டி வாங்கி சம்பாதிக்க ஆரம்பித்த அஜயன் ஒரு வருடத்தில் பெரும் பொருள் சேர்த்தான்.

இரண்டாவது மகனான ஜெயன் வேறு ஒரு ஊரை அடைந்தான். அவனும் எப்படி பணம் சம்பாதிப்பது என்று யோசித்தான். கடைசியில் பட்டு ஆடைகளை மொத்தமாக வாங்கி வந்து இந்த ஊரில் விற்பது என்று முடிவு செய்தான். அதன்படி பட்டாடைகளை அதிக விலைக்கு விற்று, அவனும் ஒரு வருடத்தில் நிறைய பணம் சம்பாதித்து விட்டான்.

மூன்றாவது மகனான விஜயன் தான் சென்றடைந்த ஊரில்,  தன்னிடம் உள்ள பொருளை வைத்து ஒரு போர் பயிற்சிக்கூடத்தை அமைத்து அதற்கான பொருட் களையும் வாங்கினான். அங்கு வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் மல்யுத்தம் மற்றும் வில் அம்பு விடுதல், தற்காப்புப் பயிற்சி போன்ற கலைகளை கற்றுத் தர ஆரம்பித்தான். குறைந்த கட்டணம் என்பதால் நிறைய வாலிபர்கள்  அவனுடைய மாணவர்களாகச் சேர்ந்தார்கள். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் நிறையப் பேர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தனர்.

விஜயனுக்கு மிகவும் இளகின மனது. அந்த ஊரில் உள்ள ஏழைகள், முதியோர்களுக்கு தினமும் உணவளித்தான். அவனது கலைக்கூடத்தில் நிறைய புறாக்களும் மற்ற பறவைகளும் இருந்தன. அவைகளுக்கும் தானிய வகைகளை தினமும் தவறாமல் அளித்து வந்தான். ஒரு வருட முடிவில் அவனிடம் குறைந்த அளவே பணம் சேர்ந்தது.

ரு வருடம் கழித்து மூன்று இளவரசர்களும் தம் சொந்த நாட்டை வந்து அடைந்தனர். அங்கே  மன்னர் தன் மூன்று மகன்களையும் மிகுந்த ஆவலோடு வரவேற்றார். யார் அடுத்த  மன்னர் என்று தெரிந்துகொள்ள அந்த நாட்டு மக்களும் அரண்மனை வளாகத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

மூத்த மகன் அஜயன் தான் சேமித்த பணத்தை காண்பித்தான். ஒரு பெரிய பெட்டி நிறைய ஏராளமான பணம் வைத்திருந்தான். இரண்டாவது மகன் ஜெயனிடமும் நிறையப் பணம் இருந்தது. விஜயனிடம் மிகக் குறைந்த அளவு பணமே இருந்தது.

‘’எதன் மூலம் இப்படி சம்பாதித்தீர்கள்?’’ என்று கேட்டார் அரசர். மூவரும் தாம் செய்த தொழிலைப் பற்றி விளக்கினார்கள். அதைக் கேட்ட அரசர், ‘’புதிய மன்னரை நான் தீர்மானித்து விட்டேன்’’ என்றார் புன்சிரிப்புடன். அஜயனும் ஜெயனும் தம் இருவரில் ஒருவரைத்தான் அப்பா தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். மக்களும் அவ்வாறே நினைத்தனர். ஆனால் அவர்கள் நினைப்பைப் பொய்யாக்கும் வகையில் ‘’விஜயன் தான் இந்நாட்டின் அடுத்த மன்னர். அவனுக்குத்தான் நான் முடிசூட்டப் போகிறேன்’’ என்றார் அரசர். அதைக்  கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.

‘’பொருள் சம்பாதிப்பது  நல்ல வழியில் இருக்க வேண்டும். வெறும்  பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழில் செய்யக்கூடாது. தான் செய்யும் வேலை மற்றவருக்கு உபயோகமாகவும் இருக்க வேண்டும். அஜயன் அநியாய வட்டி வாங்கி பணம் சேர்த்தான். ஜெயன் அதிக லாபத்திற்கு பட்டாடைகளை விற்றான். ஆனால், விஜயன் மக்கள் மேல் மிகுந்த அன்பு கொண்டு அவர்களுக்கு தேவையான போர்ப் பயிற்சி அளித்தான். மிகக் குறைந்த கட்டணமே வாங்கினான். மக்களை நேசிக்கும் மன்னன்தான் பதவிக்கு வரவேண்டும். அப்போதுதான் ஆட்சி நன்றாக இருக்கும். அதனால்தான் நான் விஜயனை தேர்ந்தெடுத்தேன்’’ என்றார் மன்னர்.

மக்களும், மற்ற இரு மகன்களும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். விஜயன் புதிய மன்னனாக நியமிக்கப்பட்டான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com