ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தீபாவிடம் ஒப்படைப்பு!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தீபாவிடம் ஒப்படைப்பு!

– காயத்ரி

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு சாவி, அவரது வாரிசான தீபாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போன்றே அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமும் பரபரப்பு.. விறுவிறுப்பு அத்தியாயங்களை கொண்டதாக அமைந்து விட்டது…ஜெயலலிதா என்றாலே அவரது கம்பீரத்துடன் போயஸ் தோட்ட இல்லமும் ஞாபகத்திற்கு வரும்…இரும்பு கோட்டை போன்ற அந்த இல்லத்திற்கு செல்லாத தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்…

பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு தலைவர்களுக்கு திறந்த அந்த கதவு..சாமானிய மக்களுக்கு திறக்கப்பட்டதில்லை…அவர்களுக்கு பால்கனி தரிசனம் தான்.. ஜெயலலிதா தனது அம்மாவின் நினைவாக கட்டிய அந்த வேதா இல்லத்திற்குள்..எந்த காரணம் கொண்டும் சசிகலா புகுந்து விடக்கூடாது என்று கணக்கு போட்ட எடப்பாடி பழனிச்சாமி,  போயஸ் இல்லத்தை 2017 ம் ஆண்டு அரசுடைமையாக்கி விட்டார்…
இதற்காக அப்போது 35 லட்சம் ரூபாய் முதலில் ஒதுக்கப் பட்டது…பின்னர் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற 67 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது…வாரிசுகள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது…நகரின் மையப்பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அது! ஜெயலலிதா இருந்த வரை போயஸ் இல்லத்திற்குள் நுழையவே முடியாத அவரது அண்ணன் மகன் தீபக்கும் மகள் தீபாவும் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக்குக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
போயஸ் கார்டன் வீட்டை அரசு நினைவிடமாக அறிவிக்க முடியாது என்றும்.. வேதா இல்லத்தை ஜெயலலிதா வாரிசு தார்களான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது…இதையடுத்து அந்த இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது…
வேதா இல்லத்தில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று சசிகலா காய் நகர்த்திய பின்னணியில் இப்போது தீபக்.தீபாவிடம் சாவி..எலியும் பூனையுமான இவர்கள் கைகளில் போயஸ் தோட்ட சாவி..
இதன் மீது கண் வைத்த தீபாவுக்கும் தீபக்குக்கும் வருமான வரித்துறை வழியாக செக் வைக்கப் பட்டிருப்பது…லேட்டஸ்ட்  டுவிஸ்ட்…இன்னும் எத்தனை எத்தனை திருப்பங்களோ? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com