ஜனநாயகத்தையும் மிஞ்சியது ஜனவரி 26-ம் தேதி!

ஜனநாயகத்தையும் மிஞ்சியது ஜனவரி 26-ம் தேதி!

-ஜி.எஸ்.எஸ்.

குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம்?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத். அதேபோல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ஆனால் இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே வருடத்தில் ஒன்றாக நடந்து விடவில்லை.

நம்நாடு 1947 ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றது. ஆனால் அதற்கு சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் நமது முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதாவது ஜனவரி 26, 1950 அன்றுதான் குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டு, அன்றுதான் இந்திய அரசியல​மைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. அப்போதுதான் ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவரானார்.

சுதந்திரம் என்பது ஜனநாயகம் தொடர்பானது. பெரும்பான்மை மக்களின் விருப்பம் அதில் செயல்படுத்தப்படும். ஆனால் நம்முடையது ஜனநாயகக் குடியரசு. இங்கே அரசியல் அமைப்பு சட்டம்தான் மிக முக்கியம். நாட்டில் எந்தவொரு முக்கிய விஷயத்திலும்கூட மிகப்பெரும்பாலான எம்பிகளோ பெரும்பான்மையான மக்களோ சேர்ந்து ஒரு முடிவை எடுத்தால் கூட அது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றால் அதை நடைமுறைப்படுத்த முடியாது. குடியரசு என்பதன் முக்கியத்துவம் இதுதான்.

உலகின் மிக நீளமான அரசியலமைப்பு சட்டங்களில் நம் நாட்டு சட்டமும் ஒன்று. 444 பிரிவுகள் கொண்டது. இதை உருவாக்க சுமார் மூன்று வருடங்கள் ஆயின. ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் இது தொடக்கத்திலேயே உருவாக்கப்பட்டது.

இவ்வளவு நீளமான நமது அரசியலமைப்பு சட்டம் முதலில் அச்சிடப்படவில்லை. தட்டச்சு செய்யப்படவும் இல்லை. இது முழுக்க முழுக்க கைகளால் எழுதப்பட்டது. ஒவ்வொரு பக்கத்திலும் மிக அழகான கையெழுத்தில் இது எழுதப்பட்டது. சாந்திநிகேதனைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் ஒவ்வொரு பக்கத்தையும் கலைநயம் மிக்கதாக்கினார்கள். இந்த இரண்டு மொழி ஒரிஜினல் அரசியலமைப்பு சட்டங்களும் பாராளுமன்றத்தில் உள்ள நூலகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றன. ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்ட பெட்டகங்களில் இவை வைத்து பராமரிக்கப்படுகின்றன.

உலகின் தலைசிறந்த அரசியலமைப்பு சட்டங்களிலிருந்து சிலவற்றை நாமும் உள் வாங்கி இருக்கிறோம். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகள் நமது அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் உள்ளன. இவை பிரான்ஸின் அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. சோவியத் யூனியனைப் பின்பற்றி ஐந்தாண்டு திட்டங்களை நம் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தோம். ஜப்பானில் உள்ள ' சட்டத்தினால் நிறுவப்பட்ட நடைமுறை' என்பதை நமது அரசியலமைப்பு சட்டத்தில் இணைத்தோம். ஜெர்மனி பாராளுமன்றத்தில் அவசர நிலையின் போது அடிப்படை உரிமைகளையே கிடைக்க விடாமல் செய்ய முடியும். இதை நமது அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொண்டது. அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் ' மக்களாகிய நாங்கள்' என்ற வார்த்தைகள் இருக்கும். அவை நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலும் எடுத்தாளப்பட்டன.

அரசியலமைப்பு சட்டம் என்பது இந்திய அரசு மற்றும் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள், நடைமுறைகள், அதிகாரங்கள் போன்றவற்றை வரையறுக்கிறது.

ஒவ்வொரு குடியரசு தினத்திலும் டெல்லியில் மிகச் சிறப்பான முறையில் குடியரசு தின ஊர்வலம் நடைபெறும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எக்கச்சக்கமானவர்கள் அதைக் கண்டு களிப்பது வழக்கம். அன்றுதான் பரம்வீர் சக்ரா, வீர் சக்ரா போன்ற துணிவு அங்கீகாரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். போரில் இறந்தவர்களுக்கான அஞ்சலியைப் பிரதமர் செலுத்துவார்.

நம் நாட்டுக் குடியரசு தினத்தைப் போற்றுவோம்.. ஜெய் ஹிந்த்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com