மனிதக் காட்சி சாலை!

Wild animals
Wild animalsimage credit; vecteezy

விலங்குகள் பேச ஆரம்பித்தால், இப்படித்தான் பேசிக்கொள்ளுமோ?

மனித நடமாட்டம் இல்லாத மிக அடர்ந்த காடு. காட்டின் நடுவே இருந்த திறந்த வெளியில் விலங்குகள் கூடியிருந்தன. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சிங்கம் பேச ஆரம்பித்தது.

“மனித இனத்தையும், விலங்கினத்தையும் சமமாகப் பாவித்த இறைவன், மனித இனம் வாழ சமவெளியையும், மிருகங்கள் வாழக் காடுகளையும் அமைத்தான். பேராசை கொண்ட மனிதன், ‘எல்லாம் எனக்கே’ என்று காடுகளை அழித்து நாடாக்கிக்கொண்டிருக்கிறான். இந்த நிலை தொடர்ந்தால் விலங்குகள் சுதந்திரமாக வாழ காடுகளே இருக்காது.

இறைவனின் படைப்பில் நான் உயர்ந்தவன் என்ற இறுமாப்பு மனிதனுக்கு. அவன் சிறுவர்களுக்காக எழுதும் கதைகளில் மிருகங்களையும், பறவைகளையும் அறிவற்றவைகளாகச் சித்தரிக்கிறான். இளம் நெஞ்சங்களில் விலங்குகளைப் பற்றித் தவறான கருத்துக்களைப் பரப்புகிறான்.”

காகம் பேச ஆரம்பித்தது. “தண்ணீர் தேடி அலைந்த காக்கா கதையில், பானையின் கீழ் பாகத்திலிருந்த தண்ணீரை குடிக்க முடியாத காக்கா, சிறு சிறு கற்களைப் பானையில் போட்டு, தண்ணீர் மேலே வந்தவுடன் குடித்து விட்டுப் பறந்தது என்று காக்கையின் புத்தியை உயர்த்தி எழுதினான்.

ஆனால், அதே மனிதன் மற்றொரு கதையில், காகத்தை திருடன் என்றும் முட்டாள் என்றும் சித்தரித்திருக்கிறான். காகம் ஒன்று வடையை திருடிக்கொண்டு பறந்து செல்ல, அதனிடமிருந்து வடையை அபகரிக்க நினைத்த நரி, காகத்தைப் புகழ்ந்து பேசியது. புகழ்ச்சியில் மயங்கிய காகம், வாயில் வடை இருப்பதை மறந்து பாடுவதற்கு வாய் திறக்க, வடை கீழே விழுந்தது. இதில் காகம் முட்டாள், நரி தந்திரசாலி.”

“ஏன், ஒரு கதையில் என்னையும்தான் முட்டாள் என்று சித்தரித்திருக்கிறான். ஆழமான கிணற்றில் தன்னுடைய நிழலைப் பார்த்து, தனக்கு போட்டியாக இன்னொரு சிங்கம் வந்துவிட்டதாக நினைத்து, அந்த சிங்கத்துடன் சண்டை போட கிணற்றில் குதித்து சிங்கம் இறந்ததாக ஒரு கதை. இதில் சிங்கம் முட்டாள், முயல் அறிவாளி” என்றது சிங்கம்.

“முயலை மட்டும் விட்டுவைத்தானா? முயலுக்கும், ஆமைக்கும் ஓட்டப் பந்தயம். ஓட்டப் பந்தயத்தில் வென்று விடுவேன் என்ற மமதையில், பந்தயத்தின் நடுவில் முயல் தூங்க, ஆமை போட்டியில் வென்றது என்று ஒரு கதை” என்றது முயல்.

“எங்கள் நிலை பரிதாபமானது. அதிரசத்தைத் திருடிய பூனைகள், அதை பங்கு போட்டுக்கொள்வதில் சண்டையிட, மத்தியஸ்தம் செய்ய வந்த குரங்கு, பூனைகளை ஏமாற்றி, சிறிது சிறிதாக முழு அதிரசத்தையும் சாப்பிட்டு விடுகிறது.

எங்களை இத்தோடு விட்டானா? ‘டாம் அண்ட் ஜெர்ரி’ என்ற கார்ட்டூன் படத்தின் மூலமாக எலிகளை அதி புத்திசாலியாகவும், பூனைகளை அடி முட்டாளாகவும் காட்டியிருக்கிறான்” என்றது பூனை.

சிங்கம் மீண்டும் பேசத் தொடங்கியது.  “மனிதன் நம்முடைய எதிரி. பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவனான மனிதன், விலங்கினத்தை இரண்டாகப் பிரித்தான். சாதுவான மாடு, பசு, ஆடு, கழுதை, நாய், பூனை ஆகியவற்றை வீட்டு விலங்குகள் என்று அடிமைப் படுத்திக்கொண்டான். இதிலும் நாய், பூனை அவனுடைய செல்லப் பிராணிகள். மற்றவை அவனுக்கு உழைக்க வேண்டும்!

மற்ற விலங்குகள், வன விலங்குகள் என்று பாகுபடுத்தி, காடுகளில் இருக்கும்படி பணித்தான். ஆனால், இங்கும் நம்மை நிம்மதியாக வாழவிடாமல் செய்தான். மனிதர்கள் வந்து தங்கி வேட்டையாடக் குடியிருப்புகள், தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லுதல், சந்தன மரங்களை வெட்டுதல் என்று விலங்குகள் சுதந்திரமாகத் திரிய முடியாத நிலையில் காடுகளை வைத்துள்ளான்.”

பசு பேச ஆரம்பித்தது. “எங்கள் வாழ்வு அடிமை வாழ்வு. எங்களின் பாலைக் கறந்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறான். அவனுடைய சுயநலத்திற்காக எங்களுக்கு வைக்கோல் போட்டு வளர்க்கிறான். எங்களிடமிருந்து சுரக்கும் பாலின் அளவு குறைந்தால் நாங்கள் கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுவோம்.”

“இதே நிலைதான் எங்களுக்கும்” என்றன கோரஸாக ஆடு, மாடு எல்லாம்.

“மகிழ்ச்சியான வாழ்க்கை நாய்க்கு மட்டும்தான்” என்றது பசு. “எங்களையும் கழுத்தில் தடித்த பெல்ட் போட்டுத்தான் இழுத்துச் செல்கிறார்கள். நாங்கள் ஒன்றும் சுதந்திரமாக இல்லை” என்றது நாய்.

Image credit : free pic images

“உங்களைப் பற்றியே பேசுகிறீர்களே. எங்கள் நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? நாள் முழுவதும் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறோம். நாங்கள் இடும் முட்டையை உண்டும், விற்றும் வாழ்கிறார்கள்,” என்றது கோழி. “எப்போது எங்களைக் கொன்று உணவாக்கிக் கொள்வார்கள் என்று பயந்து வாழ்கிறோம்.”

“நான் மனிதனை வெறுப்பதற்கு மற்றுமொரு காரணம் அவன் நிறுவியுள்ள மிருகக் காட்சி சாலைகள். மிருகங்களைக் கூண்டிலடைத்து அதைப் பார்க்க வருகின்றவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறான். நம்மை விந்தைப் பொருளாகக் காட்டிப் பணம் சம்பாதிக்கிறான். மனிதர்களை கூண்டிலடைத்து, மனிதக் காட்சி சாலை என்ற பெயரில் விலங்குகள் பார்ப்பதற்காகச் செய்ய வேண்டும் என்ற வெறி எழுகிறது என் மனதில்” என்றது சிங்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com