சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில், பள்ளி சீருடையில் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் மது அருந்தி விட்டு சாலையில் தள்ளாடி விழுவதும், சக மாணவர் ஒருவர் அவரைத் தோளில் அணைத்து பாதுகாப்பாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதையும் பார்த்த பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்து, அதைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்தக் காணொளி பலரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி போதையில் பள்ளிக்கு வருவதுடன் ஆசிரியர்களிடம் தகராறு செய்வது போன்ற முறையற்றச் செயல்களில் ஈடுபடும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி செய்திகள் வாயிலாக அறிகிறோம். அந்த வகையில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரின் இந்தப் போதையில் தள்ளாடும் வீடியோவும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதே அரசுப்பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் கபடி போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய விஷயம். பல்வேறு சாதனைகளைத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல அரசுப்பள்ளி மாணவ மணிகள் சாதித்து வரும் வேளையில் இதுபோன்ற ஒரு சில மாணவரின் தவறான போக்கினால் மொத்த அரசுப்பள்ளிகள் மற்றும் அதில் பயிலும் மாணவர்களுக்கு அவப்பெயர் வரக் காரணமாகி விடுகிறது என்று வேதனைப்படுகின்றனர் பெற்றோரும், ஆசிரியர்களுடன் சமூக ஆர்வலர்களும்.
இந்த விவகாரம் குறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர் என்பதால் அந்தப் பள்ளி மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுப்பதுடன் இந்தச் செய்தி மறந்துவிடும். அடுத்து வேறு ஒரு பள்ளியும் போதை மாணவரும் நம் கவனத்துக்கு வரும்வரை மட்டுமே இச்செய்தி கவனம் பெறும்.
ஆனால், இது சரியா? மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் இந்தத் தவறான பழக்கத்துக்கு என்ன அல்லது யார் காரணம்? மதுவுக்கும் போதை வஸ்துகளுக்கும் அடிமையாகும் மாணவர்களைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் வழிகள்தான் என்ன?
ஒரு வீட்டில் தந்தை குடிக்கு அடிமையாக இருந்தால் அவர் வழியில் அது தவறல்ல என்பது மகனின் மனதில் பதிந்து தானும் அவ்வழியே செல்லும் வாய்ப்பு உண்டு. ஒரு குழந்தைக்குப் பெற்றோர்தான் முதல் வழிகாட்டி என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொண்டு தனிமனித ஒழுக்கங்களைக் கற்றுத் தந்து வளர்க்க வேண்டும். அதன் பின் ஆசிரியர்கள். ஒரு மாணவன் அல்லது மாணவி தவறான வழிக்குச் செல்வது தெரிந்தால் கண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு பெற்றோர் தரவேண்டும். இன்று கண்டிக்காமல் விட்டால் நாளை அவர்களது வாழ்க்கையை வீணடித்த குற்ற உணர்வுக்கு ஆளாக நேரிடும் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.
குடிபோதை பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு பள்ளியிலும் இன்னும் அதிக கவனத்துடன் பிள்ளை களுக்குப் புரியவைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மதுவை சிறார்களுக்கு விற்பனை செய்யும் பொறுப் பற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக பள்ளிகள் உள்ள இடத்தின் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். அங்கு மதுக்கடைகள் அமைக்க அரசு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. இப்போதும் பல இடங்களில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராடுவதைப் பார்க்க முடிகிறது.
ஆகவே, பெற்றோரும் ஆசிரியரும் அரசும் மனம் வைத்தால் இது போன்ற போதை மாணவர்களைச் சீரழிவின் பிடியிலிருந்து மீட்க முடியும் என்பது தன்னார்வலர்களின் வேண்டுகோள்.