ஜொலிக்கும் வைரத் தகவல்கள்!

ஜொலிக்கும் வைரத் தகவல்கள்!
Published on

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க

* பூமியிலிருந்து சுமார் 160 கி.மீ ஆழத்தில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

* வைரக் கற்கள் நட்சத்திரங்களில் இருந்து உதிர்ந்தவை என்று பண்டைக் காலத்தில் கிரேக்க, ரோமானிய மக்கள் நினைத்தனர்.

* 2,400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் வைரத்தை அணியத் தொடங்கி விட்டார்கள்.

* வைரக் கற்களால் சில நோய்களை குணப்படுத்த முடியும் என்று முற்காலத்தில் மக்கள் நம்பினார்கள்.

* மன்னர்கள் போருக்குச் செல்லும்போது, வைர நகைகளை அணிந்திருந்தால் வெற்றி கிடைக்கும் என்று முன் காலத்தில் நம்பிக்கை இருந்தது.

* சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுப்பதைத் தவிர, சில சமயங்களில் ஆறுகளின் அடியில் இருந்தும் வைரங்கள் கிடைக்கின்றன.

* சில வைரங்களில் தோஷம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

* வைரக் கற்களை பாலீஷ் செய்யும்போது, மொத்த எடையில் 50 சதவிகிதம் வரை குறைந்துவிடும்.

* திருமண நிச்சயதார்த்தத்துக்கு வைர மோதிரம் அணிவிக்கும் வழக்கம் மேல் நாடுகளில் கி.பி.1477ஆம் ஆண்டு முதலே தோன்றியதாம்!
எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

————–

சிந்திக்க சில தத்துவங்கள்

l உலகத்திலே நீ இரு; ஆனால், உலகம் உன்னிடத்தில் இருக்கக் கூடாது. குடும்பத்திலே நீ இரு; ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக் கூடாது. உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால் நீ அழுந்தி விடுவாய்.

lவண்டி மேல் நீ ஏறு; வண்டி உன் மேல் ஏறக்கூடாது. கப்பல் கடலில் இருக்க வேண்டும்; கடல் கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அழுந்தி விடும்.

l யாசித்து, நெய்யும் பாலும் தயிரும் சேர்ந்த சிறந்த அன்னதை உண்பதை விட, உழைத்து உண்ணும் தண்ணீரும் சோரும் சிறந்தது.

l வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதை விட, வீரமும் புகழும் பெற்றுச் சிறிது காலம் வாழ்வது சிறந்தது.

l புலன்களை வென்றவனே வீரன். இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி. துன்பங்களைப் பொறுப்பவனே தவசி. விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான். அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது, இறந்தவனே இருந்தவன். கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவன் இறந்தவன்.

l பிறர் உன்னை வைவார்களாயின் அந்த வன்சொற்களை இன்சொற்களாகக் கருது. நீ எக்காரணத்தைக் கொண்டும், எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.

lகிடைத்தது கூழாயினும் அதனை நெய்யன்னமாகக் கருதி உணவு செய். பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு. கசப்புப் பொருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி உட்கொள். அதனால் மெய்ப்பதம் காண்பாய்.
சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்

————–

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்!

யற்பியல் துறைக்கு 1930ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் நோபல் பரிசு அளித்த விழாவின் போது வருத்தமாக இருந்தார் சர் சி வி ராமன். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயம் வருத்தமாய் இருக்கிறீர்களே' என நண்பர்கள் கேட்க, 'அனைத்து நாட்டின் தேசியக் கொடிகள் பறக்கும் இவ்விழாவில், தனக்கென்று ஒரு தேசியக் கொடி இன்றி அடிமையாய் பரிதவிக்கும் எனது தாய் நாட்டினை நினைத்தேன். என் கண்கள் கலங்குகின்றன' என்றார்.
சர் சி வி ராமன்
. அவருடைய தாய்நாட்டுப்பற்றை வியந்தனர் விஞ்ஞானிகள். 'கீதாஞ்சலி' கவிதைக்காக நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூருக்கு கல்கத்தாவில் பாராட்டுக் கூட்டம். அதில் பல பெரிய மனிதர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மண்டப வாசலில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தனர். ஒரே ஒரு கையெழுத்து மட்டுமே தமிழில். அந்தக் கையெழுத்துக்குரியவர் நோபல் பரிசு பெற்ற நம் தமிழ் நாட்டு விஞ்ஞானி சர் சி வி ராமன். அவரது மொழிப்பற்று இதிலிருந்து நன்கு விளங்குகின்றது.
.பூங்கோதை, செங்கல்பட்டு

————–

தொட்டில்

சின்ன அசைவில்
சிலிர்த்தாடும்
சின்ன தாய் மடி!
கையும்
காலும்
தூக்க ஆடும்
துணியாரம்!
கையணைப்பாய்
இதம் தந்திடும்
துணித் தொங்கல்!
கருப்பை பாதுகாப்புடன்
கதகதப்பைத் தந்திடும்
காற்றுக் குடில்!
இன்பத்தில்
உருவாகிய மழலை
இன்னலின்றி
உறங்குமிடம்!
செ.கலைவாணி, மேட்டூர் அணை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com