0,00 INR

No products in the cart.

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

– ஜி.எஸ்.எஸ்.

தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று ஏனோ மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்’ என்றார்.

குறிப்பாக, தன் மூத்த மகனைப் பற்றி அவருக்கு அதிகப்படி பெருமை. ‘‘ஒரு முறை ஆர்யன் என்னிடம் வந்து, ‘நான் நடிகனாகப் போவதில்லை. நான் நடிப்புத் துறைக்கு வந்தால் என்னை உங்களோடு ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதனால், நான் ஒரு எழுத்தாளனாகப்போகிறேன்’ என்றான். ஆர்யன் நிச்சயம் என்னைவிடப் பெரிய அளவுக்கு வருவான்.’’

வருங்காலத்தில் அவர் பெரிய ஆளாக வரக்கூடும். ஆனால், இப்போது சிறுமையான செயலுக்கான காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் இருபத்து மூன்று வயது ஆர்யன்.

மும்பையிலிருந்து கோவாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த சொகுசுக் கப்பல். சிறிய தொலைவுப் பயணம். அதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஒரு பெரிய பார்ட்டி. கேலியும் கிண்டலும் தள்ளாட்டமுமாக அந்தப் பார்ட்டி நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று சாதாரண உடையில் அங்கு வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இருபது பேர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். அந்தக் கப்பல் முழுவதும் சுமார் ஏழு மணி நேரம் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ, சரஸ் போன்ற பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எட்டு பேர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆர்யன் கானும் ஒருவர்.

சிறப்பு நீதிமன்றத்தில், ‘ஆர்யன் கான் போதைப்பொருள் உட்கொண்டிருந்தார். அவ்வளவுதான். அவரிடமிருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. எனவே, அவரை ஜாமீனில் விட வேண்டும்’ என்றார் அவர் தரப்பு வழக்கறிஞர். ஆனால், போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுடன் ஆர்யன் வாட்ஸப்பில் சாட்டிங் செய்திருப்பதை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

‘கபி குஷி கபி கம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் ஜூனியர் ஷாருக்கானாக நடித்திருக்கிறார் ஆர்யன். சிறு வயதிலிருந்தே சிறப்பான குரல் வளம் கொண்டவர். 2004ல், ‘ஹம் ரஜாவப் ஹை’ என்ற திரைப்படத்திற்காக, ‘சிறந்த குழந்தை டப்பிங் கலைஞர்’ என்ற விருது பெற்றவர். ‘தி லயன் கிங்’ திரைப்படத்தின் இந்தி வடிவத்தில் சிம்பா என்ற சிங்கத்துக்காகக் குரல் கொடுத்தவர். நடிப்பில் விருப்பமில்லை என்றும், இயக்கத்தில்தான் தனது விருப்பம் என்றும் இவர் கூறியதுண்டு. போதை மருந்து விவகாரத்தில் அவரை யாராவது இயக்கியிருக்கிறார்களா என்பது விரைவில் தெரிந்து விடும்.

ஷாருக்கானின் மகனுக்கு நேர்ந்த நிலை வருத்தத்துக்கு உரியது. இது ஒருபுறமிருக்க, உங்கள் (அல்லது உங்களுக்கு நெருங்கியவர்களின்) டீனேஜ் குழந்தைகள் போதைப் பொருள் பயன்பாட்டில் சிக்கிவிடாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் சீரியஸாக யோசிக்க வேண்டிய காலகட்டம் இது.

போதைப்பொருள்கள் அவர்கள் உடல் நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதோடு, அது பிறருடனான உறவுகளை எப்படி பாதிக்கும் என்பதையும் விளக்குங்கள். போதைப் பொருளைப் பயன்படுத்தினால் அது அவர்கள் விளையாட்டுத் திறமை, தோற்றம் ஆகியவற்றையும் பெரிதும் சீர்குலைக்கும் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
உங்கள் டீனேஜ் குழந்தைகள் எந்த சமயத்தில் எங்கே இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். ‘தோளுக்கு மேலே வந்தாச்சு. சுதந்திரம் வேண்டாமா?’ என்பதை இந்தக் கோணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டாம்.

தெளிவான விதிகளை வகுக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் யார் வெளியே எங்கே போனாலும் இவ்வளவு நேரத்திற்குள் வந்து விட வேண்டும் என்றும், இரவில் வேறு நண்பர்களுடன் தங்குவது கூடாது என்றும் விதிகள் வகுக்கலாம். அவற்றை நீங்களும் முதலில் பின்பற்ற வேண்டும் என்பது மிக முக்கியம்.

பிரச்னைகள் வரும்போது அவற்றைத் தெளிவான முறையில் நீங்கள் அணுக வேண்டும். அப்போதுதான் இதைப்பார்த்து தாங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது அவற்றைக் கையாள்வது எப்படி என்பது அவர்களுக்குத் தெளிவாகும். சிக்கல்களில் மனம் துவளும்போது போதையின் பாதையில் சென்றவர்கள் பலர்.

வீட்டுக்குள் நண்பர்கள் வந்தால் அனைவருமாக அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்ளக் கூடாது என்பதை முதலிலேயே தெளிவாகச் சொல்லி விடுங்கள்.
டீனேஜ் குழந்தைகளிடம் அதிக நேரம் மனம்விட்டுப் பேசுங்கள். அப்படிப் பேசும்போது போதைப்பொருள்கள் பற்றிய அவர்களின் கருத்து என்ன என்பதையும் சாமர்த்தியமாகக் கண்டறியுங்கள்.

யாராவது நண்பர் போதைப்பொருளை அறிமுகப்படுத்தினால் எப்படி அழுத்தமாக அதை மறுக்க வேண்டும் என்பதையும் பயிற்றுவிக்க வேண்டும். உங்கள் கடந்த காலத்தை சொல்வது போல, ‘என்னிடமும் ஒரு நண்பன் இப்படிக் கட்டாயப்படுத்தினான். நான் இந்த விதத்தில் மறுத்துவிட்டேன்’ என்று உண்மையான அல்லது கற்பனையான சம்பவங்களைக் கூறுங்கள்.

ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களுக்கும் உங்கள் டீனேஜ் குழந்தைக்கும் தீவிரமான கருத்து வேறுபாடு ஏற்படலாம். அதில் நீங்களும் உங்கள் தரப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். தவறில்லை. ஆனால், அதேசமயம் அந்த முரண்பாடைத் தொடர விடாது இருதரப்புக்கும் பிடித்தமான ஒன்றுக்கு உரையாடலை மாற்றுங்கள். அது இசை, சமையல், நண்பர்கள், விளையாட்டு என்று எதுவாகவும் இருக்கலாம். இதன் மூலம் அவர்களின் சில கருத்துக்களை எதிர்க்கிறீர்களே தவிர, அவர்களை அல்ல என்பது மனதில் பதியும். எதையும் பகிர்ந்துகொள்ளும் சூழலுக்கு இது வழிவகுக்கும்.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...